இந்த இக்கட்டான நோய்காலக்கட்டத்தில் மலேசியர்களை சம்சுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தல்

இந்தக் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் சம்சு குடிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் குடும்ப மற்றும் சமுதாயப் பிரச்னைகள் அதிகரித்திருக்கின்றன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு காட்டுகிறது. ஒருவர் சுதந்திரமாக இயங்குவது தடைபடும் காலக்கட்டத்தில் தங்களுடைய விரக்தியை இவ்வாறு கைக்கு எளிதில் கிடைக்கும் மலிவான மது வகைகளை அருந்தி வெளிப்படுத்துவது இப்பொழுது பெருகி வருகிறது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

சம்சு விற்பனையைத் தடை செய்யுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பல முறை அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்தும், சம்சு விற்பனை ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே போகிறது. மலேசியர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தை இந்தப் பானத்திற்குப் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கணக்கில் நிறைய சம்சுக் கடைகள் அரசாங்க அனுமதியோடு தங்களுடைய வியாபாரத்தை நிறுவ ஆரம்பித்துவிட்டன. சம்சுவின் குறைவான விலை, சிறிய பாட்டில், அளவுக்கு அதிகமான மது உள்ளடக்கம், எளிதில் கைக்கு எட்டும் நிலை ஆகியவற்றினால் சம்சு இன்று வரை பிரபலமான பானமாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களால் அருந்தப்பட்ட சம்சு இன்று எல்லா இனத்தோரிடையேயும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டோரிடையே பிரபலமாக இருந்து வருகிறது. இது இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விருப்ப பானமாகி வருகிறது. இளைஞர்கள் சம்சுவில் பலதரப்பட்ட குளிர்பானங்களைக் கலந்து அருந்தி மகிழ்வது பரவலாக நடக்கிறது.

மலேசியாவில் சம்சு அருந்துபவர்கள் வருடத்திற்கு மவெ. 20 மில்லியன் செலவு செய்வதாக பி.ப.சங்கத்தின் ஆய்வு காட்டுகிறது. இந்த சம்சு பானம் 140 மிலி-யிலிருந்து 175 மிலி பாட்டிலில் பொட்டலமாக்கப்படுகிறது. 150 மிலி பாட்டிலில் வரும் சம்சு மவெ. மவெ. 3.00-லிருந்து மவெ.5.00 வரைக்கும் விற்கப்படுகிறது. வாடிக்கையாக சம்சு அருந்துபவர்களுக்கு அதனை வாங்குவதற்குக் கடனும் கொடுக்கப்படுகிறது. சம்சுவுக்கு அடிமையான ஒருவர் ஒரு நாளைக்கு சராசரி மவெ. 9.00 செலவு செய்கிறார். இதுவே மாதத்திற்கு சராசரி மவெ. 300-ஐ எட்டும். உணவு மற்றும் இதர வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் இந்தக் காலக்கட்டத்தில் சம்சுவுக்கு செய்யும் செலவுகள் ஒருவரைக் கடனில் தள்ளுகிறது.

சந்தையில் 150-க்கும் மேற்பட்ட வணிகச் சின்னம் கொண்ட சம்சு விற்பனைக்கு உள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கடந்த கால ஆய்வுகள் காட்டுகின்றன. இவற்றில் உள்ள மதுவின் அளவு 37-லிருந்து 70 விழுக்காடு வரைக்கும் ஆகும். இவை அப்போல்லோ, 007, பாதர் கிரிஸ்மஸ் என்று வேற்றுப் பெயர்களோடு வருகின்றன. இன்னும் சில சிவாஜி, வீரபாண்டியன் மற்றும் அசோகா போன்ற இந்திய வரலாற்று வீர்களின் பெயர்களைத் தாங்கி வருகின்றன.

சம்சு உற்பத்தியாளர்கள் அது ஆரோக்கியமானது என்ற தவறான தகவல்களையும் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு வணிகச் சின்னத்தைக் கொண்ட மது உற்பத்தியாளர் அதனை அருந்துவதால் ஒருவருக்கு இரத்த சோகை, பசிமந்தம், செரிமானமின்மை ஆகியவை குணமாவதாகக் கோருகிறார். உண்மையில் எல்லா வகையான சம்சுவும் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு உலை வைப்பவை. புற்றுநோய், ஈரல் கோளாறுகள், ஈரல் அரிப்பு மற்றும் இருதய நோய்கள் யாவும் மதுவோடு தொடர்புடையவை.

