உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் நினைப்பது போல் காகிதக் கோப்பைகள் சூழல் சிநேகமானவை அல்ல!

ஒரு முறை பயன்படுத்தி வீசும் காகிதக் கோப்பைகள் இக்காலகட்டத்தின் பரந்த வாழ்க்கை முறையாகிவிட்டது. ஒரு முறை பயன்படுத்தி வீசும் நெகிழிக் கோப்பையை விட இவை சூழல் சிநேகமானவை என்பதால் பெரும்பாலான பான நிறுவனங்களின் தேர்வாக இந்தக் காகிதக் கோப்பைகள் திகழ்கின்றன. காகிதக் கோப்பைகள் கனமில்லாமலும், எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருப்பதோடு அவை நெகிழிக் கோப்பையை விட குறைவான சூட்டைக் கடத்துவதால், சூடான பானங்களை எடுத்துச் செல்ல பலர் இதனை விரும்புகின்றனர்.

காகிதக் கோப்பைகளை உற்பத்தி செய்வதற்குக் குறைந்த செலவே ஆகும். அதன் விலையும் குறைவு. எல்லா ‘நிலை பயனீட்டாளர்களுக்கும் அது பொருத்தமானதும் கூட. இக்காரணங்களினால் நிறுவனங்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தேர்வாகக் காகிதக் கோப்பை இருக்கின்றது. ஆனால், இந்தக் காகிதக் கோப்பைகள் உள்பகுதியில்  நெகிழி (போலிஎட்டிலின்) பூச்சும் சில சமயங்களில் கோப்போலிமர் பூச்சும் சேர்க்கப்பட்டிருப்பதைப் பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சுடுநீரில் (85-90°C). நனைக்கப்படும் காகிதக் கோப்பைகள் எந்த அளவுக்கு சிதைவடைகின்றன என்பதனைக் கண்டறிய இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கராக்பூர் தொழில்நுட்ப கழகம்  ஆய்வு மேற்கொண்டது.  காகிதக் குவளையின் உள்பூச்சிலிருந்து புளோரைட், குளோரைட், சல்பேட், நைட்ரேட் போன்ற அயனிகள், நுண்ணெகிழித் துகள்கள் மற்றும் நச்சு கன உலோகங்கள் வெளிப்படுவதாக இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

100 மில்லி தண்ணீரில் தோராயமாக 25,000 மைக்ரான் அளவிலான நுண்ணெகிழித் துகள்களை, ஃப்ளோரசன்ஸ் நுண்ணோக்கியின் மூலம் 15 நிமிடங்களுக்குள் கண்டறிய முடிந்தது. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் ஸ்கேன் செய்த பொழுது ஒரு மில்லிக்கு 100 மில்லியன் துணை-மைக்ரான் துகள்கள் கண்டறியப்பட்டன. நீர் படுவதன் மூலம் கார்பன், ஹைட்ரோஜன் மற்றும் நைட்ரோஜன் அளவு குறைவதாக அடிப்படைப் பகுப்பாய்வு காட்டுகிறது. தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்கள் மூலம் நுண்ணெகிழிகள், அயனிகள் மற்றும் கன உலோகங்களை உட்கொள்வதால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

நுண்ணெகிழிகள் மற்றும் அது தொடர்பான ஆபத்தான மாசுபொருள்கள் நீரிழிவு, நாளமில்லா சுரப்பிகள் சீர்குலைதல், இருதயக் கோளாறுகள், நுரையீரல் நோய்கள், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க பாதிப்புகளோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. (Prata et al., 2020; Vethaak and Legler, 2021).

