சந்தையில் விற்கப்படும் பூச்சிக்கொல்லி கலந்த காய்கறி மற்றும் அரிசி.

பத்திரிகை செய்தி 1.3.23

பூச்சிக்கொல்லி கறை படிந்த காய்கறிகள் மற்றும் அரிசிகள் சந்தையில் விற்கப்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

பி.ப.சங்கம் மேற்கொண்ட பூச்சிகொல்லி ஆய்வில் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் அரிசியில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் கண்டறியப்பட்டிருப்பதால், பயனீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.

ஆய்வில் மொத்தம் 112 காய்கறி மாதிரிகள் மற்றும் 20 அரிசி மாதிரிகளில் பூச்சிக்கொல்லிகள் உள்ளதா என சோதிக்கப்பட்டது.

அதில் 98 மாதிரிகள் அல்லது 87.5% காய்கறிகள் மற்றும் 11 மாதிரிகள் அல்லது 55% அரிசியில் பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பினாங்கில் உள்ள பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், சந்தைகள், மினி மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் போன்ற பல்வேறு விற்பனை நிலையங்களிலிருந்து மாதிரிகள் வாங்கப்பட்டன.

அதன் பிறகு அவை அனைத்தும் கொரியாவில் உள்ள பூச்சிக்கொல்லிகள் சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வோன்ஜின் இன்ஸ்டிடியூட் ஃபார் ஆக்குபேஷனல் அண்ட் என்விரோன்வோமென்டல் ஹெல்த் (WIOEH) அதாவது கொரியாவில் பிரசித்திப் பெற்ற வோஜின் சுற்றுச்சூழல் சுகாதார ஆய்வுக்கூட உதவியுடன், கொரியாவில் உள்ள Financial Industry Public Interest Foundation (FIPIF) என்ற அமைப்பின் ஆதரவுடன் இந்த ஆய்வு செய்யப்பட்டது என முகைதீன் தெரிவித்தார்.

பினாங்கில் விளையும் முக்கிய காய்கறிப் பகுதியான ஆரா குடாவில் உள்ள  பண்ணைகளில் இருந்து சோதனை செய்யப்பட்ட காய்கறிகளில் பெரும்பாலானவை சுற்றியுள்ள மாநிலங்களான கெடா, பெர்லிஸ் மற்றும் பேராக் ஆகிய பகுதிகளுக்கு வினியோகிக்கப்கப்படுகின்றன.

சோதனை முடிவுகளில் காய்கறிகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

தவிர, மலேசியாவில் பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் இருப்பதும்
கண்டறியப்பட்டது.

ஒரு காய்கறியில் 35 கலவைகள் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர். தற்போது மலேசியாவின் பயிர்களில் பூச்சிக்கொல்லி எச்சம் தொடர்பான சட்டம் உணவு ஒழுங்குமுறை 1985ன் பதினாறாவது அட்டவணையின் (விதிமுறை 41) கீழ் உள்ளது.

அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகள் மட்டுமே அந்தந்த பயிர்களில் இருக்க அனுமதிக்கப்படுகிறது. அதிகப்படியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர, விவசாயிகள் தடைசெய்யப்பட்ட அல்லது அதில் இருக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர்.

பல பயிர்களில் பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது, அதில் அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, தர்பூசணி, வெள்ளரி மற்றும் தக்காளி போன்ற பழங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் அபாமெக்டின் என்ற பூச்சிக்கொல்லி செலரி மற்றும் சின்ன வெங்காயத்தில் காணப்பட்டது.

அரிசியில் மட்டுமே அனுமதிக்கப்படும் கார்போஃபியூரான் சில இலை காய்கறிகளில் காணப்பட்டது.
(கார்போஃபுரான் மே 2023 முதல் தடை செய்யப்பட்டுள்ளது)

சில மாதிரிகளில் மாலத்தியான் மற்றும் மெட்டாஃப்ளூமிசோன் போன்ற பூச்சிக்கொல்லிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

உள்ளூர் விவசாய விளைபொருட்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் அளவு மற்றும் வகைகள் பற்றி மலேசிய பயனீட்டாளர்கள் அறிந்திருக்கவில்லை, ஏனெனில் இது குறித்து அதிக விளம்பரம் இல்லை.

இருப்பினும் மலேசிய காய்கறிகள், சில சமயங்களில் அதிக பூச்சிக்கொல்லி உள்ளடக்கம் காரணமாக வெளிநாடுகளில் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.
பூச்சிக்கொல்லிகளை வாங்க விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதால், நமது அரசாங்கம் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தவிர சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளும் விவசாயிகளுக்கு கிடைக்கின்றன.
பல விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளின் ஆபத்துகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதும், பாதுகாப்பு உபகரணங்களை அணிவது போன்ற தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

பொதுவாக பயிற்சி பெறாத வெளிநாட்டினருக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த பணம் வழங்கப்படுகிறது.
பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்க சரியான இடம் இல்லை என்பதையும் பி.ப.சங்கம் கண்டுபிடித்தது.

சில நேரங்களில் அது கருவிகள் மற்றும் உணவுகளுடன் ஒரே அறையில் வைக்கப்படுகிறது.
வெற்று பூச்சிக்கொல்லி கொள்கலன்கள் அதற்கென சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவை சீரற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே சந்தையில் உள்ள உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லியின் அளவு குறித்து தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு பி.ப.சங்கம் அறைகூவல் விடுக்க விரும்புகிறது. அதன் முடிவுகள் பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இது பாதுகாப்பான உணவை பயனீட்டாளர்கள் தேர்வு செய்ய உதவும்.

உணவு ஒழுங்குமுறை 1985ன் பதினாறாவது அட்டவணையை (விதிமுறை 41) கண்டிப்பாக அமல்படுத்தவும் நல்ல விவசாய முறைகளை அமல்படுத்தி கண்காணிக்கவும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விவசாயிகளுக்குக் கல்வித் திட்டத்தை நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், பொதுமக்கள் சொந்த இயற்கை காய்கறிகளை வளர்க்க முயல வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்