சாயங்களில் இருக்க வேண்டிய அதிக பட்ச காரீய அளவை நிர்ணயம் செய்வீர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

அனைத்துலக காரீய நச்சு தடுப்பு வாரத்தை முன்னிட்டு, சாயங்களில் உள்ள காரீயத்தை விதிமுறைகளின் மூலம் அகற்றுவதற்கு மலேசிய அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 25-31 அக்டோபர் 2020-ஐ அனைத்துலக காரீய நச்சு தடுப்பு வாரமாக அங்கீகரித்துள்ளது.  இந்த வாரத்தில் காரீய நச்சுத்தன்மையினால் குழந்தைகள், கர்ப்பிணிகள், தொழிலாளர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்து அதற்கான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப் படுகின்றன.
காரீயம் வெளிப்படும் அளவு எவ்வளவு குறைவாக இருந்தாலும் அது தீங்கினை விளைவிக்கிறது.  காரீயத்திற்குப் பாதுகாப்பு அளவு என்று கிடையாது.  சிறார்கள், குறிப்பாக 6 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் காரீய நச்சத்தன்மையினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.   உணவு உட்கொள்ளுதல், சுவாசித்தல், அல்லது நச்சுக்கொடி மூலமாக ஒரு குழந்தையின் உடலில் காரீயம் புகும்பொழுது, அது உடலில் உள்ள உறுப்புகளிலும் இயக்கத்திலும் சேதத்தை விளைவித்துவிடும்.
மிகச் சிறிய அளவு காரீய பாதிப்பு கூட மிகவும் மோசமான, ஈடு செய்ய முடியாத நரம்பியல் சேதங்களை ஏற்படுத்திவிடும். ஒரு குழந்தை காரீய பாதிப்புக்கு ஆளாகும்பொழுது, அதன் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சேதம் பிறகு பள்ளிக்கூடத்தில் அதன் கல்வி கற்றலில் சிரமங்களை உண்டாக்கக் கூடும்.
சிறார்களுக்கு காரீய நச்சுத்தன்மை ஏற்படுவதற்குக் காரீய சாயம் “ஒரு முக்கிய கிளர்ச்சிப் புள்ளி”யாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  காரீய பெட்ரோல் படிப்படியாக அகற்றப்பட்ட பிறகு, காரீய சாயமே குழந்தைகள் காரீய நச்சுத்தன்மைக்கு ஆளாகுவதற்கான முதன்மை காரணமாக இருக்கிறது.  ஆகையால் சிறார்கள் சாயத்தின் காரீய நச்சுத்தன்மைக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முகைதீன் கூறினார்.
அனைத்துலக மாசுபொருள் நீக்க வலையமைப்பின் (IPEN) ஒத்துழைப்போடு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஒரு சோதனையில் இணையத்தின் மூலமாகவும், பினாங்கில் உள்ள கடைகளிலும் 48 டப்பி தெளிப்பு சாயங்கள்  வாங்கப்பட்டன.  இந்தச் சாயங்கள் மொத்தம் 16 வெவ்வேறு பிரண்டுகளைக் கொண்டவையாகும்.  இவை ஊடுகதிர் ஒளிர்வண்ண (XRF) இரசாயன பகுப்பாய்வு கருவி கொண்டு சோதனை செய்யப்பட்டன.
சோதனை செய்யப்பட்ட 48 மாதிரிகளில், 12 மாதிரிகளில் காரீயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  இரண்டு மாதிரிகளில் 10,000 பிபிஎம் (மில்லியனில் ஒரு பகுதி) காரீயம் இருந்தது.  ஆக அதிகமாக 19,261 பிபிஎம் காரீயம் அளவு இருந்தது.
உபகரணங்கள், கார் பாகங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பள்ளிக்கூட பாட வேலைகளின் பொருட்களுக்கு சாயம் பூசுவதற்கென ஏரசோல் டப்பிகளில் இருக்கும் சாயம் பயன்படுத்தப்படுகின்றது.   காரீயத்தைத் தவிர்த்து, தெளிப்பு சாயங்களைப் பயன்படுத்துபவர்கள் இதில் உள்ள எசிட்டோன், தொலுயின் மற்றும் சைலின் போன்ற விரைவில் ஆவியாகக்கூடிய கரிம கூட்டுப்பொருள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இவை சுவாசத்தின் மூலம் நேரடியாகவே உடலில் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன.
1992ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 9 வகையான இனேமல் சாயங்களை சோதனை செய்தது.  இவற்றில் 7 வகையான சாயங்களில்  600 பிபிஎம்  காரீயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆக அதிகமாக 11,700 பிபிஎம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இன்னொரு ஆய்வில், 2004லிருந்து 2007 வரை மலேசியாவில் வாங்கப்பட்ட 72 இனேமல் சாயங்களில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
சாயத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே காரீயம் இருக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2016-ல் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.  ஏனெனில், அப்பொழுது சோதனை செய்யப்பட்ட சாயங்களின் மாதிரிகளில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவைகளில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பது கண்டறியப்பட்டது.  வேண்டுகோள் விடுத்து 4 வருடங்கள் ஆகியும் மலேசிய அரசாங்கம் சாயத்தில் இருக்க வேண்டிய காரீய அளவு பற்றி இன்னும் முறையான சட்டங்களைக் கொண்டு வரவில்லை என்றார் முகைதீன்.
சென்ற வருடம், மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் உள்ள விளையாட்டு மைதானக் கருவிகளின் 17 மாதிரிகளில் 11-ல் ஆபத்தான அளவில் காரீயம் இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டறிந்தது.