காகிதக் கோப்பையில் உள்ள நெகிழிப் பூச்சுகளும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் வழி நாம் நுண்ணெகிழிகளை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல், காகிதக் கோப்பைகள் சுற்றுச்சூழலில் நெகிழிகளை விட்டுச் செல்கின்றன.  நெகிழிப் பூச்சு உள்ள கோப்பைகளைப் பெரும்பாலான மறுசுழற்சி நிலையங்கள் சுத்திகரிக்க முடியாது. இதனால், சுமார் 99.75% காபிக் கோப்பைகள் மறுசுழற்சி செய்ய முடியாதவை. சாதாரண காகிதங்களை மக்க வைக்கலாம். ஆனால், இந்தக் கோப்பைகளில் உள்ள நெகிழிப் பூச்சுகளின் காரணமாக அவற்றை மக்க வைக்க முடியாது.  அப்படி மக்க வைக்க வைக்கும்பொழுது அதிலிருந்து உருவாகும் உரம் நுண்ணெகிழிகளாலும் நச்சு இரசாயனங்களாலும் மாசுக்கு உள்ளாகிறது.

காகிதக் கோப்பைகளுக்கான தேவை அதிகரித்துள்ள காரணத்தால் அதற்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. காகிதக் கோப்பைகளிலிருந்து நீர் வெளியாகாமல் இருக்கவும் தாங்கும் திறனை அதிகரிக்கவும் அதில் இரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.  இந்த இரசாயனங்கள் சூழலில் கசிந்து வனவிலங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.

நெகிழிக் கோப்பைகளை ஒதுக்கிவிட்டு காகிதக் கோப்பைகளுக்கு மாறுவதால், எதையும் அதிகமாகப் பயன்படுத்தும் பயனீட்டாளர் கலாச்சாரம் அழிந்துவிடாது. ஒரு முறை பயன்படுத்தி வீசும் பொருள்களை நாம் குறைத்தே ஆக வேண்டும். காகிதக் கோப்பைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க பல வழிகள் உண்டு.  பயனீட்டாளர்கள் தங்கள் சொந்தக் கோப்பை மற்றும் களன்களில் பானங்களையும் வாங்கிச் செல்ல வணிகர்கள் ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் சொந்தமாகக் கொண்டு வருபவர்களுக்கு கழிவுத் தொகையும் வழங்க வேண்டும்.

மறுபயனீடு செய்ய முடிந்த கோப்பைகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதை விட ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் கோப்பைகளுக்குக் கட்டணம் விதிப்பது இன்னும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படிக் கட்டணம் விதிக்கும் பொழுது மறுமுறை பயன்படுத்தும் கோப்பைகளின் பயன்பாடு 3.4% அதிகரித்துள்ளதாக கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு காட்டுகிறது.

 

தங்கள் அன்றாட தேநீரையும் காபியையும் பயனீட்டாளர்கள் மறுபயனீட்டுக் கோப்பைகளில் சந்தோஷமாக அருந்திவிட்டுப் போகலாம். நம் ஆரோக்கியம் மற்றும் இப்புவியின் நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காகிதத் கோப்பைகளைப் புறந்தள்ள வேண்டும். நீங்கள்  ஒவ்வொரு முறை காகிதக் கோப்பைகளில் பானங்களை உறிஞ்சும் பொழுது அவை சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தி ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும். ஆகையால் பயனீட்டாளர்கள் மறுபயனீட்டுக் கோப்பை மற்றும் பாத்திரங்களை எப்பொழுதும் தங்களுடன் வைத்திருந்து அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்புகள்:

Ved Prakash Ranjan, Anuja Joseph, Sudha Goel. Microplastics and other harmful substances released from disposable paper cups into hot water. Journal of Hazardous Materials, Volume 404, Part B, 2021, 124118, ISSN 0304-3894. https://doi.org/10.1016/j.jhazmat.2020.124118

Anuja Joseph, Naseeba Parveen, Ved Prakash Ranjan, Sudha Goel. Drinking hot beverages from paper cups: Lifetime intake of microplastics. Chemosphere, Volume 317, 2023, 137844, ISSN 0045-6535. https://doi.org/10.1016/j.chemosphere.2023.137844

Poortinga W, Whitaker L. Promoting the Use of Reusable Coffee Cups through Environmental Messaging, the Provision of Alternatives and Financial Incentives. Sustainability. 2018; 10(3):873. https://doi.org/10.3390/su10030873