கோலாலம்பூர் நகர மண்டபம் மதுபான விற்பனையைத் தடை செய்ததற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் புகழாரம்

மளிகைக் கடை, சௌகரியக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில் மதுபான விற்பனையை வருகின்ற 30.9.2021-லிருந்து தடை செய்ய கோலாலம்பூர் நகர மண்டபம் (DBKL) எடுத்துள்ள முடிவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆதரிப்பதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்தத் தடையை வரவேற்பதற்கு தக்க ஆதாரங்களோடு கூடிய காரணங்கள் இருக்கின்றன. ஆகையால் அரசாங்கம் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மதுபானம் விற்பதற்கு உரிமம் வழங்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒருவர் மதுபானம் விற்ற உரிமம் விண்ணப்பிப்பதற்கு முன்பு அங்குள்ள மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட வேண்டும். குறிப்பிட்ட கடைக்கு அருகில் உள்ள அண்டை வீட்டாருக்கு அறிவிப்பு அனுப்பி அவர்கள் இந்த மது விற்பனை விண்ணப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும்.

சட்டத்தை மீறும் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனையாளர், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் ஆகியோர் மதுபானம் பரிமாறுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆனாலும் சில்லறை விற்பனையாளர்கள் டின் அல்லது பாட்டிலில் மதுபானம் விற்க உரிமம் தேவையில்லை. அதனால் சிற்றுண்டிச் சாலை மற்றும் இதர விற்பனையாளர்கள் பீர் பானத்தை விற்று விட்டு அதனைத் திறப்பதற்கான கருவிகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து அவர்களாகவே பரிமாறிக்கொள்ளும் ஏய்ப்பு வேலைகளை செய்து வருகிறார்கள். இது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிந்திருந்தும் இவ்வாறு செய்கிறார்கள்.

பொது இடங்களில் மதுபானம் அருந்துவதை சட்ட விரோதமான ஒரு செயலாக்க வேண்டும். இப்போதைக்கு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரையோரங்கள் ஆகிய பொது இடங்களில் மது அருந்துவது ஒரு குற்றமாகாது. மது அருந்துபவர் அங்கு தொல்லைகளையும் குழப்பங்களையும் உருவாக்கினால் மட்டுமே அது பிரச்சனையாகக் கருதப்படும். சிங்கப்பூரில் இவ்வாறு தவறிழைப்பவர்களுக்கு S$10,000 (மவெ. 30,410) வரைக்கும் அபராதம் விதிக்கப்படும்.

காவல் நிலையம், வழிபாட்டுத் தளங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மதுபான விற்பனையைக் கோலாலம்பூர் நகர மண்டபம் தடை செய்துள்ளது. இவ்விடங்களிலிருந்து 300 மீட்டர் சுற்றெல்லைக்கு அப்பால் மதுபானக் கடைகள் இருக்கலாம் என்பது வினோதமாக உள்ளது.

மலேசியாவில் நிறைய பதின்மர்கள் இள வயதிலேயே மதுபானம் அருந்துவதாக 2001-ல் மது ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது. 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட 45 விழுக்காடு இளைஞர்கள் வழக்கமாக மது அருந்துவதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. 2015-ல் 8.4 விழுக்காடாக இருந்த மது அருந்துபவர்களின் எண்ணிக்கை 2019-ல் 11.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தேசிய சுகாதார மற்றும் நோய்நிலை ஆய்வு 2019-ல் மேற்கொண்ட ஆய்வில், 45.8 விழுக்காடு மலேசியர்கள் விருந்துகளில் வழக்கமாக மதுபானம் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இங்கிலாந்தில் விருந்துகளில் மதுபானம் அருந்தும் வழக்கம் கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 27 விழுக்காடுதான். பத்தில் ஒருவர் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரே நேரத்தில் 6 அல்லது அதற்கும் மேற்பட்ட மதுபானங்களை அருந்துகிறார்கள் என்று இதற்கு பொருள்படும்.

மதுபானம் அருந்துவது தொற்றாத நோய்களோடு தொடர்புடையதாகும். இருதய சம்பந்தமான நோய்கள், கல்லீரல் அரிப்பு மற்றும் புற்றுநோயோடு தொடர்புடையது. அது வாகன விபத்துகள், சண்டைகள், குடும்ப வன்முறைகள் மற்றும் பாலியல் தாக்குதல் ஆகியவற்றோடும் தொடர்புடையது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில், மதுபானம் அருந்தும் பழக்கத்தால் குடும்பத்தில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பணம் நிராகரிக்கப்படுகிறது. இதனோடு, அறிக்கையின்படி, 30% வாகன விபத்துகளுக்கு மதுபானம் அருந்துவிட்டு வாகனத்தைச் செலுத்துவது ஒரு காரணமாகும்.

மலேசியாவில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் இறப்புகள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 17.6 விழுக்காடு ஆண்களும், 10.9 விழுக்காடு பெண்களும் சாலை விபத்துகளிலும், 16.8 ஆண்களும் 16.2 விழுக்காடு பெண்களும் கல்லீரல் அரிப்பினாலும், 2.2 விழுக்காடு ஆண்களும் 0.6 விழுக்காடு பெண்களும் புற்றுநோயினாலும் இறக்கின்றனர்.

மதுபானம் தொடர்பான ஆரோக்கியப் பிரச்சனையோடு ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு சென்றாலோ அல்லது மது அருந்துவிட்டு சச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகளில் சிக்கி பிடிபட்டாலோ ஒழிய மலேசியாவில் மதுபானம் தொடர்பான வேறு விதமான ஆரோக்கிய கண்காணிப்புகள் கிடையாது.

2008-ம் ஆண்டில் தாய்லாந்தில் மிகப் பெரிய மதுபானம் மற்றும் வடிசாலை (distiller), தாய்லாந்தின் பங்குச் சந்தையில் பட்டியலிட முயன்று தோற்றது. சுமார் 250 மதுபான எதிர்ப்பு ஆர்வளர்கள் பங்கு சந்தையின் முன் போராட்டத்தை நடத்தி மதுபானம் தொடர்பான நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதைத் தடுக்க சந்தை விதிகளை மாற்றுமாறு கோரினர்.

உண்மையில் அந்த நிறுவனம் 2004-லேயே தன்னை நிறுவ நினைத்து தோற்றுப்போனது. ஏனெனில் அப்பொழுது புத்த பிக்குகளும் மற்றும் மது எதிர்ப்புப் போராட்டவாதிகளும் அந்த நிறுவனம் தாய்லாந்தினரை மது அருந்த ஊக்குவிக்கும் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

தாய்லாந்தினர் மது அருந்துவதற்கு எதிரானவர்கள். ஏனெனில் அது நிறைய ஆரோக்கிய மற்றும் சமூகப் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். தாய்லாந்தினர் மதுவின் ஆபத்துகளை உணர்ந்து அதனைக் கட்டுக்குள் வைக்க நினைத்தால் மலேசியர்களும் அவ்வாறு செய்ய முடியும்.

மது விற்பனை கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அது உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு நிறைய துன்பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தி வருகிறது. கொக்கைன், எல்.எஸ்.டி (LSD), நிக்கோட்டின் மற்றும் கஞ்சா போன்ற போதை மருந்துகளின் பட்டியலிலேயே மதுவும் வருவதால் அது கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி 24.11.2020