ஜோகூர் ஸ்கூடாய் ஆற்றை,கிம் கிம் ஆற்றை போல மாசு படுத்திவிடாதீர்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகை செய்தி. 17.5.22

ஜோகூர் மாநிலத்தின் கிம் கிம் ஆறு மிகக் கடுமையாக தூய்மைக்கேடு அடைந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அதே போன்ற நிலமையை, ஸ்கூடாய் ஆற்றுக்கு ஏற்படுத்திவிட வேண்டாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சம்பந்தப்பட்ட பொருப்பாளர்களுக்கு நினைவு படுத்தியுள்ளது.

ஜொகூர் சுற்றுச்சூழல் இலாகா, சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 ன் கீழ், ஸ்கூடாய் ஆற்றின் மாசுபாட்டிற்கு காரணமாக இருந்ததாக அடையாளம் காணப்பட்ட தொழிற்சாலை நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் வலியுறுத்தினார்.

இந்த ஆறு மாசுபடுவது மட்டுமல்லாமல், பிரச்சனை நீடித்தால் பயனீட்டாளர்களின் ஆரோக்கியமும் பாதிக்கும் என்பதால் இந்த சம்பவம் குறித்து பி.ப சங்கம் கவலை கொண்டுள்ளது என்றார் அவர்.

எனவே, மாசு அச்சுறுத்தலால் ஏற்படும் பாதகமான விளைவுகளின் தீவிரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நடத்துநர்கள் மீது கடுமையான தண்டனையை விதிக்குமாறு சுற்றுச்சூழல் இலாகாவை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தொடர்ந்து விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்கூடாய் ஆற்றில் வெள்ளை நுரை இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் இலாகாவின் விசாரணையின் முடிவில் செனாய் தொழில்துறை பகுதி மூன்றாம் கட்டத்தில் உள்ள உலோகத் தொழிற்சாலை இந்த மாசுபாட்டு சம்பவத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்தது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜோகூர் மாநிலத்தில் ஆறுகள் மாசுபடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதும் இதனால் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களிடையே அச்சமும் கவலையும் ஏற்பட்டு வருகிறது.

ஆகவே பாசிர் கூடாங்கிற்கு அருகில் இருந்த கிம் கிம் ஆற்றிற்கு ஏற்பட்ட அதே கதி ஸ்கூடாய் ஆற்றிற்கு ஏற்படாது என நம்புவோம்.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து விதிகளும் பயம் அல்லது தயவு இல்லாமல் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

ஜோகூரிலுள்ள அனைத்து ஆறுகளும் அடிக்கடி சோதனை செய்யப்பட வேண்டும்.

மாசுபாடு அடைந்த ஸ்கூடாய் ஆற்றின் முடிவுகள் தொடர்பான விசாரணையின் முடிவுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்