கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களைக் குறைக்க ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கையில் இறங்குவீர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கோவிட்-19 பெருந்தொற்றின காரணமாக மார்ச் 20-லிருந்து விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மக்களின் மன நலத்தைப் பாதிப்புக்குள்ளாக்கி அதிகமான தற்கொலைச் சம்பவங்களுக்கு இட்டுச் சென்றுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார். ​

இந்த வருடம் மார்ச் 18-லிருந்து அக்டோபர் 30 வரை 266 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரச மலேசிய காவல்துறையின் (PDRM) புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ​ இதேக் காலக்கட்டத்தில் கோவிட்-19 இறப்புகள் (வெளிநாட்டினரையும் சேர்த்து) 249 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ​ ஆகையால் கோவிட்-19 இறப்புக்களை வைத்து கணக்கிடும் பொழுது தற்கொலையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 94 விழுக்காடு ஆகும்.

பெரும்பாலான தற்கொலை சம்பவங்களுக்குக் கடன் தொல்லைகள் பெரிய காரணங்களாக இருக்கின்றன. ​ இதற்கடுத்ததாக, குடும்பப் பிரச்னைகளுக்கும் அதனைத் தொடர்ந்து வரும் வாக்குவாதம் மற்றும் சண்டைகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தற்போதைய பெருந்தொற்றின் காரணமாக எழும் கையறு நிலை மலேசியர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ​ நாற்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன.

வேலையை இழத்தல், வருமானம் குறைந்துபோதல், கடன் தொல்லை, குடும்ப உறுப்பினர்கள் நோயினால் இறந்துபோதல், பெருந்தொற்று எப்பொழுது முடிவுக்கு வரும் என்ற தீராத குழப்பங்கள் மற்றும் மன உளைச்சல்கள் எல்லாம் தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றன என்று முகைதீன் கூறினார்.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், நெருக்கடியான இடங்களைத் தவிர்த்தல் போன்ற தற்போதைய “புதிய இயல்புக்கு” ஒருவர் தன்னை பொருத்திக்கொள்வதற்குச் சிரமப்படுகிறார். ​ உளவியல் ரீதியாக நோக்கினால், ஒருவரின் நீண்ட கால இயல்பினை மாற்றிக்கொள்வது என்பது அதிக சவால்களை உள்ளடக்கிய ஒரு காரியமாகும். ​

ஆகையால் அரசாங்கம் கீழ்கண்டவற்றை மேற்கொண்டு ஆக வேண்டும். எப்படிப்பட்ட மன அழுத்தம் மற்றும் உளச்சோர்வு தற்கொலைக்கு இட்டுச் செல்லும் என்பது தொடர்பான தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். ​ மன உளைச்சலில் உள்ளவர் தொடர்புகொள்வதற்கான அவசர எண்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெறுவதற்கு உதவுமாறு குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் கேட்டுக்கொள்ள வேண்டும். ​ அரசாங்க மற்றும் அரசாங்க சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பெயர் பட்டியல்களை மக்கள் அறியச் செய்ய வேண்டும். தூதரகங்கள் தங்களுடைய சொந்த அவசர எண்களைக் கொண்டிருக்க வேண்டும். ​ இதன் மூலம் பதிவு செய்த, பதிவு பெறாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இரு தரப்பினருமே அவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற முடியும்.

கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையும், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பது நல்ல அறிகுறியாகத் தென்படவில்லை. ​ தற்கொலைகளைத் தவிர்ப்பதற்கு மலேசிய அரசாங்கம் அச்சு ஊடகங்களை நம்பியிருப்பதைத் விடுத்து இன்னும் ஆக்கப்பூர்வமான வேறு வழிகளைக் கையாள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி
7.12.2020