இந்த ஆண்டு மேலும் பல அடிப்படை உணவுகளின் விலைகள் உயரக்கூடும்.

பத்திரிகை செய்தி 01.01.2024

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை!

மலேசியர்கள் 2024 ம் ஆண்டில் தங்கள் சொந்த காய்கறிகளை பயிரிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

2024ம் ஆண்டின் லட்சியமாக இதை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அச்சங்கத்தின் கல்வி அதிகாரியும், இயற்கை விவசாய பயிற்றுனர்மான என்.வி சுப்பாராவ் மலேசியர்ககுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2024 உணவு விலையில் பயனீட்டாளர்களுக்கு மிகவும் சவால் மிகுந்த ஆண்டாக திகழும் என அவர் எச்சரித்தார். இதனை எதிர்கொள்வதற்கு மலேசியர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விலை ஏற்றத்தில், அரிசி, சீனி, எண்ணெய், வீட்டு சமையல் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும். காய்கறிகளின் விலை உயர்வின் சுமையை குறைக்க, புதிய ஆண்டின் தொடக்கத்தில் எந்த வகை காய்கறிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்க்க வேண்டும் என்று மலேசிய பயனீட்டாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சுப்பாராவ் நினைவு படுத்தினார்.

உலக விவசாய அமைப்பின் கணிப்புப்படி 2050 ஆம் ஆண்டளவில் உலக உணவுத் தேவை 70 சதவிகிதம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. உலக உணவுத் தேவையின் பெரும்பகுதி ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் உணவுத்தேவை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப நாட்களாக கீரைகளின் விலை அதிகரித்து வருவதால் இன்னும் ஓராண்டுக்கு விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உலகளாவிய பசியின் செங்குத்தான அதிகரிப்புக்கு காலநிலை நெருக்கடி முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

காலநிலை அதிர்ச்சிகள் உயிர்கள், பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அழிக்கின்றன என்றார் சுப்பாராவ். மேலும் தங்களுக்கு உணவளிக்கும் மக்களின் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர். உலகம் உடனடி காலநிலை நடவடிக்கையை எடுக்கத் தவறினால் பசி, கட்டுப்பாட்டை மீறும்.

உலகளாவிய உர விலைகள் உணவுப் பொருட்களின் விலையை விட வேகமாக உயர்ந்துள்ளன, இது பத்து வருட உயர்வில் உள்ளது. உக்ரைனில் நடந்த போரின் விளைவுகள், அதிக இயற்கை எரிவாயு விலைகள் உட்பட, உலகளாவிய உர உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை மேலும் சீர்குலைத்துள்ளன என்றார் அவர். விநியோகங்களைக் குறைத்தல், விலைகளை உயர்த்துதல் மற்றும் அறுவடைகளை குறைக்க அச்சுறுத்தியது ஆகியவை இதில் அடங்கும்.

அதிக உர விலைகள் தற்போதைய உணவு மலிவு நெருக்கடியை உணவு கிடைக்கும் நெருக்கடியாக மாற்றக்கூடும், மக்காச்சோளம், அரிசி, சோயாபீன் மற்றும் கோதுமை உற்பத்தி அனைத்தும் 2022 இல் வீழ்ச்சியடையும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பல மலேசிய விவசாயிகளை தொடர்பு கொண்டபோது, பல விவசாயிகள் தாங்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

உரங்களின் விலை ஏற்றம், தங்களது தோட்ட பண்ணையில் வேலை செய்ய தொழிலாளர் பற்றாக்குறை, காய்கறிகளின் விலைகளின் ஏற்றம் இறக்கம், தொடர்ந்து பெய்யும் மழை அதனால் ஏற்படும் வெள்ளம் ஆகியவற்றை தாங்கள் எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் குறைபட்டுகொண்டனர்.

இதனை கருத்தில் கொண்டு மலேசிய பயனீட்டாளர்கள் தங்கள் சொந்த காய்கறிகளை வீட்டிலேயோ அல்லது காலியாக உள்ள நிலங்களில் எளிதாக பயிர் செய்து வளர்க்குமாறு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது. பயிர் செய்யும் இந்த முறை செலவு குறைந்ததாக இருக்கும் என்றார் சுப்பாராவ்.

சமையல் கீரைகளை நடவு செய்வதற்கு பெரிய இடம் தேவையில்லை. வெண்டை, மிளகாய்,கத்திரிகாய்,மிளகாய் போன்ற பழவகைச் செடிகள் மற்றும் சாவி, கங்கோங், பாயாம் போன்ற இலைக் காய்கறிகள் மற்றும் வற்றாத தாவரங்களான புதினா, வல்லாரை, கறிவேப்பிலை, கஸ்தூரி எலுமிச்சை, மல்லி, மஞ்சல், இஞ்சி போன்றவற்றை வீட்டு முகப்பில் கூட எளிதாக வளர்க்கலாம் என்றார் அவர். அனைத்துக்கும் தேவை முயற்சி என்றார் சுப்பாராவ்.

பால் அட்டைப்பெட்டிகள், பழச்சாறு மற்றும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிற சிறிய கொள்கலன்கள் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வீட்டுப் இலை காய்கறிகள் போன்ற சிறிய வேர் அமைப்புகளைக் கொண்ட தாவரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

வெண்டை, கத்திரி, மிளகாய் போன்ற ஆழமான வேர்களைக் கொண்ட தாவரங்களுக்கு, பிஸ்கட் டின்கள், ஐந்து லிட்டர் எண்ணெய் கேன்கள் மற்றும் ஐந்து முதல் 20 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் போன்ற பொருட்களை கொள்கலன்களாகப் பயன்படுத்தலாம்.

சரியான சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் உரம் இருந்தால், சிறிய இடங்களில் கூட யார் வேண்டுமானாலும் காய்கறிகளை பயிரிட்டு அறுவடை செய்யலாம். மலேசியர்கள் தங்கள் தாவரங்களுக்கு சிறிது சூரிய ஒளி கிடைப்பதை உறுதி செய்யும் வரை, நகர்ப்புற தோட்டக்கலையை திறம்பட கையாலுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்த விரும்புகிறது என்றார் சுப்பாராவ்.

என் வி சுப்பாராவ்
கல்வி அதிகாரி, இயற்கை வேளாண்மை பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்