கூலிம் ஆற்றின் மணலை தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 18.3.22

கூலிம் மாவட்டத்தில் உள்ள முக்கிம் கெளடியில் உள்ள மூன்று கிராமங்களில், ஆற்று மணல் அள்ளும் நடவடிக்கைகளால் அங்கு வசிப்பவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் கெடா மாநில அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார். இந்த திட்டத்திற்கு மாநில ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்திருந்தாலும், இந்த விஷயத்தை மாநில அரசு குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார் அவர்.

ஏனெனில் இது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் வாழ்க்கையை உள்ளடக்கியது என்றார் முகைதீன். பாதிக்கப்பட்ட கிராமங்களில் கம்போங் டோக் ரசூல், கம்போங் சுங்கை படாக் மற்றும் கம்போங் டுசுன் ஆகியவை அடங்கும்.

கூலிம் ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆற்றங்கரை அரிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். இவர்களது விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளை நெருங்கி வருவதால் இந்த சம்பவம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உண்மையில், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் சிலர் அரிப்பு மற்றும் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நிலத்தை இழந்துள்ளனர்.

ஆற்றின் கரையோரங்களில் அரிப்பைத் தடுக்கும் அரண்களாக இருந்த பல மரங்கள் விழுந்ததால் நிலைமை மோசமாகியது.
பாதிக்கப்பட்ட பகுதிவாசிகள் மணல் குவாரி நிறுவனம் உட்பட கூலிம் மாவட்ட அலுவலகம்,
நீர்பாசனம் மற்றும் வடிகால் துறை ஆகியவற்றுடன் பல புகார்களை அளித்தனர்.

பல சந்திப்புகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. ஆனால் இப்போது வரை பிரச்சனை நீடிக்கிறது. இந்த பிரச்சனையால் சொத்து சேதம் காரணமாக இழப்பை சந்திக்கும் குடியிருப்பாளர்களுக்கு உரிய இழப்பீடு
வழங்கப்பட வேண்டும் எனவும் பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்