பத்திரிகை செய்தி. 19.5.24
மலேசியாவில் பூச்சிக்கொல்லிகளின் பரவலான பயன்பாடு காரணமாக தேனீக்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காடழிப்பும் இதற்கு காரணம். தேனீ பூமியில் இருந்து மறைந்து விட்டால், மனிதன் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியாது.
தீபகற்ப மலேசியாவில் பல பகுதிகளில் தேனீ கூட்டை கண்டுபிடிக்க முடியவதில்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தரும் தகவலை தெரிவித்துள்ளது.
பல பாரம்பரிய தேனீ வளர்ப்பாளர்கள் மலேசியாவில் தேனீக்களின் காலனிகள் குறைந்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அச்சங்கத்தின் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
தேனீக்கள் உயிர்வாழத் தேவையான உணவு ஆதாரங்களை இல்லாதிருப்பதே இதற்குக் காரணம் என்றார் அவர். திறமையான அல்லது சுறுசுறுப்பான வேலை செய்யும் என்று நாம் கருதும் தேனீக்கள் படிப்படியாக அழிந்து வருவது வருத்தமான உண்மை.
பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை தேனீக்கள் அழிந்து வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மே 20ம் தேதி கொண்டாடப்படும் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு பேராக் பெங்காலான் உலு, குரோ தமிழ் பள்ளியில் நடைபெற்ற தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுப்பாராவ் இத்தகவலை தெரிவித்தார்.
மற்றொரு காரணம், நமது நிலம் பயிரிடும் விதம், இது மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த வாழ்விடங்களுக்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த கிரகத்தில் உள்ள அனைத்து தேனீக்களும் அழிக்கப்பட்டால், மனிதன் வாழ இன்னும் 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்காது என்று கூறப்படுகிறது.
ஏனெனில் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை இல்லாமல், பழங்களை உற்பத்தி செய்ய முடியாது. உலகின் 80 சதவீத உணவுப் பொருட்களுக்கு தேனீக்கள் காரணமாக இருப்பதால் அவற்றின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற முடியாது.
உலகின் 90% ஊட்டச்சத்தை வழங்கும் மனிதர்கள் உட்கொள்ளும் முதல் 100 பயிர்களில் எழுபது தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகிறது. தேனீக்கள் இப்போது “அழிந்துவரும் உயிரினங்கள்” பட்டியலில் உள்ளன. அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகள், தாவரக் கொல்லிகள், அளவுக்கு மீறிய சத்தம் தேனீக்களை கொன்று வருகிறது அல்லது விரட்டி விடுகின்றது. மேலும் தேனீக்களின் அழிவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உணவு சேகரிக்க செல்லும் தொழிலாளி தேனீக்கள் கூட்டம் கூட்டமாக காணாமல் போவதே இந்த தேனீ பேரழிவிற்கு காரணம். வேலைக்கார தேனீக்கள் இப்படி தொலைந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களில் உள்ள ரசாயனங்கள் தேனீக்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து அவற்றின் நினைவாற்றலை மழுங்கடிப்பதே முக்கிய காரணம்.
இதனால், தன் சொந்த கூட்டுக்கு திரும்பும் வழி தெரியாமல் மறந்து, வேறு எங்கொயோ பறந்து சென்று இறக்கின்றன என்றார் சுப்பாராவ். நம் வாழ்வில் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தேனீக்களுக்காக ஒரு நாள் கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவற்றை அழிக்கும் எதையும் செய்யக்கூடாது.
நிலைமையை மாற்றியமைக்கவும் தேனீ அழிவைத் தடுக்கவும் உதவும் வழிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதிக கரிமப் பண்ணைகளை வைத்திருங்கள். ஏனென்றால் கரிமப் பண்ணைகள் அதிக பல்லுயிர் பெருக்கத்தையும் சிறந்த தேனீ ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் நமது சொந்த காய்கறிகளை பயிரிட வேண்டும். பூக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் தேனீக்களை ஈர்க்கின்றன.
குரோ தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு பால்ஜி ஏற்பாடு செய்திருந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியில், பெங்காலான் உலு மலாய் பள்ளி மற்றும் சீன பள்ளியிலிருந்து சுமார் 100 மாணவர்களும்,ஆசிரியர்களும் கலந்து பயன் பெற்றனர்.
கோலக்கெட்டிலில் தேன் வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் திருமதி ராதிகா சரவணன் தேனீக்களின் வளர்ப்பு, பயன்பாடு தொட்டு பேசினார்.
என்.வி. சுப்பாராவ்
மூத்த கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.