எரிசக்தி சேமிப்பு மற்றும் திறன் தொடர்பான ஒரு பட்டறையைப் பினாங்கு, குளுகோரில் உள்ள டத்தோ ஹஜி முகமட் நோர் ஆமாட் இடைநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடந்தேற்றியது.

கடந்த 8 ஜூன் 2024 அன்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எரிசக்தி சேமிப்பு மற்றும் திறன் தொடர்பான ஒரு பட்டறையைப் பினாங்கு, குளுகோரில் உள்ள டத்தோ ஹஜி முகமட் நோர் ஆமாட் இடைநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடந்தேற்றியது. பினாங்குத் தீவில் உள்ள 34 பள்ளிக்கூடங்களில் பணி புரியும் 96 ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் யாவரும் புவியின் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்குத் தங்கள் மாணவர்களைத் தயார்படுத்தும் பொருட்டு இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டனர்.

எரிசக்தி தணிக்கையில் நிபுணத்துவம் பெற்ற, தேசிய எரிசக்தி பல்கலைக்கழகத்தின் (UNITEN) முனைவர் லீ ஹூய் ஜிங், எரிசக்தி சேமிப்பின் அவசியத்தையும் நுணுக்கங்களையும் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டார். ஒரு கட்டிடத்தில் எரிசக்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான பகுப்பாய்வே எரிசக்தி தணிக்கை ஆகும். ஓர் இயக்கத்தைப் பாதிக்காமல் எப்படி எரிசக்தியைச் சேமிப்பது என்பதற்கான வழிகளை உருவாக்கிக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். உதாரணத்திற்கு, குளிரூட்டியின் வடிகட்டியைச் சுத்தப்படுத்துதல், மின்சாதன பராமரிப்பு, எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்துவது மற்றும் எரிசக்தி திறன் சாதனங்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.

முனைவர் லீயின் ஊக்குவிக்கும் உரையோடு ஆசிரியர்களையும் அது தொடர்பான செயல்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவரவர் பள்ளிக்கூடங்களில் எப்படி எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று திறன்பட விளக்கினார். லக்ஸ் மானி (பிரகாசத்தை அளவிடுவதற்கான சாதனம்), ஈரப்பத மானி (நீராவி அல்லது காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளவிடுவதற்கான சாதனம்) வேகமானி (காற்றோட்டம் அல்லது அதன் வேகத்தை அளவிடுவதற்கான சாதனம்) போன்ற கருவிகளை பட்டறையில் பயன்படுத்தி எரிசக்தி தணிக்கை பற்றி ஆசிரியர்கள் கற்றுக்கொண்டனர்.

பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொருட்டு எரிசக்தி பயன்பாட்டினை குறைப்பதற்கான சிறு சிறு நடவடிக்கைகளும் கூட எவ்வளவு முக்கியம் என்று அனைத்து ஆசிரியர்களும் ஒன்று கூடி விவாதித்தனர். எரிசக்தி சேமிப்பு தொடர்பான தகவல்களை ஆசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம், ஓர் அதிர்வை ஏற்படுத்தி, மாற்றங்களைப் பள்ளிக்கூடங்களிலிருந்து மாணவர்களின் வீடுகளுக்கும், பிறகு சமூகத்திற்கும் கொண்டு செல்ல இயலும்.

நிலைபேறான ஓர் எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு அதற்கான முதல் அடியினை எடுத்து வைப்போம். மின்விளக்கை அணைத்தல், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல், கரிமத் தடத்தைக் குறைத்தல் போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வரும்.

இந்தப் பட்டறையில் கலந்துகொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அடுத்த தலைமுறையின் பசுமையான, பிரகாசமான எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.

 

     

#SaveEnergy #EnergyEfficiency #SustainableConsumption #EnergyAuditing