எரிசக்தியைச் சேமிப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் உங்கள் பணத்தைச் சேமிப்பதோடு, உங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளைக் குறைக்கிறது. மின் விளக்கை அணைத்தல், மின்சாதனங்களைப் பயன்படுத்தாதபொழுது மின்தலையை இணைப்பிலிருந்து கழற்றி வைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு நம்மில் பெரும்பாலோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
தொலைக்காட்சி, நுண்ணலை அடுப்பு, குளிரூட்டி மற்றும் இது போன்ற பெரும்பாலான மின்சாதனங்கள் 24 மணி நேரமும் மின்சாரத்தை ஈர்த்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால், பயனீட்டாளர்கள் இதனை அறிந்திருப்பதில்லை. ஒரு மின்சாதனத்தின் விசையை அடைத்த பிறகு அல்லது அதனைக் காத்திரு நிலையில் வைக்கும்பொழுது அந்த மின்சாதனம் மின்சாரத்தை ஈரத்துக் கொண்டேதான் இருக்கும். இது காத்திரு நிலை எரிசக்தி எனப்படுகிறது.
சில மின்சாதனங்களுக்கான (எ.கா.: மின்னடுப்பு மற்றும் குளிரூட்டி) மின்தலை செருகப்பட்டிருக்கும். ஆனால், விசை அடைக்கப்பட்டிருக்கும். இது “செயலறு காத்திருப்பு முறை” ஆகும். இதனுடைய எண்மின் கடிகாரத்தைக் காட்டுவதற்காக அல்லது உள்ளியக்க நேரத்தைக் குறிப்பதற்காகச் செயலறு காத்திருப்பு முறையில் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில், இந்த மின்சாதனங்கள் குறைந்த எரிசக்தியைப் பயன்படுத்தினாலும் கூட, அவை மின்செலவினை அதிகரிக்கத்தான் செய்யும்.
குரல் இணைப்புடன் கூடிய அமைப்புகள் அல்லது வீடியோ விளையாட்டுகள், “செயலுறு காத்திருப்பு முறை”யைக் கொண்டிருப்பவையாகும். அவற்றுக்கு இன்னும் விரிவான காத்திருப்பு உணரிகள் (sensors) தேவைப்படலாம். அல்லது பின்னணியில் அவை பதிவிறக்கச் செயலிகளோடு இயங்கிக் கொண்டிருக்கலாம். இதனால், இவற்றின் விசையை அடைப்பதற்குப் பதிலாக, இவற்றைத் திறந்துவைத்து, பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது இன்னும் அதிகமான மின்சாரத்தை ஈர்த்துக்கொள்ளும். ஆகையால்,“செயலறு காத்திருப்பு” முறையைவிட,
“செயலுறு காத்திருப்பு” முறை 5-லிருந்து 10 மடங்கு அதிகமான மின்சாரத்தை ஈர்த்துக்கொள்ளும்.
காத்திருப்பு முறையிலான எரிசக்தி பயன்பாடு பருவ நிலை மாறுதல்களை ஏற்படுத்துகிறது. உலகளாவிய நிலையில் ஏற்படும் ஏறக்குறைய1% கரிவளி கசிவுக்கு இது காரணமாக இருக்கிறது (Berkeley Lab, UK). இவ்வாறான தகவல்களை அறிந்திருப்பதன் வழியாகவும் அது சார்ந்த தீவிர நடவடிக்கைகளின் வழியாகவும்காத்திருப்பு முறையிலான எரிசக்தி பயன்பாட்டினை 20% குறைக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
உங்களால் என்ன செய்ய முடியும்
ஒரு மின்சாதனம் காத்திருப்பு முறையில் மின்சாரத்தை ஈர்த்துக்கொள்கிறது என்பதனைக் கண்டறிவது எப்படி?மின்சக்தி தேவைப்படும் எந்த ஒரு மின்சாதனம், மின்கலன் (battery), தொலையியக்கி (remote control), தொடர் காட்சி (இதில் எல்.இ.டி. விளக்குகளும் அடக்கம்), அல்லது தொடர்ச்சியான வலையமைப்பு இணைப்பு ஆகியவை மின்சாரத்தை ஈர்த்துக்கொண்டேதான் இருக்கும். விசையை உடனடியாக இயக்கும் வகையில் உள்ள மின்சாதனங்கள் (“instant-on” functions) வெப்பமூட்டாமல் உடனடி இயங்குவதால் இது காத்திருப்பு முறையில் மின்சாரத்தை ஈர்த்துக்கொண்டேதான் இருக்கும். ஒரு மின்சாதனத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தப் போவதில்லை என்றால் அதன் தலையை மின்இணைப்பிலிருந்து கழற்றி வைக்கவும்.
