அருமண் தனிம சுரங்க வேலைகள் நச்சு ஆபத்துகளை விளைவிக்கும் கெடா மந்திரி புசாருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

மவெ. 62 பில்லியன் பெருமானமுள்ள அருமண் தனிம சுரங்க வேலைகளில் கெடா மாநில அரசாங்கம் இறங்கவுள்ளதாக கெடா மந்திரிபுசார் செய்திருக்கும் அறிவிப்பு அதிர்ச்சியை அளிப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

அருமண் தனிமங்கள் தாது மற்றும் கனிமங்களிலிருந்து பெறப்படுகிறது. அவை பெரும்பாலும் தோண்டியெடுக்கும் அளவுக்கு அடர்த்தியான படிவுகளில் கிடைப்பதில்லை.  அருமண் தனிமங்கள் குறிப்பிட்ட அளவு கதிர்வீச்சு கொண்டவை.  ஏனெனில் அருமண் தனிமங்களில் இயல்பாகவே அடரியம் (Uranium) மற்றும் இடியம் (Thorium) உள்ளது.

சுமார் 17 விதமான அருமண் தனிமங்கள் உள்ளன.  அவை வருமாறு: சாமரியம், ஏத்துரியம், கமுக்கியம், செரியம், பச்சிரட்டையம், புத்திரட்டியம், பகர்மீட்டிரியம், உருத்தீனியம், எரிப்பியம், கடவுளினியம், துரப்பியம், அரியம், ஒள்மையம், அருமியம், துலையம், ஏத்துரப்பியம் மற்றும் புரமியம் ஆகும்.  இதில் எந்த வகை கதிர்வீச்சு அற்ற அருமண் கனிமம் கெடாவில் உள்ளது என்று மந்திரிபுசாரால் அறிவிக்க இயலுமா?

அருமண் அகழ்தல் மற்றும் செயல்முறை மற்றெல்லா சுரங்கத் தொழில்களை விட ஆபத்தானது. ஏனெனில் இதில் கதிர்வீச்சுக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.   சரியாக நிர்வகிக்கப்படாத பட்சத்தில் மிகவும் மோசமான சுற்றுச்சூழல் விளைவுகளைக் கொண்டு வரக்கூடும். இடியம் மற்றும் அடரியத்தில் உள்ள சிறிய அளவிலான கதிர்வீச்சு நுண்கசடுகள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பவை.  இவற்றைச் சரியாகக் கையாளாத பட்சத்தில் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெருத்த கேடுகளை விளைவிக்கக்கூடும். இடியம் மற்றும் அடரியம் இரண்டுமே பல நூற்றாண்டுகளாக கதிர்வீச்சுகளாக இருப்பவை.  இவற்றின் பாதிப்புக்கு உள்ளானால் நுரையீரல், கணையம் மற்றும் வேறு விதமான புற்றுநோய் பாதிப்புகளுக்கு ஒருவர் உள்ளாகக்கூடும்.

அருமண் கனிம சுரங்கப் பணிகளால் மண்ணும் நீரும் மாசுக்குள்ளாகுகிறது.  கதிர்வீச்சுக் கழிவுகள் நீர்வாழ் சூழலில் கசிந்து நீர்வாழ் தாவரங்களினால் ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன.  இது பிறகு உயிர்களில் திரட்டப்பட்டு, உணவுச் சங்கிலியின் மூலமாக கால்நடைகள் மற்றும் அவற்றை உண்ணும் மனிதனின் உடலுக்குள் செல்கிறது.

கதிர்வீச்சுத் தாக்கத்திற்கு உள்ளாகும் ஒருவருக்குப் புற்றுநோய், சுவாச பாதிப்புகள், பல்கோளாறுகள் மற்றும் இறப்பு கூட ஏற்படலாம்.  இதில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம்.  ஏனெனில் இது குழந்தைகளின் நரம்பு வளர்ச்சியைப் பாதித்து அவர்களின் நுண்ணறிவுத் திறன் சேதம் மற்றும் நினைவாற்றல் இழப்பு வரைக்கும் கூட இட்டுச் செல்லலாம்.

அருமண் சுரங்கப் பணிகளால் விளைந்த பாதிப்புகளுக்கு சீனாவே மிக நல்ல உதாரணம்.  உலகின் 80 விழுக்காடு அருமண் கனிமங்கள் இங்கிருந்துதான் வருகின்றன. ஜியாங்சி மாகாணத்தில் மலைகளின் மீதுள்ள காரைக் குளங்கள் மற்றும் நெகிழியால் அமைக்கப்பட்ட கழிவுக் குளங்களில் நடந்துகொண்டிருக்கும் அருமண் கனிம சுரங்க வேலைகள் மிகவும் கடுமையான மண் மற்றும் நீர் மாசுபாட்டுக்கு இட்டுச் சென்றுள்ளன.

