ஏழு போக்குவரத்து குற்றங்கள். போக்குவரத்து அமைச்சுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பாராட்டு

இந்த சீனப் புத்தாண்டு பண்டிகைக் காலம் முழுவதிலும் ஈடுசெய்ய முடியாத ஏழு போக்குவரத்துக் குற்றங்களுக்குப் போக்குவரத்து அமைச்சு எடுத்த நடவடிக்கைகளை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முழுமையாக வரவேற்பதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அக்குற்றத்தை மீறுபவர்களுக்கு அபராதம் வழங்கப்படாது, மாறாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற பரிந்துரை வரவேற்ககூடிய ஒன்று என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகள் பண்டிகை நேரங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படாமல் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கப்பட வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்தார்.

வரிசையை மீருதல், இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்வது, சிவப்பு விளக்கு சிக்னலை மீறுதல், வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது கைபேசியை பயன்படுத்துதல், சீட் பெல்ட் அல்லது தலைகவசம் அணியாதது, அவசரப் பாதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய ஏழு முக்கிய போக்குவரத்துக் குற்றங்களுக்கு இனி சம்மன் கொடுக்கப்படாமல் நேரடியாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது என முகைதீன் சொன்னார்.

நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என தாங்கள் நம்புவதாக அவர் கூறினார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மலேசியாவில் மொத்தம் 402,626 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 4,379 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 255,532 சாலை விபத்துக்கள் ஏற்பட்டதில் இருந்து இது ஒரு உயர்வாகும், இதில் 3,324 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதத்துடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டை விட விபத்து நிகழ்வுகளில் 58% (அல்லது 147,094) அதிகரிப்பைக் குறிக்கிறது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 32% அதிகரித்துள்ளது (அல்லது 1,055 இறப்புகள்). புள்ளி விவர அறிக்கை தரவுகளில் படி நாட்டில் சாலை பயன்படுத்துவோரின் அதிக உயிரிழப்பு விகிதம் மிகவும் கவலையளிக்கிறது.

அரசாங்கம் விரைவாகவும் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளுக்கான உண்மையான காரணங்களை விசாரிக்க அரசு உடனடியாக அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த சோகமான சூழ்நிலைக்கு பல காரணிகள் சாத்தியமான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பொதுவாக “மனித காரணிகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஒரு எடுத்துக்காட்டாகும். நமது சாலைகளின் தரமின்மையும் மற்றொரு பங்களிக்கும் காரணியாகும்.

இந்த அரச விசாரணை ஆணையம், கொடூரமான நிலையில் இருக்கும் தற்போதைய பொதுப் போக்குவரத்து முறையை அரசாங்கம் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய வேண்டும் என பினாங்கு பயனீட்டளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார். முகைதீன் அப்துல் காதர் தலைவர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

#cap_press_statement2023
#cap_press_statement