பத்திரிகை செய்தி. 14.3.22
இலக்கவியல் என்று சொல்லப்படுகின்ற டிஜிட்டல் வர்த்தகத்தில் பயனீட்டாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
பெருமளவில் மோசடி நடைபெறுவதாக பி.ப.சங்கம் புகார்.
கோவிட் காலக்கட்டத்திலிருந்து, டிஜிட்டல் என்று சொல்லப்படுகின்ற இலக்கவியல் வர்த்தகத்தில் பயனீட்டாளர்கள், அதிக அளவு ஏமாற்றப்படுவதால் அதிக கவனம் தேவைப்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயனீட்டாளர்கள் இந்த இலக்கவியல் வர்த்தகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கேட்டுகொண்டார்.
இன்று மார்ச் 15ம் தேதி உலக முழுவதுமாக கொண்டாடப்படு உலக பயனீட்டாளர் தினத்தின் கருப்பொருள் இலக்கவியல் வர்த்தகத்தில் விழிப்புடன் இருங்கள் என்பதாகும்.
அதன் அடிப்படையில் பயனீட்டாளர்கள் விளம்பரங்களை நம்பி டிஜிட்டல் வழியாக பொருளை வாங்குவதில் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
கோவிட் தொற்றிற்கு பிறகு பயனீட்டாளர்களின் வாங்கும் கலாச்சாரம், மாறியுள்ளது.
கடைக்கு சென்று,தேர்வு செய்து, பேரம் பேசி, நியாயமான விலையில் ஒரு பொருளை வாங்கும் மரபு இருந்தது.
ஆனால், அந்த மரபை உடைத்த பெருமை கோவிட்டுக்கே சென்று சேரும்.
பயனீட்டாளர்கள், வெளியே செல்வதற்கு பயந்த காரணத்தால், தாங்கள் பயன்படுத்திய பொருட்கள், உண்ணும் உணவு அனைத்தும், இணையத்திலும், டிஜிட்டல் என்று சொல்லப்படுகின்ற இலக்கவியல் முறையில் வாங்கப்பட்டது என சுப்பாராவ் கோடி காட்டினார்.
இலக்கவியல் முறையில் பயனீட்டாளர்கள், மின்சார கட்டணம், வீட்டு வாடகை, கார் கடன், மின்சார பொருட்களின் மாதாந்திர கட்டணம் என பலவற்றிற்கும் டிஜிட்டல் முறையையே பயன்படுத்தினர்.
இதற்கிடையே, சில பொருள் உற்பத்தியாளர்கள், பயனீட்டாளர்களை ஏமாற்றுவதற்காக, தரம் குறைந்த, மலிவான பொருட்களை அதிக விலையில் டிஜிட்டல் வர்த்தகம் வழி விற்க தொடங்கினர்.
4000 ரிங்கிட் விலை கொண்ட பொருள் வெரும் 200 ரிங்கிட்டிற்கு விற்கப்படுவதாக அறிவித்து, பயனீட்டாளர்களின் பணத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டதாக சுப்பாராவ் தெரிவித்தார்.
உண்மை நிலையை அறியாத பயனீட்டாளர்கள், விளம்பரத்தை நம்பி ஆயிரக்கணக்கான வெள்ளியை இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் உலக பயனீட்டாளர் தினத்தை 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பயனீட்டாளர் அமைப்புக்கள், இலக்கவியல் வர்த்தகம் குறித்து தங்களது நாடுகளைச் சேர்ந்த பயனீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர் எனவும் என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.
என் வி சுப்பாராவ்
கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்