இந்த மாசுபாடுகளைச் சுத்தம் செய்யும் பணிகள் இப்பொழுது அங்கு தொடங்கியுள்ளன.  சீனாவின் தொழிற்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இந்தச் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு 38 பில்லியன் யுவான் (அமெரிக்க டாலர் 5 பில்லியன்) செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. சுற்றுச்சூழல் புணர் நிலைக்குத் திரும்ப எப்படியும் 50-லிருந்து 100 ஆண்டுகள் ஆகும் என்றும் அதற்காக அப்பகுதி வாழ் மக்கள் எதிர்நோக்கவிருக்கும் இழப்புகள் அதிகம் என்று சீன அதிகாரத் தரப்பு அறிவித்துள்ளது.

ஜியாங்சி மாகாணத்தில் அருமண் தனிமங்களைப் பிரித்தெடுக்க இரண்டு வழிமுறைகள் கையாளப்படுகின்றன.  முதல் செய்முறையில் மேல்மண் அகற்றப்பட்டு கசிவுக் குளத்திற்கு அனுப்பப்படுகிறது.  இங்கு களிமண், மண் மற்றும் கற்பாறைகளிலிருந்து வெவ்வேறு கனிமங்களைப் பிரித்தெடுக்க அமிலங்களும் இரசாயனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டாவது செய்முறையில் மலைகளில் துளைகள் இடப்பட்டு (இந்த வழிமுறையைத்தான் கெடா மந்திரி புசார் கோடிகாட்டியுள்ளார்.) பிவிசி குழாய்களும் ரப்பர் குழல்களும் பொருத்தப்பட்டு நீர் மற்றும் இரசாயனக் கலவை கொண்டு, மண்கள் பீய்ச்சியடிக்கப்படுகின்றன. இந்தக் கலவை பிறகு அருமண் தனிமங்களைப் பிரித்தெடுப்பதற்காக நேரடியாக கசிவுக் குளங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இவ்வாறான சுரங்கப் பணிகள், அளவுக்கு அதிகமான அம்மோனியா மற்றும் நைட்ரோஜன்களை அவ்விடத்தின் நிலத்தடி நீரில் விட்டுச் சென்றுள்ளதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.  காட்மியம் மற்றும் காரீயம் போன்ற வேறு மாசுபொருள்கள் சுரங்கப் பணியின்பொழுது உமிழப்படுகின்றன.  இந்த உலோகங்கள் பெரும் ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்துபவை.

அருமண்களை அகழும்பொழுது அவ்விடத்தில் உள்ள தனிமங்களில் கதிர்வீச்சுகள் ஒட்டிக்கொண்டு சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பாக மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஒருவருக்கு எலும்புப் புற்று, சருமப் புற்று மற்றும் இருதய மற்றும் சுவாசக்குழாய் கோளாறுகள் ஏற்படும் ஆபத்துகள் உருவாகின்றன என்கிறார் இவர்.

பேராக்கின் புக்கிட் மேராவில் உள்ள அருமண் சுத்திகரிப்பு ஆலை இயங்க ஆரம்பித்த 5 வருடத்திற்குள்ளாகவே அங்கு பிறப்புக் குறைபாடுகள் மற்றும் இரத்தப்புற்றுநோய் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பதிவு செய்துள்ளது.  தோறிடியம் நச்சுத்தன்மையால் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர்.  அருமண் தொழிற்துறையில் உருவான கழிவுப்பொருளான கால்சியம் போஸ்பேட்டை ஆசியன் ரேர் எர்த் என்ற இந்த நிறுவனம் உரமாக மாற்றி புக்கிட் மேரா வாழ் மக்களுக்கு விற்பனை செய்தது.  இந்த உரத்தைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட புற்களைத் தின்ற மாடுகள் இறந்து போனதாக புக்கிட் மேரா மக்கள் அப்பொழுது அறிவித்திருந்தனர்.

உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல்வாதிகள் மற்றும் ஜப்பானிய அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பால் மித்சுபிஷி கெமிக்கலில் இயங்கி வந்த அந்த தொழிற்சாலை 1992-ல் மூடப்பட்டது.  சம்பந்தப்பட்ட தொழிற்சாலை 80,000-க்கும் மேற்பட்ட எ•கு பீப்பாய்களை மலைப் பகுதிக்குக் கொண்டு செல்ல அமெரிக்க டாலர் 100 மில்லியனை செலவு செய்தது.  புக்கிட் மேராவை ஆசியாவின் ஆகப் பெரிய கதிர்வீச்சு கழிவு சுத்தம் செய்யப்பட்ட பகுதியாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இப்பொழுது அதே சரித்திரம் திரும்பும் நிலை உருவாகுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.  லீனாஸ் எட்வான்ஸ் மெட்டிரீயல் பிளாண்ட் ஆலையின் (LAMP) அருமண் சுத்திகரிப்பு ஆலை உலகிலேயே ஆகப் பெரிய அருமண் சுத்திகரிப்பு ஆலையாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.  எந்த ஒரு நிரந்தர கழிவகற்றும் வசதிகளையும் தயார் செய்யாமல் ஆபத்தான கதிர்வீச்சுகளைக் கையாளும் லீனாஸ் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அது தொடங்கப்பட்ட 2012-லிருந்து அது 451,564 டன் எடையுள்ள கதிர்வீச்சுக் கசடுகளையும், 1.2 மில்லியன் மட்டுப்படுத்தப்பட்ட கழிவுகளையும் வெளியாக்கியுள்ளது என்று பிப்ரவரி 2018 பதிவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது லீனாஸ் தொழிற்சாலைப் பகுதியில் கழிவுக் குவியல்கள் பெருகிக் கிடக்கின்றன.  மட்டுப்படுத்தப்பட்ட கழிவுகளுக்கான சேகரிப்புத் திறன் ஜூன் 2018-ல் அதன் உச்சத்தை எட்டிவிட்டது.  பாதுகாப்பான ஒரு நிலப்பரப்புக்கான சாத்தியங்கள் இது வரை தென்படவில்லை.  இது நாள் வரை, நிரந்தர கழிவகற்றும் வசதிகள் பற்றி பொதுமக்களுக்கு எந்த வித தகவலும் அளிக்கப்படவில்லை.

பாலோக் ஆற்றின் வண்டல் மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் லீனாஸ் எட்வான்ஸ் மெட்டிரீயல் பிளாண்ட் ஆலையின் இயக்கமே என்று 2018-ல் லீனாஸ் தொடர்பான செயற்குழு அறிக்கையில் (ECR) குறிப்பிடப்பட்டுள்ளது.  கதிரியக்கத் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி  (2016) லீனாஸ் எட்வான்ஸ் மெட்டிரீயல் பிளாண்ட் ஆலை இயங்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆறுகளில் U238 கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அடரியம்-238 போன்ற கதிர்வீச்சு பொருள்கள் நீரில் படிந்து ஆறின் ஆழத்தில் வண்டல்களாகக் குவியும் தன்மை பெற்றவை என்பதும் அறியப்பட்டுள்ளது. ஆறுகளில்  வாழும் உயிரினங்கள் இந்த கதிர்வீச்சுப் பொருள்களை வண்டல்களிலிருந்து ஈர்த்துக்கொள்கின்றன. நிலத்தடி நீரில் உள்ள அடர் உலோகங்களின் அளவு (நிக்கல், காரீயம், குரோமியம், பாதரசம்) அதிர்ச்சியளிப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

கதிர்வீச்சுக் கழிவுகள், அடர் உலோக நச்சுப்பரவல், கழிவு அகற்றுதல் மற்றும் கிடத்தி வைத்தல், அதன் ஆயுட்காலம் ஆகிய அருமண் சுரங்கப் பணிகள் கொண்டு வரும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை கெடாவாழ் மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை கெடா மந்திரி புசார் கருத்தில் கொள்வது அவசியமாகும்.  இது சுற்றுச்சூழலுக்கு மீளொணா பாதிப்புகளை ஏற்படுத்தும்.  காடுகள் அழிக்கப்படுதல், நீர் மூலங்கள் சிதைக்கப்படுதல், செழிப்பான நிலங்கள் தரைமட்டமாக்கப்பட்டு பாலைவனம் போன்று காட்சியளித்தல், நீரும் நிலமும் நஞ்சாகுதல் மற்றும் போது ஆரோக்கிய சீர்கேட்டுக்கும் இட்டுச் செல்லும்.  பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இழப்புகள் அதிகமாகும்.  மலேசியா இதற்கும் முன்பு எதிர்நோக்கிய நச்சு பாதிப்பு சம்பவங்களிலிருந்து மலேசியர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அருமண் தனிம சுரங்கப் பணிகளைக் கண்காணித்து மதிப்பீடு செய்தல், சரியான நிலங்களில் நச்சுக்கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தல் போன்றவற்றை மேற்கொள்ள கெடா மாநில சுற்றுச்சூழல் இலாகாவிற்கு ஆற்றல் உண்டா?

மேற்குறிப்பிடப்பட்ட ஆபத்துகளை வைத்துப் பார்க்கும்பொழுது, மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இந்த சுரங்கப்பணிகள், அருமண் தனிம உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு, அவற்றின் கழிவுகளைக் கிடத்தி வைத்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றுக்குத் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார்.

முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி
8.12.2020