இருப்பது ஒரு பூமியே அதனை காப்பாற்றுவோம் சுற்றுச்சூழல்வாதி சுப்பாராவ் அறைகூவல்

பத்திரிகை செய்தி. 4.5.22

இன்று ஜூன் 4ம் தேதி கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் “நமக்கிருப்பது ஒரு பூமியே” என்பதாகும்.

அந்த வகையில் இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவரும் நாம் வாழும் இந்த பூமியை தூய்மைக்கேடு படுத்தாமல் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக விட்டுவைத்து செல்வோம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரியும் சுற்றுச்சூழல் வாதியுமான என் வி சுப்பாராவ் அறைகூவல் விடுத்தார்.

மனிதன் சுற்றுச்சூழலை மாசு படுத்தி, தன் அழிவுக்குத் தானே அடித்தளம் இட்டு வருகிறான்.

எதிர்கால சந்ததியினருக்குத் தூய்மையான பூமியை விட்டுச் செல்ல வேண்டுமானால், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும், மற்ற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும், மாசுப்படுத்துதல் குறைக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் கூறினார்.

இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தின்போது இன்னும் நிறைய மரங்களை நட்டு அடுத்த தலைமுறைக்காக நமது பூமியைப் பசுமையாக்குவோம் என்று உறுதி பூணுவோம் என ஒவ்வொரு வரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கிறது.

1972ம் ஆண்டு சுவீடனில்  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக மாநாட்டில் உலகச் சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்பாடு என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது.

அதன் முடிவில் ஜுன் 5ஆம் தேதியை ’உலக சுற்றுச் சூழல்’ தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயற்படுகிறது.

நாம் வாழும் இந்த பூமியையும் ,அதன் இயற்கை வளங்களையும், பல்லுயிர்களையும் பாதுகாத்தல் , தொழில் வளர்ச்சி, போக்குவரத்து சாதனங்கள் , நாகரீக வாழ்வு போன்ற காரணிகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைக் களைதல், தூய்மையைப் பேணுதல், சுற்றுச்சூழலைக் காத்தல் போன்றவை இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் நோக்கமாகும் என்றார் சுப்பாராவ்.

அழிந்து போகக் கூடிய நிலையில் இருக்கும் இயற்கை வளங்களை மீட்டெடுக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாடு, விலங்குகள் தாவரங்களைப் பாதுகாத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்
சுற்றுப்புறசூழலைப் பேணுவோம் !எ திர் கால சந்ததியினருக்கு அழகான பூமியை பரிசளிப்போம் என்றார் அவர்.

ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.

உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்… விலங்குகளும் பறவைகளும் கூட வாழ்கின்றன. அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை! ஏனெனில், மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!

நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்முறையானதொருகள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர்.

உதாரணமாக மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றால் மலையையே அவர்கள் கடவுளாகத்தான் பார்த்தார்கள். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றால் கடலை தேவதையாக வழிபட்டனர்.

நம்மைச் சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.

நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி.

இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான்.

இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது. மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது.

இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.

பொதுவாக நாம் மகிழ்வுந்து, இருசக்கர வாகனம் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 100 பேர் 100 வாகனங்களில் செல்வதற்கு பதிலாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும்.

செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். எனவே, படித்துவிட்டு செய்தித்தாளைக் கீழே வீசவேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது.

எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலைக் காப்பதற்குத் துணைநிற்கும்.
மறுசுழற்சி, மறு பயன்பாடு என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. காடுகளை அழிப்பதில் பேப்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே, பேப்பர்களைப் பயன்படுத்தும்போது நிதானமாகச் செயல்படுவது நல்லது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன எனப் பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்.

தவிர்க்க வேண்டியதென்று பார்த்தால், அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது. அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது என சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.

என் வி சுப்பாராவ்
கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

“சுற்றுச்சூழலைக் காப்பது என்பது மரங்களின் உதவியில்லாமல் நடவாது. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் மரங்கள் இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது.”

“நமது நுரையீரலில் பாதி மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது”