பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இரண்டாவது எரிசக்தி சேமிப்பு & திறன் பட்டறை கடந்த 22.6.2024-இல் கான்வென்ட் பட்டவெர்த் இடைநிலைப் பள்ளியில் நடைபெற்றது. செபிராங் பிறையின் 3 மாவட்டங்களில் உள்ள 18 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 60 ஆசிரியர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். எரிசக்தி சேமிப்பு தொடர்பான பயனான தகவல்கள், அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வைக் கொடுப்பதாக இந்தப் பட்டறை அமைந்திருந்தது.
பருவ நிலை மாற்றம் தூரத்தில் நின்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விடயமல்ல. இப்பொழுது அது நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. அடிக்கடி ஏற்படும் வெள்ளம், இது வரை கண்டிடாரத வறட்சி என்று எல்லாவற்றையும் நாம் அனுபவித்து வருகிறோம். அதிகரித்து வரும் வெப்ப நிலையால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்த உருகும் பனிக்கட்டிகளால் கடல் மட்டம் அதிகரித்து, கடலோரவாழ் மக்களுக்கு அச்சுறுத்தலாகி உள்ளது. பருவ நிலை மாற்றங்கள் விவசாயத்திற்கு இடையூறாக இருப்பதோடு, உணவுப் பாதுகாப்பின்மைக்கும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும் இட்டுச் சென்றுள்ளது. பருவநிலை மாற்றத்தால் நாம் அனுபவித்து வரும் எதிர்மறை விளைவுகளில் இவை சில மட்டுமே.
பருவநிலை மாற்றத்திற்கு எரிசக்தி பயன்பாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிமங்களை எரிப்பதன் மூலம் எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. புதைபடிமங்களை எரிக்கும்பொழுது அவை சூழலில் அதிக கரிவளியையும் பசுமைக் குடில் வாயுக்களையும் கசியவிடுகின்றன. இவை வளி மண்டலத்தில் சூட்டைத் தேக்கி புவி வெப்பத்தை அதிகரிக்கின்றன. பூமியின் வெப்பம் உயரும்பொழுது, அது சீறான காலநிலைகளுக்கு இடையூறினை விளைவித்து சூழல்மண்டலத்தையும் சீர்குலைத்து தற்போது நாம் அனுபவித்து வரும் பருவநிலை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.
பினாங்கு, யூனியன் ஆரம்பச் சீனப்பள்ளி ஆசிரியர் மற்றும் பினாங்கு பசுமைப் போதிப்பாளர் பணிக்குழுவைச் (GREW) சேர்ந்த திரு காவ் ஜெரோம், சிறப்பு பேச்சாளராக வருகை தந்து இந்தப் பட்டறையில் உரையாற்றினார். ஜெரோம் கடந்த 2015-லிருந்து நிலைபேறான மேம்பாட்டினை நோக்கிய கல்வியில் கவனம் செலுத்தி இயங்கி வருகிறார். அவர் சென்ற வருடம் யுனெஸ்கோவின் பருவ நிலை மாற்றப் பிரிவு அமைப்பு, பாரிஸ் நகரில் ஏற்பாடு செய்திருந்த பருவ நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்துகொண்டார்.
மாணவர்களுக்கு எப்படி பருவ நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டு வருவது என்று ஆசிரியர்களோடு ஜெரோம் கலந்துரையாடினார். ஆசிரியர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி பசுமைக் குடில் வாயுக் கசிவின் விளைவுகளை திறன்பட எடுத்து விளக்கினார். மின்சாரக் கட்டண அறிக்கையை எப்படிப் படிப்பது மற்றும் எரிசக்தியை எந்த அளவுக்கு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை உணர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கினார். கிலோவாட் பயன்பாடு மற்றும் அது தொடர்பான கரிமத்தட பாதிப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். வெவ்வேறு பாடம் மற்றும் பாடத்திட்டங்களில் எரிசக்தி உபயோகம் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களுக்கு எப்படி ஊட்டுவது என்றும் ஜெரோம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டினார்.
இந்தப் பட்டறையின்பொழுது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் “எரிசக்தி சேமிப்பு” என்ற தலைப்பிலான அதன் புதிய சிற்றேட்டை வெளியீடு செய்தது. இந்தச் சிற்றேடு தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் என்று நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி சேமிப்பு, திறன், பாதுகாப்பு ஆகியவை தொடர்பான விபரங்களை இந்தச் சிற்றேடு கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் எரிசக்தியும் மின்சார உபயோகமும் எப்படி பருவநிலை நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன என்பதைப் பற்றியும் பேசுகிறது.
அடுத்த தலைமுறையின் பசுமையான, நிலைபேறான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்.
#SaveEnergy #EnergyEfficiency #SustainableConsumption #ClimateChange #ClimateEducation