சந்தையில் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளைத் திரும்ப மீட்டுக்கொள்ளுங்கள்

சந்தையில் இருக்கின்ற இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை திரும்ப மீட்டுக்கொள்ளுமாறு அதிகாரத் தரப்பினரைக் கேட்டுகொள்வதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.  ஏனெனில் முஸ்லிம்கள் தங்களை அறியாமலேயே இந்த ஹாலால் அல்லாத இறைச்சியை உட்கொள்ள நேரிடும்.

உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு  மவெ. 30 மில்லியன் பெருமானமுள்ள 1,500 டன் உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை ஜோகூர், செனாயில் உள்ள கிடங்கிலிருந்து பறிமுதல் செய்துள்ளது.  சம்பந்தப்பட்ட இறைச்சிகள் சீனா, யூக்ரெய்ன், பிரேசில் மற்றும் ஆர்ஜெண்டினாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.  இந்த ஹாலால் அல்லாத இறைச்சிகள் மறுபொட்டலம் செய்யப்பட்டு ஹலால் என்று முத்திரை குத்தப்பட்டு நாட்டுக்குள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது (சீனார் ஹரி

 

யான் 2.12.2020) என்றார் முகைதீன்.

அங்கீகரிக்கப்படாத இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்வது இது முதன் முறையல்ல.  இந்த வருட ஜூன் மாதத்தில் மலேசிய அதிகாரிகள் மவெ. 80,000 பெருமானமுள்ள உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை கிளாந்தான், பாசிர் மாஸிலிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.  2018-ல் அதிகாரிகள் பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5,106 கிலோகிராம் எடை கொண்ட, மவெ. 72,840 மற்றும் மவெ. 7,284 வரி  மதிப்பு கொண்ட 273 பெட்டிகளைக் கண்டெடுத்துள்ளனர்.

உள்நாட்டு இறைச்சிகளின் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தால், உணவகங்களும் இதர உணவு நிறுவனங்களும் உறைய வைக்கப்பட்ட இறக்குமதி இறைச்சிகளையே தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சமைத்துப் பரிமாறுகின்றன.  அதோடு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உற்பத்தியாளர்கள் உறைய வைக்கப்பட்ட இறக்குமதி இறைச்சிகளையே தங்களுடைய தயாரிப்பில் பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஹலால் முத்திரை குத்தப்பட்ட இறைச்சிகள் உண்மையிலேயே ஹலால்தானா என்பதற்கு உத்தரவாதமில்லாமல் இருக்கின்றது.  சந்தையில் உள்ள இறைச்சிகள் ஹலால் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரைக்கும் பயனீட்டாளர்கள் உறைய வைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட இறக்குமதி இறைச்சிகளை வாங்கி உட்கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும்.

உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள் நாட்டில் கள்ளத்தனமாகக் கொண்டு வரப்படுகின்ற காரணத்தால், அதிகாரிகள் உடனடியாக சந்தையில் உள்ள உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை மீட்டுக்கொள்ள வேண்டும்.  இது முஸ்லிம்களின் மத நம்பிக்கை சம்பந்தப்பட்டதால் இவ்வாறு கடத்தல் வேலைகளைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

 

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்