பத்திரிகைச் செய்தி. 08.08.2024
உடல் பருமன் மற்றும் அது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஆரோக்கியமற்ற உணவுகள் மீது வரிகளை அமல்படுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சு இது பற்றி தீவிரமாக சீர்தூக்கி பார்க்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
தேசிய உடல்நலம் மற்றும் நோயுற்ற ஆய்வு 2023 ன் படி, மலேசியர்கள் அதிக எடை மற்றும் பருமனான நபர்களின் அதிகரிப்புடன் தொற்றாத நோய்களின் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு முக்கிய கவலை என்னவென்றால், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் தயாரிப்புகளின் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல தொற்றா நோய்களின் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பதாகும்.
இதற்கு காரணம் மலேசியர்கள் அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால்தான் என்றார் முகைதீன். பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது அதன் இயற்கையான நிலையில் இருந்து மாற்றப்பட்ட எந்த உணவையும் குறிக்கும். இது வெறுமனே வெட்டப்பட்ட, கழுவப்பட்ட, சூடுபடுத்தப்பட்ட, உறைந்த, உலர்த்தப்பட்டபோன்ற உணவுகளை உள்ளடக்கியதாகும்.
இந்த அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக ஆற்றல், சர்க்கரை, சோடியம் என்ற உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன என்றார் அவர்.
கடந்த சில தசாப்தங்களாக, முழு அல்லது குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதிலிருந்து அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தி மற்றும் வசதியான உணவுகளுக்கான அதிக தேவைக்கு வழிவகுக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பலர் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மாறியுள்ளனர்.
மலேசியாவில் மிகவும் பிரபலமான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் திடீர் மீ வகைகளும் அடங்கும். இதற்கு காரணம் அவை மலிவானவை, பல்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றது. மேலும் இவற்றை சில நிமிடங்களில் சமைத்துவிடலாம். உலக உடனடி நூடுல்ஸ் சங்கத்தின் கூற்றுப்படி, மலேசியா 2023 ம் ஆண்டில் உலகளாவிய உடனடி நூடுல்ஸ் பயனீட்டியலில் 13 வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியர்கள் 1,640 மில்லியன் முறை அளவு சாப்பிட்டுள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு, உப்பு, சர்க்கரை அதிகம் இருப்பதால், இந்த உணவுகள் மீது வரிகளை அமல்படுத்துவது, இந்த உணவுகளின் விற்பனை, கொள்முதல் மற்றும் பயனீடு ஆகியவற்றைக் குறைக்கலாம் என்றார் முகைதீன்.
வரி விதிக்கப்பட்டால் உடல் பருமன் மற்றும் உணவு தொடர்பான பிற உடல்நலப் பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் ஆரோக்கியமான உணவுகளுக்கு உதவி மானியங்களை வழங்கலாம். இன்றுவரை, 16 நாடுகள் இத்தகைய வரிகளை அமல்படுத்தியுள்ளன.
மெக்ஸிகோவில், இனிப்புகள், சாக்லேட்டுகள், சர்க்கரை தானியங்கள், மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற, ஆற்றல் நிறைந்த உணவுகள் மீது 8% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சூழ்நிலையில், அனைத்து வகையான ஆரோக்கியமற்ற உணவுகள் மீதும் வரிகளை அமல்படுத்த வேண்டும். ஆரோகியமான உணவுகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய நீண்ட கால திட்டத்தை உருவாக்கும்படி அரசாங்கத்தை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமென்றால் இனிப்பு பானங்கள் மற்றும் கலப்பு பானங்கள் தவிர, அதிக சீனி உள்ள உணவுகள் அனைத்திற்கும் சீனி வரியை ஏற்படுத்த வேண்டும்.
உடனடி நூடுல்ஸ், தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்கள் போன்ற தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் வரியை அறிமுகப்படுத்த வேண்டும். பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதை உறுதிப்படுத்த, உணவு லேபலில் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவது பொதுவாக புத்திசாலித்தனம் அல்ல. இதை அதிகமாக உட்கொள்வது எதிர்காலத்தில் அதிக எடை, உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவது குறித்து ஒரு பயனீட்டாளருக்கு தெரிவிக்க கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும்.
இரசாயனமற்ற நகர்ப்புற விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு சத்தான உணவு பழக்கத்தை மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். அதிக அளவு கலோரிகள், கொழுப்பு, சீனி மற்றும் உப்பு உள்ள உணவுகளை பயனீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமலிருக்க பெற்றோர்கள் அகிக கவனமுடன் இருக்க வேண்டும் என முகைதீன் அப்துல் காதர் கேட்டுகொண்டார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்