ஒவ்வொரு மலேசியருக்கும் சத்தான உணவு கிடைக்க அரசாங்கம் உத்தரவாதம் தர வேண்டும்.

பத்திரிகை செய்தி. 28.2.22

மலேசியர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்கின்றார்களா
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை!

ஒவ்வொரு வீட்டின் மேசை மீது இருக்கும் உணவுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம், அரசாங்கத்திற்கு பலமுறை வேண்டுகோள் விடுத்து வந்தது.
பல ஆண்டுகளாக உணவுப் பாதுகாப்பின்மையின் ஆபத்துகள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்திருந்தது, ஆனால் அரசாங்கம் அதனை செவிசாய்க்கவில்லை என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

மேலும் உணவு விநியோகச் சங்கிலியின் மொத்த மதிப்பாய்வை உள்ளடக்கிய முழு விவசாயக் கொள்கையையும் மறுசீரமைக்க வேண்டும் எனவும் பி.ப.சங்கம் ஆலோசனை கூறியது.

பல தசாப்தங்களாக விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை விட அதிக லாபம் ஈட்டும் மொத்த வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் இருப்பதைப் பற்றி பிரச்சினைகள் எழுந்துள்ளன.

உணவுப் பாதுகாப்புப் பிரச்சினையை ஒரு துண்டு உணவின் அடிப்படையில் தீர்க்காமல், முதலில் மேலோட்டமாகப் பார்த்து, அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டறிந்து, நீண்டகாலத் தீர்வுகளை உருவாக்குமாறு பி.ப.சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது.

உண்மையில், மலேசியன் பொது சுகாதார மருந்து சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2014ன் ஆய்வில் 25 சதவீத பெரியவர்கள் உணவு அளவு பற்றாக்குறையை எதிர்நோக்கி இருந்ததாகவும், 25.5 சதவீதம் பேர் உணவு வகை பற்றாக்குறையையும், 21.9 சதவீதம் பேர் உணவின் அளவைக் குறைத்தும், 15.2 சதவீதம் பேர் முக்கிய உணவிற்கு செலவழிக்கப் பணம் இல்லாமல் அவதிப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-2025 ன் மலேசியாவுக்கான ஊட்டச்சத்துதேசிய செயல்திட்டம் வெளிப்படுத்தியுள்ள அறிக்கையில், மலேசியர்கள் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வதில்லை என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை தருகிறது என்றார் முகைதீன்.

மலேசிய பெரியவர்களில் 59.1 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு பரிமாணங்களை விட குறைவான பழங்களை உட்கொண்டதாகவும், 81.7 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று பரிமாண காய்கறிகளை விட குறைவாகவும் உட்கொண்டதாக அது தெரிவித்துள்ளது.

1980 களில் இருந்து உணவுப் பிரச்சினைகள் மலேசியாவைப் பாதித்து வந்துள்ளது.

தொழில்மயமாக்கல் மற்றும் சேவைத் துறைகளுக்கு ஆதரவாக விவசாயத்தை ஓரங்கட்டத் தொடங்கியது.

உணவுப் பாதுகாப்பைக் கையாள்வது ஒரு முக்கியப் பணியாகும், ஏனெனில் அது சமச்சீரற்ற உணவு ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கலாம், இதன் விளைவாக உடல் வீணாகி, உயரம் குன்றியிருக்கும், எடை குறைவாக இருப்பது அல்லது அதிக எடை அதிகரிப்பு ஏற்படலாம்.

உலகளாவிய பணவீக்கத்தின் விளைவாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது சமநிலையற்ற உணவுமுறை இன்னும் அதிகமாகக் காணப்பட்டது.

விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் மாதாந்திர வரவுசெலவுத் திட்டம் கடுமையாக்கப்படுவதால், தொற்றுநோய்களின் போது அதிகமான மலேசியர்கள் குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதை நாம் எதிர்பார்த்தோம்.

ஜனவரி 2022 தொடக்கத்தில் இருந்து, வியாபாரிகளின் உணவு விலைகள் சுமார் 20 சதவீதம் அதிகரித்திருந்தது.

தொற்றுநோய்களின் போது வேலைகள் உடனடியாக கிடைக்கவில்லை.
ஏழைகள் எப்படி வாழப் போகிறார்கள்? அவர்களின் வாடகை, வங்கிக் கடன்கள், பயன்பாடுகள், கல்வி மற்றும் ஒருவேளை மருத்துவக் கட்டணம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்த பிறகுதான் அவர்களின் மாதாந்திர வரவு செலவு திட்டத்தில் உணவு கடைசியாக இருந்தது. ஆம் உணவுக்கு மலேசியர்கள் முக்கியத்துவம் தரவில்லை.

இதற்கு காரணம், உணவுடன் ஒப்பிடும்போது மற்றவை அவர்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், மலிவான உணவு, சிறிய அளவு அல்லது உணவைத் தவிர்க்கும் விருப்பத்தை அவர்கள் தேர்வு செய்தனர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக பல குடும்பங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்கள் உணவிலிருந்து விலக்கியிருந்தனர்.

பழங்கள் மற்றும் காய்கறிகளின் அதிக விலை மேலும் அவை இறைச்சியை விட எளிதில் ஜீரணமாகி வுடுவதால் பசி விரைவாக வந்துவிடும். இதனால் பசியை உணராமல் இருக்க மலேசியர்கள் வேறு உணவை தேர்வு செய்தனர்.

அதாவது சாப்பிட்டு சீக்கிரமாக பசி எடுக்காத உணவுகள்.

காய்கறிகள் ஜீரணிக்க 30 முதல் 60 நிமிடங்கள் ஆகும், கோழி சுமார் 2 மணி நேரம் எடுக்கும், மற்றும் மாட்டிறைச்சி அல்லது ஆட்டிறைச்சி 4 மணி நேரம் ஆகும்.

செலவைக் குறைக்கும் அதே வேளையில், குடும்பத்திற்கான உணவின் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதால், ஊட்டச்சத்து அவர்களின் கவலையாக இருக்காது. இது பலனளிக்கவில்லை என்றால், அவர்கள் உணவைக் குறைக்க வேண்டும்.

பசி எடுக்காமல் இருக்க மலேசியர்கள் அதிக அளவில் சாதத்தை சாப்பிடுகின்றார்கள். இது நீரிழிவு மற்றும் பருமனை ஏற்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்த அளவில் சாப்பிடுவதால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையுடன் தொடர்புடைய நோய்கள் அதிகரிக்கலாம்.

எனவே, வலுவான விவசாயக் கொள்கை நமக்கு தேவை.

ஒரு நல்ல விவசாயக் கொள்கையில் கால்நடை தீவனம், விவசாய பொருட்கள் மற்றும் பிற விவசாயத் தேவைகளின் உற்பத்தி ஆகியவை இருக்க வேண்டும் என்பதை இந்த தொற்று நமக்குக் நினைவு படுத்துகிறது.

ஆகவே அரசாங்கம் மலேசியர்களின் உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும். சரியான ஒரு உணவு சங்கலியால் மட்டுமே மலேசியர்களின் ஆரோக்கியம் நிலைநாட்ட முடியும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நம்புவதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்