இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு கன்னியப்பனின் உன்னத வேளாண் பணி

ஜோகூர், கூலாயைச் சேர்ந்த கன்னியப்பன் ஒரு காலத்தில் செம்பனைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். தன்னுடைய வாழ்நாளில்
25 வருடங்களை பல விதமான பூச்சிக்கொல்லிகளோடும் களைக்கொல்லிகளோடும் கழித்தவர். ஆகையால் அவருக்கு எந்தப் பயிருக்கு என்ன பூச்சிக்கொல்லி பயன்படுத்துவார்கள், அது எவ்வளவு வீரியம் வாய்ந்தது, எந்த அளவுக்கு ஆபத்துக்களைக் கொண்டு வரும் என்பதெல்லாம் அத்துப்படி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதன் செயலாக்கப் பிரதிநிதியாகத் தொண்டு புரிந்தவர் கன்னியப்பன். இவருக்கு பி.ப.சங்கம் தமிழ்நாட்டில்
ஏற்பாடு செய்திருந்த விவசாயப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு 2005ல் கிட்டியது.

“பூச்சிக்கொல்லிகள் ஆபத்தானவை, களைக்கொல்லிகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பது எல்லாம் என்னவோ சரிதான். ஆனால் அவற்றுக்கு பாதுகாப்பான மாற்று வழி உள்ளது என்பதையே நான் நம்ப மறுத்த காலம் அது,” என்று தான் இயற்கை விவசாயத்திற்கு மாறிய கதையை ஆரம்பித்தார் கன்னியப்பன்.

கன்னியப்பனுக்கு கற்ற வித்தையைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு முனைப்பு இயல்பாகவே இருந்தது. கற்றவற்றை மறந்துவிடாமல் இருக்க உடனேயே களத்தில் இறங்கினார். தமிழ்நாட்டில் கற்றவற்றை சொந்தத் தோட்டத்திலேயே பரீட்சித்துப் பார்த்த அவருக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. பல விதமான பயிர் ஊக்கிகள், இயற்கையான பூச்சி விரட்டிகள், மண் புழு உரம் ஆகியவற்றை வெற்றிகரமாக செய்ததோடு மட்டுமல்லாமல் அவை பயிர் பாதுகாப்புப் பொருளாக மட்டும் செயல்படாமல் அதிக விளைச்சலைத் தந்தபோது அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

அன்று ஆரம்பித்த கன்னியப்பனுடைய இயற்கை விவசாயப் பயணம் இன்றளவில் அவரோடு நில்லாமல் எல்லாத் தரப்பினருக்கும் சென்று சேர்ந்து, கிளை விரித்து, மணம் பரப்பி நிற்கிறது.

அவர் பயிர் செய்து வந்த எலுமிச்சை வழக்கத்திற்கு மாறாக இரு மடங்கு பெரிதாகவும் அதிக எடையிலும் இருந்தது. இது சந்தையில் எலுமிச்சையின் விலையை உயர்த்தியது. இதற்கு முன்பு தோட்டத்தில் தொழிலாளர் சங்கத்தை வழிநடத்திச் சென்ற அனுபவம், அதனை இயற்கை விவசாய கருத்துக்களை வழி நடத்திச் செல்வதிலும் உதவியது. வருமானத்திற்காக கன்னியப்பன் இயற்கை பயிர் ஊக்கிகள், பூச்சி விரட்டிகள், மண்புழு உரம் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.

எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க பாதுகாப்பான உணவு அவசியம். அதற்கு ஒரே வழி நஞ்சற்ற இயற்கை விவசாயமே. இந்த உன்னத கருத்துக்களைப் பயனீட்டாளர்களிடையே சென்று சேர்க்கும் ஒரு பெரிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்த கன்னியப்பன் அதற்கான பணிகளிலும் தீவிரமுடன் இறங்கியுள்ளார். விவசாயிகள், விவசாய அமைப்புக்கள், தனியார் அமைப்புக்கள், சங்கங்கள், கழகங்கள், தனித்து வாழும் தாய்மார்கள், விவசாய இலாகா அதிகாரிகள், பூர்வீகக் குடிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லாத் தரப்பினருக்கும் அவர்களுடைய தேவைக்கு ஏற்ப இயற்கை விவசாய கருத்துக்களைப் பரப்பிக்கொண்டும், இயற்கை விவசாய செயல்முறைகளை கற்பித்துக்கொண்டும் வருகிறார்.

விவசாயம் என்ற பெயரில் இரசாயனங்களில் ஊறிக்கொண்டிருக்கும் விவசாயிகளை விடாப்பிடியாக பிடித்து இழுத்து இயற்கை விவசாயியாக மாற்றி வருகிறார். விவசாய இலாகாவின் அதிகாரிகளுக்கு மண்புழு மனை கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவற்றை நிர்மாணிப்பதற்கும் உதவி செய்திருக்கிறார். கன்னியப்பன் தயாரித்த மண்புழு எருவை பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சித் திட்டத்தின் பகுதியாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண் புழுக்களை வெவ்வேறு விதமான மக்கிப்போன பொருட்களில் விட்டு, எது சிறந்த மண் புழு எருவை தயாரிக்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவுக்குப் பிறகு, கரும்புச் சக்கைகளே சிறந்த மண் புழு எருவைத் தருகின்றன என்ற உண்மையை உணர்ந்தார். இவரின் திறமையை உணர்ந்த விவசாய இலாகாவின் அதிகாரிகள், இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற முனைப்போடு வரும் விவசாயிகளை கன்னியப்பனின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுவரைக்கும் மல்லிகை விவசாயி, வெற்றிலை பயிரிடுவோர், டிரேகன் பழம் (dragon fruit) பயிரிடுவோரை தங்கள் தோட்டங்களிலிருந்து நச்சு இரசாயனங்களை முற்றிலும் அகற்றுவதற்கு வழி காட்டியுள்ளார். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இயற்கை விவசாய முன்னெடுப்புப் பணிகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறார். கன்னியப்பனின் 3 ஏக்கர் செம்பனைத் தோட்டத்தில் ஊடுபயிராக மங்கூஸ்தின் நடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் யாராவது இப்படிச் செய்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. மலேசியாவில் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லியற்ற செம்பனைத் தோட்டம் என்பது இதுவரைக்கும் கேள்விப்பட்டிராத ஒன்று. ஆனால் அப்படிச் செய்ய முடியும் என்பதற்கு கன்னியப்பன் ஒரு நல்ல உதாரணம். நஞ்சற்ற விவசாயத்தை மக்களிடையே பரப்பி வருவது ஓர.ர்உன்னதப் பணி. ஆபத்தான இரசாயனங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதும் தனக்கு ஆத்ம திருப்தியை அளிப்பதாக கன்னியப்பன் கூறுகிறார்.

CLICK CAP FACEBOOK : KANIAPPAN THIRUVANKODAN