பத்திரிகை செய்தி. 5.1.2022
அண்மையில் கிளாந்தான் மாநிலத்தில் ஒரு சிறுமி, மடித்து விற்கப்பட்ட உணவை வாங்கி அதன் பேக்கட்டை பிரித்த போது, அந்த நெகிழி பையை மடிக்க பயன் படுத்தப்பட்ட ஆணி உணவோடு கலந்துவிடவே, அச்சிறுமியும் அதை உணராது உணவோடு அந்த ஆணியையும் விழுங்கிவிட்டார்.
அதன் பிறகு மருத்துவ அறுவை சிகிச்சைக்கு பிறகு மடிக்க பயன்படுத்தப்பட்ட ஆணி அவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.
பெரும்பாலான உணவை தயாரிப்பவர்கள், தாங்கள் தயாரித்த உணவை நெகிழி பைகளில் அடைத்து, அதன் மேற்பகுதியில், மிகச் சிறிய ஆணி அல்லது, ஸ்டேப்பலர் பின், ஆகியவற்றின் மூலமாக விற்கின்றார்கள் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு மற்றும் கல்வி பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.
முன்பு வாழை இலையில் உணவை மடித்து மர குச்சிகளை பயன்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது கூர்மையான பின்களை பயன்படுத்துகின்றார்கள் என்றார் சுப்பாராவ்.
கடந்த 2019லிருந்து 2021 வரையில் சுகாதார அமைச்சின் உணவு,பாதுகாப்பு மற்றும் தர பிரிவு நடத்திய சோதனையில், 19 உணவு மாதிரிகளில் கற்கள், நெகிழி, தலைமுடி மற்றும் பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவுச் சட்டம் 13ன் கீழ், ஒருவரின் சுகாதாரத்திற்க்கு கெடுதல் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது வேறு பொருள் இருக்குமாயின், உணவு விற்றவருக்கு 100,000 அபராதம் அல்லது 10 ஆண்டு சிறை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
ஆகவே பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் உணவு பேக்கட்டுகள் எதனை வைத்து அடைத்து விற்கின்றார்கள் என்பதை பார்த்து வாங்கும்படி சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.
பெரியவர்கள் நிதானமாக உணவு அமைக்கப்பட்ட நெகிழி பைகளை திறப்பார்கள். ஆனால் குழந்தைகள் அவசர அவசரமாக திறப்பார்கள். ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது பற்றி தெரிவிக்க வேண்டும்.
உணவு தயாரிப்பவர்கள் அல்லது அவற்றை அடைத்து விற்பவர்கள் வாங்குபவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
பயனீட்டாளர்கள் பணம் கொடுத்து உணவு வாங்குகின்றனர். அவர்களுக்கும் பாதுகாப்பான உணவு கொடுக்கப்பட வேண்டும். இது பயனீட்டாளர்களின் உரிமையாகும்.
தாங்கள் வாங்கும் உணவு பைகள் இதுபோன்ற ஆணி அல்லது கூர்மையான பொருட்களால் அடைக்கப்பட்டு விற்கப்பட்டால் சுகாதார இலாகாவில் புகார் செய்யும்படி சுப்பாராவ் ஆலோசனை கூறினார். அடைக்க பயன்படுத்தப்படும் பொருள் அபாயகரமான தாக இருந்தால் அதனை வாங்காமல் புகார் செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
என்.வி சுப்பாராவ்
கல்வி/ஆய்வுப் பிரிவு அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்