பத்திரிகை செய்தி. 22.2.24
அழகு சாதனங்களின் தயாரிப்புகளில் உள்ள எண்டோகிரைன் என்னும் சீர்குலைக்கும் இரசாயனங்களை ஒழுங்குபடுத்தவும், நாட்டில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை சீரமைப்பு செய்யும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த இரசாயனங்கள் ஆண்மையின்மையை ஏற்டுத்தக்கூடிய வல்லமை பெற்றுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
தற்போது அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாடுகள்1984 மற்றும் ஒப்பனை உத்தரவு ஆகியவற்றின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்த அழகுசாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்தினால், ஆண்களுக்கு விந்தின் வீரீய சக்தி குறைந்துவிடும் என ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
இதனால் அவர்கள் தந்தை ஆகக் கூடிய தகுதியை இழந்துவிடுவர் என்றார் அவர்.
குழந்தைகளுக்கான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் 32 மாதிரிகளில் நடத்தப்பட்ட சமீபத்திய சோதனைகளில், சோதனை செய்யப்பட்ட சில மாதிரிகளில் எண்டோகிரைன் சீர்குலைக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
கொரியா குடியரசு நாட்டில் உள்ள ஆய்வு மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளபட்டது. கை கழுவுதல், உடலில் பூசும் சவுக்காரம், டியோடரண்ட் பற்பசைகள், வாய்கொப்பளிப்பான், மற்றும் குழந்தை துடைப்பான்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 32 மாதிரிகள், நாளமில்லா சுரப்பியை சீர்குலைக்கும் ரசாயனமான பராபென் அளவுக்காக சோதிக்கப்பட்டன.
32 தயாரிப்புகளில், 3 மூலப்பொருள் லேபல் இல்லாமல் இருந்தன. மற்ற 28 மாதிரிகளில், 15 சாம்பிள்களின் தவறான லேபிள் இருப்பது கண்டறியப்பட்டது.
32 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 18 ல் மீதைல் பாரபென் இருப்பது கண்டறியப்பட்டது; 5 ல் எத்தில் பாராபென்; 10ல் புரோபில் பராபென்; 1ல் ஐசோபியூட்டில் பாரபென்; மற்றும் 1ல் பீனைல் பாரபென் இருந்தன.
உடலை கழுவும் ஒரு மாதிரியில் அதிக அளவு மெத்தில், எத்தில் மற்றும் ப்ரோபில் பாரபென் இருப்பது கண்டறியப்பட்டது. 2015 முதல் ஆசியான் அழகுசாதனக் குழுவால் தடைசெய்யப்பட்ட ஐசோபியூட்டில் மற்றும் ஃபீனைல் பாரபென் ஆகியவை இதில் இருப்பது கண்டறியப்பட்டது.
குழந்தைகளுக்கான துடைப்பான்களின் 4 மாதிரிகளில் ப்ரோபில் பாரபென் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் குழந்தைகளுக்கான பற்பசை மாதிரியில் பியூட்டில் பாரபென் மற்றும் ப்ரோபில் பாரபென் இருப்பது கண்டறியப்பட்டது.
அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான சட்டங்கள் இருந்தும் அமலாக்கப் பற்றாக்குறை இருப்பதை முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. நாட்டில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களில் உள்ள இரசாயனங்களின் அளவு மற்றும் வகைகள் பற்றி மலேசிய பயனீட்டாளர்கள் அறிந்திருக்கவில்லை.
சந்தைக் கணக்கெடுப்பிலிருந்து குழந்தைகளுக்கான தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் பிரபலமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மலேசியாவில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் பாரபென்கள் இருப்பது மிகவும் கவலைக்குரியது.
ஏனெனில் இவை உடலின் நாளமில்லா அமைப்பில் உள்ள ஹார்மோன்களைப் பிரதிபலிக்கும், தடுக்கும் மற்றும் தலையிடும் திறன் கொண்ட இரசாயனங்களாகும். ஆகவே மக்களை, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களைப் பாதுகாக்க விரிவான ஒழுங்குமுறை நடவடிக்கை, பொது விழிப்புணர்வு தேவை.
தயாரிப்புகளில் உள்ள எண்டோகிரைன் சீர்குலைக்கும் இரசாயனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். குழந்தைகளுக்கான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்