டால்கம் பவுடருக்குத் தடை விதிக்கக்கூடாது என்று சுகாதார அமைச்சு செய்திருக்கும் முடிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பாத்திமா முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார். ஏனெனில் டால்கம் பவுடர் மற்றும் டால்க் சார்ந்த பொருள்கள் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.
அழகுசாதனத் தொழிற்துறை, டால்க் அடிப்படையிலான தயாரிப்புகளை ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தும் முறைகள் பற்றி, சுற்றுச்சூழல் பணிக்குழுவால் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட விபரங்கள் சுற்றுச்சூழல் சுகாதார நுட்பம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் என்னென்ன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
டால்க்-சார்ந்த 21 அழகு சாதனங்களில் 15 விழுக்காட்டில் கல்நார் (asbestos) இருப்பதாக மின்னணு நுண்ணோக்கியல் மூலம் பகுத்தாயப்பட்ட மாதிரிகள் காட்டுகின்றன. டால்க் சார்ந்த அழகு சாதனப் பொருள்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள்கள் உள்ளனவா என்பதனைக் கண்டறிய தற்போதைய அழகு சாதனத் தொழிற்துறை பயன்படுத்தும் ஆய்வு முறைகள் போதியனவாக இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திட டால்க்கை விட தளர்வான டால்க் இன்னும் ஆபத்தானது. ஏனெனில் உதிரியாக இருக்கின்ற காரணத்தால் அது விரைவில் சுவாசத்தின் மூலம் உள்ளிழுக்கப்பட்டுகிறது. இவ்வாறாக நுரையீரலில் புகும் டால்க் இழைகள் நுரையீரல் இழைநார்ச்சியை (pulmonary fibrosis) ஏற்படுத்துகிறது. இது திசுக்களில் வடுவை ஏற்படுத்தி சுவாசத்தில் சிரமத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும்.
சருமம் பட்டுப்போல் மின்ன வேண்டும் என்பதற்காகவும் நாற்றம் அகற்றுவதற்காகவும் டால்கம் பவுடர் பூசப்படுகிறது. டால்கம் பவுடரில் முக்கியமான கூறு மெக்னீசியம் சிலிகேட் ஹைட்ரோக்சைட் (இது டால்க் என்றறியப்படுகிறது). டால்க் அதன் உள்ளடக்கத்தில் கல்நார் (asbestos) போன்றுதான். குழந்தைகளுக்கான பவுடர், கண் பூச்சு, பிளஷ், நாற்றமகற்றும் திரவத்தில் டால்க் உள்ளது. கருப்பை புற்று மற்றும் சுவாசப் பிரச்னையோடு டால்க் தொடர்புடையது.
உலகம் முழுக்க அழகு சாதனப் பொருட்களில் டால்க் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட, அதன் புற்றுநோயை வரவழைக்கும் தன்மை காரணமாக டால்க்-சார்ந்த அழகு சாதனங்களை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது.
டால்க்-சார்ந்த குழந்தை பவுடர் விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் தடை செய்யவிருப்பதாக சமீபத்தில் ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதில் பாரபட்சங்கள் காட்டாது, டால்க்-சார்ந்த அழகு சாதனங்களின் விற்பனை உலகம் முழுக்கவே நிறுத்தப்பட வேண்டும் என்று சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் கூறி அந்நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை அமெரிக்க மக்கள் தொடுத்துள்ளனர். அவர்களுக்கு ஜோன்சன் & ஜோன்சன் பில்லியன் கணக்கிலான இழப்பீட்டினை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
அலாபாமாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் குழந்தை பவுடரைப் உபயோகித்ததாலும் தன்னுடைய பிறப்புறுப்பை சுத்தப்படுத்துவதற்கு வேறு சில ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளைப் பூசியதாலும் அவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் அவர் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார். அக்டோபர் 2020-ல் இதுபோன்று இன்னும் 1000 டால்கம் பவுடர் சம்பந்தமான நீதிமன்ற வழக்குகளுக்கு ஜோன்சன் & ஜோன்சன் $100 மில்லியன் இழப்பீடு வழங்க சம்மதித்துள்ளது.
