தடைசெய்யப்பட்ட சரும ஒட்டு விற்பனை குறித்து அமைப்புகள் கண்டனம்: அதிக அளவு காரீயமும் பாதரசமும் உள்ளது

பத்திரிக்கைச் செய்தி : 7 அக்டோபர் 2025

பினாங்கு, மலேசியா/கெஸான் சிட்டி, பிலிப்பைன்ஸ்.

உடலில் வீக்கம் மற்றும் வலியைப் போக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சீன சரும ஒட்டுகளை (skin patch) இணையம் வழி விற்பனை செய்வதற்குப் பயனீட்டாளர் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காகப் போராடும் மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் சமூக அமைப்புகள்,  கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தச் சரும ஒட்டினை ஆய்வு செய்தபொழுது அதில் காரீயம், பாதரசம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சாங்-சி-லோங் படு கோ என்ற (Chang-Sze-Long Badu Gao) என்ற இந்த சரும ஒட்டில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாதரசம் இருந்ததால் அதன் விற்பனைப் பதிவை மலேசிய சுகாதார அமைச்சின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் ரத்து செய்தது.  ஆனால், அதன் பின்னரும், இந்தச் சரும ஒட்டு தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் சுற்றுச்சூழல் கழிவு கூட்டணியும் (EcoWaste Coalition) கூட்டாக வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியின் மூலம் கடுமையாகச் சாடியுள்ளன.

இந்தச் சரும ஒட்டு சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப் பட்டுள்ளதோடு இதன் பதிவினை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரத் தரப்பு ரத்து செய்துள்ளது. அதனால் அதனை இனி மலேசியாவில் விற்கவோ, விநியோகிக்கவோ அனுமதி இல்லை என்று தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று அறிவித்திருந்தது.

இந்தச் சரும ஒட்டை விற்பனை செய்வோர் மற்றும் விநியோகிப்போர்  உடனடியாக அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்று தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரித்ததுடன், தவறிழைக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு, 1984-ஆம் ஆண்டின் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் அதிக அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

ஆரோக்கியம் தொடர்பான பொருட்களை இணையவழியோ அல்லது கடைகளிலோ வாங்கும்போது பயனீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார். சில சுகாதாரப் பொருட்களில் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் மூலப்பொருட்கள் இருக்கலாம் என்பதால் பயனீட்டாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கடந்த காலங்களில், நாட்டில் மட்டுமன்றி, தென்கிழக்காசிய பிராந்தியத்திலும் இணையவழி விற்கப்படும் போலியான மற்றும் தரமற்ற பொருட்களையும் நாங்கள்  கண்டெடுத்திருக்கிறோம். பயனீட்டாளர் மற்றும் இணையத் தளங்கள் கட்டாயம் பொருளின் பதிவைச் சரிபார்த்து, அவை விற்பனையிலிருந்து நீக்கப்பட்டவையா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் முகைதீன்.

எகோவேஸ்ட் கூட்டமைப்பு நடத்திய இரசாயன பரிசோதனையின் படி, சாங்-ஸி-லாங் பாடு காவோவில் நச்சுத் தன்மை கொண்ட ஈயம் மற்றும் பாரா அதிக அளவில் உள்ளன.

தடை செய்யப்பட்டிருந்தாலும், மலேசியாவை தளமாகக் கொண்ட இணைய விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து, ஷோப்பி பிலிப்பைன்ஸ் (Shopee Philippines) மூலம் சாங்-சி-லோங் படு கோ  என்ற இந்த சரும ஒட்டு மருந்தை எங்களால் வாங்க முடிந்தது என்று சுற்றுச்சூழல் கழிவுக் கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஐலீன் லுசெரோ கூறியுள்ளார்.  ஆபத்தான இரசாயனங்களால் மாசுபடுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய இணையத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார் அவர்.

இந்தச் சரும ஒட்டு மருந்தில் எவ்வளவு பாதரசம் உள்ளது என்பதைக் கண்டறிய ஆர்வம் கொண்ட இந்த அமைப்பு, ‘Olympus Vanta M Series X-Ray Fluorescence (XRF)’  என்ற பகுப்பாய்வுக் கருவியைப் பயன்படுத்தி அந்தத் சரும ஒட்டைப் பரிசோதித்தது. அதில் பாதரசம் மட்டுமின்றி, காரீயமும் முறையே 486 பிபிஎம் மற்றும் 100,000 பிபிஎம்-க்கும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) வரையறுத்துள்ள ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் 10 இரசாயனங்கள்  பட்டியலில் பாதரசம் மற்றும் காரீயமும் அடங்கும். இந்த இரசாயனங்கள் குறைந்த அளவில் இருந்தாலும் கடுமையான சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இது தாயின் கருப்பையில் இருக்கும் சிசுவின் ஆரம்பகால வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததுடன், நரம்பு மற்றும் செரிமானக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு பாதிப்பு, நுரையீரல், சிறுநீரகம், சருமம், கண்களிலும் நச்சுத்தன்மைகளையும் ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளது.

காரீயக் கசிவு உடல் இயக்கத்தைப் பாதிக்கும். குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கும், குழந்தைப் பேறு பருவத்தில் உள்ள பெண்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியதுடன், காரீயம் எந்த அளவில் இருந்தால் தீங்கை விளைவிக்கும் என்பதற்கான அளவுகோல்களும் அறியப்படவில்லை என்றும் கோடிட்டுக் காட்டியிருந்தது.

சிறார் காரீய நச்சுத்தன்மைக்கு எளிதில் ஆளாகின்றனர். குறிப்பாக, உடலில் உள்ள மத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு இது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

காரீயம் நீண்ட காலத்திற்குக் கேடுகளை ஏற்படுத்துகிறது. இரத்தக் கொதிப்பு, இருதயக் கோளாறுகள் மற்றும் சிறுநீரக பாதிப்பும் இவற்றில் அடங்கும் என்று உலக சுகாதார நிறுவனம் மேலும் கூறியுள்ளது. கர்ப்ப காலத்தில் காரீயப் பாதிப்புக்கு உள்ளாகுவோருக்கு கரு வளர்ச்சி பாதிப்பு மற்றும் குறைப்பிரசவமும் ஏற்படலாம்.

தடை செய்யப்பட்ட ‘சாங்-சி-லோங் படு கோ’ என்ற இந்த சரும  ஒட்டை  இணைய விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் சுற்றுச்சூழல் கழிவுக் கூட்டணியும், இணைய விற்பனைத் தளங்களின் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளன.  அதற்கு இணங்காத விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவை வேண்டுகோள் விடுத்துள்ளன.

பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் சுற்றுச்சூழல் கழிவுக் கூட்டணியும், அனைத்துலக மாசுநீக்கிப் பிணையத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளாகும். இது பொது நல அமைப்புகளின் ஓர் உலகளாவிய வலையமைப்பாகும். இந்த அமைப்பு விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கிழைக்கும் அபாயகரமான பொருட்களை உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, அப்புறப்படுத்தவோ கூடாது என்பதை வலியுறுத்தும் கொள்கைகளுக்காக வாதாடியும் வருகிறது.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

ஐலீன் லுசெரோ
தேசிய ஒருங்கிணைப்பாளர்
சுற்றுச்சூழல் கழிவுக் கூட்டணி

உசாத்துணை:
 https://www.npra.gov.my/…/SM-PRODUK-Chang-Sze-Long-Badu…
 https://shopee.ph/CHANG-SZE-LONG-BADU-GAO-5s-i.1257805563…
 https://www.who.int/…/fact…/detail/mercury-and-health
 https://www.who.int/…/detail/lead-poisoning-and-health