இந்தியாவிலி ருந்து இறக்குமதியாகும் இரண்டு வகையான மசாலாப் பொருட்களான (எவரெஸ்ட் மற்றும் MDH) ஆகியவற்றில் புற்று நோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கலந்திருப்பதால் உடனடியாக அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம், சுகாதார அமைச்சை கேட்டுக்கொள்கிறது.
பாதிக்கப்பட்ட இரண்டு பிராண்டுகளின் மசாலாப் பொருட்கள் மலேசியாவில் பரவலாகக் கிடைக்கின்றன, குறிப்பாக இணைய தளத்தில் எளிதாக கிடக்கின்றது என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பிராண்டுகளின் மசாலாப் பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
மலேசியாவில் மசாலாப் பொருட்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சு இந்த இரண்டு வகையான மசாலாப் பொருட்களில் மட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற மசாலாப் பொருட்களிலும் சோதனைகளை நடத்த வேண்டும்.
ஏனெனில் உள்நாட்டில் சூடான கறிகளைத் தயாரிக்க மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலிருந்து மிளகாயை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக மலேசியா உள்ளது மற்றும் மலேசியாவின் மற்ற முக்கிய மசாலா இறக்குமதிகள் கொத்தமல்லி, சிறிய ஏலக்காய், மஞ்சள் மற்றும் சீரகம் ஆகும்.
பத்திரிகை கூற்றுப்படி, இங்கிலாந்தின் உணவு தரநிலைகள் நிறுவனம் இந்தியாவிலிருந்து வரும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு உள்ளிட்ட பூச்சிக்கொல்லி எச்சங்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளது என அறிவித்துள்ளது.
இரண்டு பிராண்டுகளுக்கு எதிரான மாசுபாடு குற்றச்சாட்டுகள் உலகளாவிய உணவுக் கட்டுப்பாட்டாளர்களிடையே கவலையைத் தூண்டிய பின்னர், அனைத்து இந்திய மசாலாப் பொருட்களையும் ஆய்வு செய்த முதல் நாடாக பிரிட்டன் திகழ்ந்தது.
இந்த இரண்டு பிரபலமான இந்திய மசாலா பிராண்டுகளின் இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்த சமீபத்திய நாடாக நேபாளம் மாறியுள்ளது. சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த மாதம் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் இந்த தடையை மேற்கொண்டது என்றார் முகைதீன்.
நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இரண்டு பிராண்டுகள் தொடர்பான சிக்கல்களை ஆராய்வதாகக் கூறியுள்ளன. பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துவதைத் தவிர, எத்திலீன் ஆக்சைடு மருத்துவ உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யவும், சால்மோனெல்லா மற்றும் ஈ கோலி பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களைத் தடுக்க மசாலாப் பொருட்களில் கிருமி நீக்கம் செய்யும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.
எத்திலீன் ஆக்சைடால் நமது ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவிலிருந்து வரும் இரண்டு வகையான மசாலாப் பொருட்களின் விற்பனையை உடனடியாக தடை செய்யுமாறு சுகாதார அமைச்சை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது.
அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான மசாலாப் பொருட்களிலும் எத்திலீன் ஆக்சைடு மற்றும் பிற பூச்சிக்கொல்லிகள் உள்ளதா என சோதனை நடத்த வேண்டும். இதற்கிடையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் பயனீட்டீற்கு பாதுகாப்பானது என்பதை அதிகாரிகள் உறுதிசெய்யும் வரை, பயனீட்டாளர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்த விரும்புகின்றது என முகைதீன் அப்துல் காதர் கூறினார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்