கீழ்குறிப்பிட்ட மின்சாதனங்களின் தலையை மின் இணைப்பிலிருந்து கழற்றி வைக்க முற்படுங்கள்;
- பயன்படுத்தாத வி.சி.ஆர்., டி.வி.டி. பிளேயர் மற்றும் தொலைக்காட்சி; அரிதாகப் பயன்படுத்தும் ஆடியோ உபகரணங்கள் (ஒலிப்பெருக்கிகள், பூம் பெட்டிகள், ஷெல்ப் டோப் ஆடியோ அமைப்பு)
- எப்போதாவது பயன்படுத்தப்படும் சமையலறை உபகரணங்கள் (மின்னடுப்பு, ரொட்டி வாட்டி, இன்னும் பல)
- தோட்டக் கருவிகள் (புல்வெட்டுக் கருவி, இலை அகற்றும் கருவி)
- நீங்கள் பயன்படுத்தாத தொலையியக்கி அல்லது ஒளியுடன் கூடிய எண்மின் கருவிகள்.
- எப்போதாவது பயன்படுத்தப்படும் குளிரூட்டிகள், சிறிய ஈரப்பதமூட்டிகள் மற்றும் காற்று வடிகட்டிகள்.
- பிணைய மையங்கள் மற்றும் எதனுடனும் இணைக்கப்படாத கருவிகள்.
- ஸ்கேனர்கள், ஷ்ரெடர்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் பழைய அச்சுப்பொறிகள் போன்று மிகவும் அரிதாக பயன்படுத்தப்படும் அலுவலக உபகரணங்கள்.
(பாதுகாப்பினைக் கருத்தில் கொள்ளவும். தேய்ந்துபோன மின்கம்பிகளை உடைய சாதனங்களைக் கழட்டும்பொழுதும் பொருத்தும்பொழுதும் கவனமாகக் கையாளுங்கள்.)
கீழ்கண்டவற்றைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்:
உங்கள் மின்சாதனத்தை மின்னூட்டிய பிறகு அதன் மின்தலைகளைக் கழற்றி வையுங்கள்.
மின்விசிறி, விளக்குகளுக்கான மின்தலைகளையும் கழற்றி வைக்கவும். பயன்படுத்தாத நேரத்தில் விளக்குகளை அணைக்கவும்.
நுண்ணலை அடுப்பு, சலவை இயந்திரம், துணி உலர்த்தி, பாத்திரம் கழுவும் இயந்திரம், தொலைக்காட்சி மற்றும் விளையாட்டுப்பொறி (games console)இவற்றின் விசைகளை முடுக்கி விடவும்.
கணினிகளைக் “காத்திரு நிலையில்” வைத்திருக்கவும். திரை சேமிப்பு முறையைவிட இது இன்னும் குறைவான மின்சாரத்தை ஈர்க்கும்.
அச்சுப்பொறி,ஸ்கேன்னர் ஆகியவற்றைப் பயன்படுத்தாதபொழுது அவற்றின் விசையை முடுக்கிவிடவும்.
காத்திரு நிலையிலும் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் மின்சாதனங்களின் மின்தலைகளைக் கழற்றி வையுங்கள். விவேக மின்சக்திப் பட்டை (smart power strip) பயன்படுத்தவும். இது காத்திரு நிலையில் உள்ள மின்சாதனங்கள் மின்சாரத்தை ஈர்த்துக்கொள்வதைத் தடுத்து நிறுத்தும்.
புதிய மின்சாதனங்களை வாங்கும்பொழுது, நட்சத்திர தரம் உடைய எரிசக்தி திறன் கொண்டனவற்றை வாங்கவும்.
மின்சாதனங்களுக்கு காத்திருநிலையில் மின்சாரம் தேவைப்படும்பொழுது
சில மின்சாதனங்களுக்கு, அவை இயங்குவதற்கான தொடர்தகவல்களைப் பெற்றுக்கொள்ள தொடர்ச்சியான மின்சக்தி தேவை. இன்னும் சில உபகரணங்கள் சிறிய அளவு மின்சாரத்தின் மூலமாகவே அவற்றின் இயக்கம் முழுமையாக நடைபெறும். எ.கா: ஏசியை டிசியாக மாற்றுதல் (வால் அடாப்டர்கள்); சிக்னல் வரவேற்புத் திறனைப் பராமரித்தல் (தொலை இயக்கி, தொலைபேசி அல்லது பிணைய சமிக்ஞைக்கு); தட்பவெப்ப நிலை அல்லது இதர நிலைகளைக் கண்காணித்தல் (எ.கா: குளிர்பதனி); உட்கடிகார இயக்கத்திற்கான மின்சக்தி, மின்கலனுக்கான மின்னூட்டம், தொடர்ச்சியான தகவல் திரையீடு.
பின்வரும் சாதனங்கள் அவற்றின் காத்திருப்பு நிலையில் தொடர்ச்சியாக மின்சாரத்தை ஈர்த்துக்கொண்டே இருப்பவை ஆகும். இவற்றுக்கான மின்விசையை முடக்கிவிட முடியாது. அவை வருமாறு: கம்பியில்லா தொலைபேசி மற்றும் பதிலளிக்கும் இயந்திரம் (answering machine); சாதனங்களை இயக்கும் கடிகைகள் (timer), பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தீ எச்சரிக்கை கருவி; மின்மாற்றியால் இயங்கும் கதவுமணி; நிரல்படுத்தக்கூடிய டெர்மோஸ்டாட்கள்; இயக்க உணரிகள், ஒளி உணரிகள், உட்பொதிக்கப்பட்ட கடிகைகள் மற்றும் தானியங்கி நீர் தெளிப்பான்கள்.
#energysavings #energyefficiency #justenergytransition