அமெரிக்காவில் புற்றுநோய் சம்பந்தமான நீதிமன்ற வழக்குகளும் பயனீட்டாளர் புகார்களும் பெருகிக்கொண்டே போகின்ற காரணத்தால் பிரண்ட்ஸ் சேனல் மற்றும் ரெவ்லோன் & லோரியல் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் 9 ஜூன் 2020 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்னும் நிறைய அழகுப் பராமரிப்புப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் டால்க் பவுடர் விற்பனையை நிறுத்தியுள்ளதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஜெர்மன் நிறுவனம் பியர்ஸ்டோர்ஃப் அகாத், 2018-லிருந்து அதன் தயாரிப்பான நீவியா குழந்தை பவுடரில் டால்க் பயன்படுத்துவதற்குப் பதிலாகச் சோளமாவு பயன்படுத்தி வருகிறது.
மலேசியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை புற்று ஐந்தாவது நிலையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் 500 பெண்களுக்கு இந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஐம்பது வயதுகளில் இருக்கும் மலேசியப் பெண்களுக்கு இது பரவலாக இருக்கிறது. ஆக அதிகமாக மலாய்ப் பெண்களுக்கும், அதனையடுத்து சீன மற்றும் இந்தியப் பெண்களுக்கு இது இருக்கிறது. கருப்பை புற்று ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் காண்பிக்காமல் வளர்ந்து, நோய் முற்றிய இறுதிக்கட்டத்தில்தான் தெரிய வரும்.
டால்க் நச்சுத்தன்மை வாய்ந்தது. கருப்பை மற்றும் நுரையீரலில் கட்டிகளை உருவாக்கும். டால்க் துகள்கள் இனப்பெருக்க உறுப்பில் புகுந்து கருப்பை உள்வரியில் பொதிந்துகொள்ளும். பெண்களுக்கு உருவாகும் கருப்பைக் கட்டிகளில் டால்கம் பவுடர் துகள் இருந்ததாகவும் பெரும்பாலும் இவர்கள் தங்கள் பிறப்புறுப்புகளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துபவர்களாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டால்கம் பவுடரின் நுண்ணிய துகள்கள் நுரையீரலுக்குள் புகுவதால் அவை நுரையீரலுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வெண்மேகம் போன்றிருக்கும் அதன் துகள்களை குழந்தைகளும் பெரியவர்களும் சுவாசிக்கின்றனர். குழந்தைகளுக்கு இடைத்துணி மாற்றும்பொழுது பூசப்படும் இந்தப் பவுடர்கள் குழந்தைகளுக்கு இறப்பைக் கூட ஏற்படுத்தியுள்ளன. டால்க் ஒரு குழந்தையின் மூச்சுக்குழலை வீங்கச் செய்து நுரையீரல் அழற்சிக்கு (pneumonia) இட்டுச் செல்கிறது. டால்கம் பவுடர் குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
குழந்தைப் பவுடரை தவறுதலாகச் சுவாசித்த காரணத்தால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துபோயுள்ளதாகவும் அல்லது மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. விரும்பத்தகாத வாடையை விரைவில் ஈர்த்துக்கொள்வதால் டால்க் குழந்தைகளிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டால்கம் பவுடரை குழந்தையின் உடலில் கொட்டித் தட்டிப் பூசுவது அவர்களின் நுரையீரலை ஆபத்துக்குள்ளாக்கும். ஆக, புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களை குழந்தைகளின் உடலில் பயன்படுத்தி அவர்களின் ஆரோக்கியத்திற்கு நம்மையறியாமல் உலை வைக்கிறோம்.
டால்கம் பவுடரின் ஆபத்துகள் அதிகமாக இருந்தாலும் கூட, சந்தையில் நிறைய வணிகச் சின்ன டால்கம் பவுடர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் சில குழந்தைகளைக் குறி வைத்துத் தயாரிக்கப்படுபவையாகும்.
டால்க் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்கள் மற்றும் பராமரிப்புப் பொருள்கள் விளைவிக்கும் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 20.11.2020 அன்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதிகாரத் தரப்புக்கு கோரிக்கை மனு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளது. ஆகையால் டால்க் சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் டால்கம் பவுடரைத் தடை செய்யுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் ஒரு முறை சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகிறது.
பயனீட்டாளர்களும் இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும். டால்க் சேர்க்கப்பட்ட பொருள்களுக்குப் பதிலாக சோளமாவு மற்றும் அரிசி மாவு சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பவுடர்களை அவர்கள் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் வேனற்கட்டிகளை குணப்படுத்துவதற்கு இது போன்ற பவுடர்கள் பூசுவதை விடுத்து பெற்றோர்கள் இயற்கையான களிம்புகளைத் தடவ வேண்டும்.
பாத்திமா முகம்மது இத்ரிஸ்
துணைத் தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
23.12.2020