பத்திரிகை செய்தி 17.11.21
பினாங்கு பெர்ரிக்கு அடுத்து கொடி மலை இரயிலும் காணாமல் போகப்போகிறது.
கொடி மலை இரயில் தொடர்ந்து நிலை நாட்டுங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.
1923 ம் ஆண்டில் அதாவது 98 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பினாங்கு கொடி மலை இரயில் சேவையை நிறுத்த வேண்டாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில அரசாங்கத்தை கேட்டுகொண்டுள்ளது.
கடந்த நவம்பர், 10 தேதி அன்று, பினாங்கு முதல்வர் சவ் கோன் இயோவ், பயணிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிரச்சனைக்குரிய பினாங்கு கொடிமலையின் இரயில் தொடர்ந்து பழுதடைந்து வருவதால் அதை நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் பி.ப.சங்கம் உட்பட பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர் என பி.ப.சங்க தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.கொடிமலை இரயில் தனித்துவம் வாய்ந்த ஒரு சின்னமாகும்.
பினாங்கு கொடி மலை ரயில் பாதை 1923ல் திறக்கப்பட்டது, அதன் பணிகள் 1920ல் தொடங்கப்பட்டது. கடைசியாக 2011ல் ரயிலின் நவீனமயமாக்கம் பூர்த்தி செய்யப்பட்டது. அதன் பிறகு முழு பயணத்தின் நேரம் வெறும் 10 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. முன்பு 15 நிமிடங்களாக இருந்த போது இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர் இரயிலில் சென்றோர். பிறகு நவீன இரயில் அறிமுகப்படுத்த்கப்பட்டவுடன் பயண நேரம் 10 நிமிடமாகியது.
இப்பொழுது இந்த மலை இரயில் சேவைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வரப்போகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பரில் பினாங்கு தனது மற்றொரு பினாங்கின் தனித்துவ சின்னமான பாரம்பரிய பெர்ரியை இழந்தது.
ஏறக்குறைய 100 ஆண்டுகளாக இயங்கி வந்த மற்றொரு தனித்துவ சின்னதை இழக்கப் போகிறோமா? என கேள்வி எழுப்பினார் முகைதீன்.
அல்லது இது உத்தேசத்திலுள்ள கேபிள் கார் திட்டத்திற்கு எடை போடும் அறிவிப்பா?
பினாங்கு கொடி மலை ரயில்பாதையை பழுதுபார்க்கட்டும் அதற்காக அதன் சேவையை தற்காலிமாக நிறுத்தி வைக்கலாம். அதற்காக அதன் கொடிமலை சேவையை மூடிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
கொடி மலையின் ரயிலின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், ரயில் தொடர்ந்து பழுதடைந்தால் அதனை பழுது பார்க்க வேணடும்.
சுற்றுலாப் பயணிகளுக்கும் கொடி மலையில் வசிப்பவர்களுக்கும் இந்த இரயில் சேவை மிக முக்கியமானது.
பினாங்குவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு பினாங்கு கொடி மலை ரயில் சேவை பல அற்புதமான நினைவுகளை உருவாக்கியுள்ளது.
பினாங்கு மலை ரயில் பாதையை நிரந்தரமாக மூட பினாங்கு மாநில அரசு முடிவெடுத்தால் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும்.
கடந்த ஆண்டு பினாங்கு பெர்ரி சேவை மூடப்பட்டபோது பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
முன்னால் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூட பெர்ரி மூடப்பபடும் என அறிவிக்கப்பட்டபோது போராட்டங்களை ஏற்பாடு செய்தார்.
அதை மூடுவது என்பது மத்திய அரசின் முடிவு என்பதால் பழி எளிதாக இருந்தது. ஆனால் பினாங்கு மலை இரயில்வே மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது மேலும் பினாங்கு கொடி மலை இரயில் பாதையை மூடுவதற்கு அரசு முடிவு செய்தால், இது பினாங்குவாசிகளின் கோபத்திற்கு ஆளாகும்.
ஆகவே இரயில் சேவை தடைபடுவதற்கான மூலத்தைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
இந்த உயர்தொழில்நுட்ப யுகத்தில், மலைப்பாதையின் உடைப்புகளை கணிசமாகக் குறைக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது என்பது நம்பமுடியாதது.
பயணிகளின் பாதுகாப்புக்காக 2011-ல் இரயில் மாற்றப்பட்டு நவீனமயமாக்கப்பட்டதால், அதை முழுவதுமாக நிறுத்துவது மற்றும் கைவிடுவது பொறுப்பற்ற செயலாகும்.
பினாங்கின் அரிய சின்னங்கள் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இரட்டைத் தரநிலைகள் இருக்கக்கூடாது என முகைதீன் அப்துல் காதர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்