பத்திரிகை செய்தி 16.11.21
குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகூடம் சென்றடையாமல் பள்ளி மாணவர்கள் அவதி.
பினாங்கு துறைமுகம் வாரியம் கவனிக்குமா?
பினாங்கு துறைமுக வாரியம் உடனடியாக அதன் பெர்ரி அட்டவணையை அவசரமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கு காரணம் ஒரு பெர்ரிக்கு ஒருவர் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
பட்டர்வொர்த்திலிருந்து பினாங்கு தீவுக்கு வருவதற்கான முதல் பெர்ரி காலை 7 மணிக்கு புறப்படுகிறது.
ஆனால் பள்ளிக்கு செல்லும் பல மாணவர்களும், அரசாங்க ஊழியர்களும் இந்த முதல பெர்ரியைத்தான் நம்பியுள்ளனர்.
7 மணிக்கு புறப்படும் முதல் பெர்ரி தட்டு தடுமாறி 20 நிமிடங்களுக்குப் பிறகு பினாங்கு வந்து சேரும்.
அதன் பிறகு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு மாணவர்கள் பேருந்தில் செல்ல வேண்டும்.இம்மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு சென்று அடைவதற்குள் வகுப்பும் ஆரம்பித்து விடுகிறது என பி.ப.சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.
இதே போன்ற அவசரத்தில் தான் அரசாங்க ஊழியர்களும் இருப்பதாக அவர் கூறினார்.
அரசாங்க ஊழியர்கள் தாமதமாக அலுவலகம் சென்றால் தாமதமாக வீடு திரும்பலாம், ஆனால் மாணவர்களுக்கு இது பொருந்துமா என முகைதீன் கேள்வி எழுப்பினார்.
ஆகவே பினாங்கு துறைமுக வாரியம் அதன் தற்போதைய பினாங்கு-பட்டர்வொர்த் பெர்ரி சேவை அட்டவணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஏனெனில் பயணங்களுக்கு இடையே இரண்டு மணிநேர இடைவெளி குறிப்பாக பாதசாரி பயணிகளுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகின்றது. ஒருவர் கடந்து செல்ல ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா.
பாதசாரிகளில் பலர் பெரும்பாலும் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள்.
பாதசாரிகளில் பலர் ஏதாவது ஒரு அலுவல் காரணமாகவோ, குறிப்பாக மருத்துவம், நீதிமன்ற வழக்கு அல்லது அரசாங்க தொடர்புடைய அலுவலகம் செல்ல நேர்ந்தால் இந்த பெர்ரியை நம்ப முடியாது.
இரண்டு மணி நேர இடைவெளி என்பது மிக நீண்டது, பயணிகளின் நேரத்தை வீணடிக்கிறது.
இருபது நிமிடங்கள் முதல் அரை மணி நேர இடைவெளிகள் மிகவும் நியாயமானவை.
தேசிய மீட்புத் திட்டத்தின். கீழ் கட்டம் 4 க்கு பினாங்கு மாறியுள்ளது. பினாங்கில் வாழ்க்கை கிட்டத்தட்ட இயல்பாக்கப்பட்ட நிலையில், பெர்ரி சேவைகளின் தரமும் மேம்படுத்தப்பட வேண்டும்.
தங்களின் செலவுகளைக் குறைக்க இரண்டு மணி நேர இடைவெளி தேவை என்று பினாங்கு துறைமுக வாரியம் காரணம் சொல்கிறது.
அது தவறு, ஏனென்றால் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடு பணம் சம்பாதிக்கும் முயற்சியாகக் கருதப்படக்கூடாது. இது பினாங்கு துறைமுகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாகும்.
குறைந்த பட்சம் பாதசாரிப் பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மிகவும் திறமையான அட்டவணையை பினாங்கு துறைமுக வாரியம் செயல் படுத்த வேண்டும்.
உதாரணத்திற்க்கு காலை 11 மணிக்குப் பிறகு பட்டர்வொர்தில் உள்ள ஒரு பயணி பினாங்கிற்கு அடுத்த பெர்ரியை எடுப்பதற்கு மதியம் 1 மணி வரை பெர்ரி முனையத்தில் காத்திருக்க வேண்டும். இது அநியாயம்.
பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பெர்ரி சேவை வெகுவாகக் குறைக்கப்படுகிறது. இதுவும் சரிபார்க்கப்பட வேண்டும் என பி.ப.சங்கம், பினாங்கு துறைமுக வாரியத்தை கேட்டுக் கொள்வதாக முகைதின் தெரிவித்தார்
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்