வீட்டுத் தளவாட மற்றும் அலங்காரப் பொருட்களில் இருக்கும் காரீயத்தின் அளவைக் கட்டுப்படுத்த மலேசியாவில் இது வரைக்கும் சட்டங்கள் இல்லை.  செப்டம்பர் 2020 வரைக்கும் உலகின் 40% நாடுகள் காரீயத்திற்கான சட்டத்தைக் கொண்டிருக்கின்றன என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிவித்துள்ளது.

ஆனாலும் தன்னிச்சையான தேசிய தரம் பலன் தருவதில்லை. மனித ஆரோக்கியத்தைப் பேணவும்  காரீயம் அடங்கிய சாய உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதியை நிறுத்தவும் ஒவ்வொரு நாட்டிலும், சட்டம், விதிமுறைகள், மற்றும் அமல்படுத்த முடிந்த தரம் ஆகியவை தேவைப்படுகிறது என்று  ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது.
கனடா, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா, நேபாளம், கென்யா, தான்சானியா மற்றும் அமெரிக்காவில் அலங்கார சாயங்களுக்கான அதிகபட்சம் காரீய உள்ளடக்கத்திற்கான தற்போதைய அளவு 90 பிபிஎம் ஆகும்.

மலேசியாவில் சிறார்களின் விளையாட்டு பொம்மைகளில் உள்ள காரீய அளவைப் பார்க்கும்பொழுது, சாயத்திலிருந்து காரீயத்தை அகற்றும் உலகளாவிய கூட்டணியின் இந்த நோக்கத்திலிருந்து மலேசியா விலகி இருக்கிறது என்றே தெரிகிறது.

காரீயம் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை விளைவிக்கும்.
காரீய சாயங்களை நீக்குவதற்கு உலகளாவிய நிலையில் விறுவிறுப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, சாயத்தில் காரீயத்தை அகற்றுவதற்காக சட்டத்தை அறிவித்து அமல்படுத்துமாறு மலேசிய அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
மலேசியா இவ்விஷயத்தில் மெத்தெனப் போக்கைக் கடைபிடிக்கக்கூடாது.  காரீயம் மிகவும் கடுமையான தீங்குகளை சிறார்களுக்கு விளைவிக்கும் என்ற காரணத்தால், நம்முடைய எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றும் பொருட்டு விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார்.
முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி
27.10.2020