சாயத்தில் காரீய நச்சு: விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை மனு சமர்ப்பித்தது.

சாயத்தில் உள்ள காரீய நச்சு தொடர்பாக அறிவிப்பு செய்து, அது தொடர்பான சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாறு கோரி பினாங்கு பயனீட்டாளர் சங்கம், 8.12.1020 தேதியிட்ட மகஜரை மலேசிய அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

காரீயம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் நச்சுத்தன்மையை உண்டாக்கும் என்பது பெரும்பாலோரால் அறியப்பட்ட விஷயமே. அது குறிப்பாக, குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அதிக ஆபத்தை விளைவிக்கும்.  காரீய நச்சுத்தன்மைக்குப் பாதுகாப்பான அளவு என்று ஒன்று கிடையாது. எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் அது உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கும்.  ஆகையால் காரிய நச்சுத்தன்மைக்கு ஆளாகாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

சாயங்களின் மூலம் நமக்கு ஏற்படும் காரீய நச்சுத்தன்மை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.  இதன் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகாமல் இருப்பதற்குச் சிறந்த வழி, சாயத் தயாரிப்பில் காரீயம் சேர்க்கப்படக்கூடாது என்று சட்டதிட்டங்களை உருவாக்குவதுதான்.

சாயத்தில் காரீய நச்சு தொடர்பான சட்டவிதிகள் இல்லாத நாட்டில், பயனீட்டாளர்களுக்கு விற்கப்படும் சாயத்தில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பதாக 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டுகிறது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆண்டுக்கணக்கில் மேற்கொண்ட பகுத்தாய்வில் சாயங்களில் காரீய நச்சு இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.  சில வகை சாயங்களில் காரீயம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

மலேசியாவில், வீடுகளில், அலங்காரப் பொருள்களில் மற்றும் தொழிற்துறை சாயங்களில் சேர்க்கப்படும் சாயத்தின் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பதற்கு  எந்த விதிமுறைகளும் கிடையாது. இப்போதைக்கு, 14 வயதுக்குக்குக் கீழ்ப்பட்ட சிறார்களின் விளையாட்டு பொம்மைகளில், 90 பிபிஎம்-க்கு மேற்பட்ட காரீயம் இருக்கக்கூடாது என்ற ஒரு சட்ட பாதுகாப்பு தரநிலை இருக்கிறது.  பயனீட்டாளர்கள் காரீய பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதைத் தவிர்க்க இந்தச் சட்டம் போதாது.

காரீய நச்சுத்தன்மையால் ஒருவர் ஆரோக்கியக் கேடுகளுக்கு ஆளாகாமல் இருக்க முதலில் அதன் பாதிப்புக்குத் தன்னை உட்படுத்தக்கூடாது. காரீய சாய உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், பயன்பாடு, வணிகம் ஆகியவை தடை செய்யப்பட வேண்டும்.  பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதற்குப் பரிகாரம் தேடுவதை விட காரீய சாயத்தைத் தடை செய்தால் நச்சுத்தன்மை பாதிப்புக்கான செலவினங்களைக் குறைக்க முடியும்.

நம் நாட்டுப் பிரதமர், உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தரநிலை இலாகா ஆகியவற்றிற்குப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அனுப்பிய கோரிக்கை மனுவில் காரீயத்தின் ஆபத்துகள், மலேசியாவில் பயன்படுத்தப்படும் சாயத்தில் உள்ள காரீயத்தின் அளவு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.  காரீய நச்சு சட்டத்தை உருவாக்கும் நோக்கத்தில், சாயத்தில் காரீயத்தை அகற்றுவதற்கான உலகளாவிய கூட்டணியின் வழிகாட்டி அறிக்கைகளையும் பி.ப.சங்கம் அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது.

சாயத்தில் காரீயம் அகற்றப்பட வேண்டும என்ற கோரிக்¨க்கு உலகம் முழுக்க ஆதரவு வலுத்து வரும் வேளையில், காரீய சாயம் தொடர்பான சட்டவிதிகளை கொண்டு வருதல், பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல், சாயத்தில் காரீயம் அகற்றுப்படுவதற்கான வேலைகளை முடுக்கிவிடுதல் ஆகியவற்றை மலேசிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சாய தொழிற்துறை காரீயமற்ற சாயத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கும்.  சாய தொழிற்துறையினர் புதிய விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதனைக் கண்காணித்து அமலாக்கம் செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார்.

ஆரோக்கியமான எதிர்காலத்திற்குக் காரீய சாயத்தைத் தடை செய்யுங்கள்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி                                                                                    
14.12.2020

CAP submits memorandum calling for lead paint law