பத்திரிகை செய்தி. 5.1.24
2023ல் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் படையெடுத்த தினத்திலிருந்து இதுவரை 23,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மலேசியாவில் இதே காலகட்டத்தில் 12,417 பேர் நமது சாலைகளில் உயிரிழந்துள்ளனர்.
இதுதான் நமது சாலைகளின் ன் தரம் என குற்றஞ்சாட்டியுள்ளது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். பல மரணங்கள் மற்றும் பலத்த காயங்களுடன் இந்த சூழ்நிலையை நாம் ஒரு போருக்கு ஒப்பிடலாம் என்கிறார் அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர்.
பல சந்தர்ப்பங்களில், முழு குடும்பங்களும் பரிதாபமாக உயிரை பறிகொடுத்துள்ளன.
இன்னும் நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் துன்பங்களைப் புறக்கணித்து, பெரும்பாலும் உணர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம் என முகைதீன் வருத்தத்தோடு கூறினார்.
தொடர்புடைய ஏஜென்சிகளும் கொள்கை வகுப்பாளர்களும் என்ன செய்கிறார்கள்? என அவர் கேள்வி எழுப்பினார். இந்த உயிர் பறிபோகும் சம்பவங்களைஅவர்கள் மிக இலகுவாக எடுத்துக் கொண்டு, சாலை மரணங்கள் மேலும் தொடர அனுமதிக்கின்றார்காளா என முகைதீன் கேள்வி எழுப்பினார்.
2022 ஆம் ஆண்டில், சாலை விபத்துகளின் எண்ணிக்கை 545,630ஆக இருந்தது. கடந்த ஆண்டு 598,635 ஆகவும் இருந்தது. 2022 ல் 6076 ஆக இருந்த இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12,417 ஆக அதிகரித்துள்ளது.
சாலைப் பாதுகாப்பிற்கான சர்வதேச தரவில் மலேசியா இணைக்கபட்டுள்ளது. சாலையில் மிகவும் பாதுகாப்பான சாலைகள் முதல் ஆபத்தான சாலைகள் வரை தரவரிசைப்படுத்தப்பட்ட 27 நாடுகளின் பட்டியலில், மலேசியா 23வது இடத்தில் உள்ளது.
பெரும்பாலான வாகனங்கள் பாதுகாப்பாக வடிவமைக்கப்படவில்லை மற்றும் சோதனைகள் போதுமானதாக் உள்ளதா என்பதை அறிய வழி இல்லை. பழுதடைந்த வாகனங்களை திரும்ப அழைக்கும் முறையும் மலேசியாவில் இல்லை.
நன்கு சோதனையிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட கார்கள் கூட பாதுகாப்பு குறைபாடுகளுக்கு உள்ளாகியுள்ளது. வெளிநாடுகளில் மில்லியன் கணக்கானவர்களால் சமீபத்தில் திரும்ப பெறப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நமது கார்களுக்கு இன்னும் கடுமையான சோதனை தேவை என்பதை பி.ப.சங்கம் வலியுறுத்த விரும்புகிறது. அதி வேகம், மோசமான வாகனம் ஓட்டும் பழக்கம், வாகன ஓட்டிகளின் அணுகுமுறை, நெரிசலான சாலைகள், மோசமான சாலை நிலைமைகள் மற்றும் அமலாக்கமின்மை ஆகியவை மலேசியாவில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
மற்ற சாலைப் பயணிகளைப் பற்றி கவலைப்படாமல் ஆபத்து மற்றும் மோசமான நடத்தை நமது கலாச்சாரமாகிவிட்டது. ஆய்வுகள் மற்றும் காவல்துறை பதிவுகளின்படி, வேகம் மற்றும் ஆபத்தான முந்திச் செல்வது சாலை விபத்துக்களுக்கு அதிக காரணமாகும்.
ஈரமான சாலைகள், இரவில் அவை தெளிவாகத் தெரியாதபோதும் இன்னும் ஆபத்து ஏற்படுகிறது. 40% இறப்புகள் நெடுஞ்சாலைகளிலும், 25% க்கும் அதிகமானவை மாநிலச் சாலைகளிலும் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான சாலை சூழலை வழங்கும் சர்வதேச சாலை மதிப்பீட்டு திட்டம் பரிந்துரைத்த 9 உத்திகளை மலேசிய அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
20 ஆண்டுகளில் பல உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நமது நகர்ப்புறச் சாலைகள் பல, பயன்பாட்டு நிறுவனங்களால் மீண்டும் மீண்டும் தோண்டப்பட்டு, சாலையின் அடித்தளத்தை சேதப்படுத்தி, பழைய நிலைக்குத் திரும்பாமல் சீர்படுத்தப் படாமல் உள்ளது.
மேலும் சேதத்தை விளைவிக்க கனரக வாகனங்கள் தங்கள் பங்கை ஆற்றியுள்ளன.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு என்பது அனைவரின் பொருப்பு மற்றும் அக்கரையாக இருக்க வேண்டும்.
ஆகவே கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகள் சாலைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்களின் துன்பங்களைக் குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.