பத்திரிகை செய்தி. 20.3.22
இன்று உலக சிட்டுக்குருவி தினம்.
நம்மை முகம் மலர வைப்பது மலர்கள் என்றால், நம் மனதை மகிழ்விக்க வைப்பது சிட்டுக்குருவிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த உலக நவீன மயமாக்கத்தின் காரணமாக பல பறவைகள், பூச்சிகள், பிராணிகள் அனைத்தும் மெல்ல அழிந்து கொண்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் சிட்டுக்குருவி. மிகச்சிறிய அளவில் பறந்து கீச் கீச் என்ற ஓசையுடன் மகிழ்ச்சியாக சுற்றித்திரியும் இந்த சிட்டுக்குருவி இப்போது அழிந்து வரும் ஒரு பறவையாக இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
உங்கள் பகுதியில், சிட்டுக்குருவி கூடு கட்டி வாழ்ந்து வந்தால் உங்கள் பகுதி ஒரு தூய்மையான பகுதி என்று பொருள்படும். அந்த இடம் நல்ல எண்ணங்களும், தூய்மைக்கேடு இல்லாத இடம் என பொருள் படும்
இது போன்ற இடங்களில் தான் சிட்டுக்குருவிகள் வாழும் என்றார் சுப்பாராவ். மேலும் அதிக கதிர் வீச்சு உள்ள இடங்களிலும் சிட்டுக்குருவிகள் வாழாது. அதாவது கைப்பேசி கோபுரங்கள் கட்டப்பட்டுள்ள இடங்களில் வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விடும் என்றார் சுப்பாராவ்.
முன்பு நமது வீட்டிற்கு அருகில் பல மரங்கள் இருந்தன. ஆனால் அவற்றை நாம் வெட்டி விட்டோம். அதனால், எல்லா பறவைகளும் வேறு இடம் தேடி போய்விட்டன. இந்த உலகில் ஒவ்வொரு உயிரினங்களின் இருப்பும் இன்றியமையாதது. அதை ஒரு போதும் புறம் தள்ள முடியாது.
சாதாரண தேனீயின் அழிவு பல்லுயிர் பெருக்கத்தையே நிலைகுலைய செய்வதுடன் மனித இனத்தையே அழிக்கவல்லது என சூழலியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மாறி வரும் பருவ நிலை மாற்றம், அதீத வெயில், மழை, காற்று போன்றவை உயிரினங்களை அச்சுறுத்தி வருகின்றன என்றார் சுப்பாராவ்.
நான்கு சுவருக்குள் ஒளிந்து கொள்ளும் மனிதனுக்கு பாதிப்புகள் பெரிய அளவில் தெரிவதில்லை. ஆனால் அவனால் ஏற்படும் அச்சுறுத்தலால் சிறு சிறு உயிரினங்கள் பெரிய அளவில் பாதிப்படைகின்றன.
பறவையினங்களில் அதிகளவில் காணப்படுவதுடன் அனேக நாடுகளில் பரவலான இனங்களாக சிட்டுக்குருவிகள் உள்ளன.
இவற்றை அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பாதிக்கின்றன. இதனால் ஆண்டுக்கு ஆண்டு சிட்டுக்குருவிகளின் விகிதம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். சிட்டுக்குருவிகள் விவசாயிகளின் தோழன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. விவசாயத்தில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளை சிட்டுக்குருவிகள் தின்கின்றன. ஆனால் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகளும் வயலில் உள்ள தானியங்களை உண்டு இறந்துவிடுவதாக சுப்பாராவ் தெரிவித்தார்.
இதனால் எதிர்காலத்தில் மனித இனத்திற்கே பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும் என உலக சுகதார அமைப்பு எச்சரிக்கிறது. சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தையும், சிறிய மூக்கையும், சிறிய உருவத்தையும், சிறிய கால்களையும் கொண்டவை சிட்டுக்குருவிகள் .
8 முதல் 24 செ.மீ., உயரம், 27 முதல் 39 கிராம் எடை கொண்ட இதன் ஆயுள் 13 ஆண்டுகள் . கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, புழு, பூச்சிகள் தான் இவற்றின் முக்கிய உணவுகள். அலை பேசி வந்ததற்கு பின் சிட்டுக்குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசி கோபுரத்திலிருந்து வெளியேறும் கதிர் வீச்சு குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடைவதில்லை. அழிந்து வரும் குருவி இனத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். வீடுகளில், ஜன்னல்களில் அவைகள் கூடு கட்ட வழி செய்ய வேண்டும். அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதை நாம் உறுதி எடுக்க வேண்டும் என சுப்பாராவ் கேட்டுக்
கொண்டார்.
என் வி சுப்பாராவ்
கல்வி ஆய்வு பிரிவி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.