சம்சு அருந்துபவர் தன்னுடைய வருமானத்தைக் குடும்பத்திற்குச் செலவழிப்பதற்குப் பதிலாக அதனைக் குடித்தே அழிக்கிறார். போகப் போகக் குடும்ப உறுப்பினர்களுக்குத் தொந்தரவாகவும் மாறிவிடுகிறார். இது குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கி அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் கொடுமை, திருமணத்தில் பிளவு, வீட்டுக்கொடுமை, தற்கொலை போன்ற இழிநிலைகளுக்கு இட்டுச் செல்கிறது. பி.ப.சங்கத்தின் ஆய்வின்பொழுது, தன்னுடைய கணவர் சம்சு வாங்குவதற்காகப் பணம் திருடியதாகவும், ஒரு முறை இரு கோழிகளைத் திருடி விற்று சம்சு வாங்கினார் என்றும் ஒரு குடும்ப மாது கூறினார். சம்சு அருந்துபவர்கள் திருடு, கொலை, கொள்ளை, வன்முறை, குண்டர் கும்பல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர்.

ஆகவே பல குடும்பங்களின் கண்ணீர்ச் சம்பவங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்ற இந்த சம்சு என்று அழைக்கப்படுகின்ற மலிவு விலை சாராயம் முடக்கப்பட வேண்டும். அதோடு சிங்கப்பூர் அரசாங்கம் போல் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த சம்சுக் கடைகள் சம்சு விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

சம்சுக் கடைகள் 5.00 மணிக்குப் பிறகு இயங்க அனுமதிக்கக்கூடாது. நீண்ட நேரத்திற்கு சம்சுக் கடைகள் திறந்திருப்பதால் குடிகாரர்கள் தங்களுடைய பெரும்பகுதி நேரத்தை அங்கேயே செலவிடுகின்றனர். சில சம்சுக் கடைகள் காலையில் 6.00 மணிக்கே திறக்கப்படுகின்றன. இது கடைக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. சில கடைகள் அங்கேயே அமர்ந்து குடிக்கும் வசதிகளைச் செய்து கொடுக்கின்றன. இது போன்ற கடைகளின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படுவதோடு அவர்கள் மீது நீதிமன்ற வழக்கு போடப்பட வேண்டும் என்று பி.ப.சங்கம் சிபாரிசு செய்கின்றது.

சில சம்சுக் கடைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பெயர்ப் பலகைகளை உபயோகிக்கின்றன. உதாரணத்திற்கு, பினாங்கு நகராண்மைக் கழகம் பாண்டிச்சேரி என்ற வார்த்தையை உபயோகிக்க பினாங்கில் உள்ள ஒரு மதுக்கடைக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாண்டிச்சேரி மதுவுக்கு வரி விதிப்பதில்லை. சாய் லெங் பாக்கில் உள்ள இன்னொரு மதுக்கடை கஸ்தூரி என்று ஒரு பெண்ணின் பெயரை வைத்திருக்கிறது. மது விற்பனையின் மூலம் பெருத்த இலாபத்தை ஈட்ட இந்தக் கடைகள் இவ்வாறான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதை அதிகாரத் தரப்பினர் கண்காணித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மொத்தத்தில் மது உபயோகம் தொடர்பான தெளிவான சட்டவிதிமுறைகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். எல்லா வகையான மது விளம்பரங்கள், மது நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஏற்று நடத்துதல், ஆதரவு கொடுத்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். 145 மிலி அளவு சிறிய பாட்டிலில் வரும் சம்சு தடை செய்யப்பட வேண்டும். எந்த அளவில் பாட்டில்கள் இருக்கவேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மதுவுக்கு விதிக்கப்படும் வரிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தில் உருவாகும் மது தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுவதற்காகப் பிரத்தியேக வரியினை மதுபான நிறுவனங்களுக்கு விதிக்க வேண்டும். மளிகைக் கடைகள் மற்றும் வீடுகளில் சம்சு விற்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு சட்ட விதிகளை இறுக்கமாக்க வேண்டும். நாடு முழுக்க மது புனர்வாழ்வுத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். இதில் ஒருவரின் மருத்துவமனை சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகான வீட்டில் அவருடைய சிகிச்சை செலவுகளும் அடங்கும்.

சம்சு விற்பனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் அதனை எதிர்காலத்தில் முழுவதுமாகத் துடைத்தொழிப்பதற்கான திட்டங்கள், எதிர்காலத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவும். தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் காலக்கட்டத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை அவசியம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி 21.12.2020

https://www.bharian.com.my/rencana/minda-pembaca/2020/12/766687/segera-haram-penjualan-samsu