பத்திரிகைச் செய்தி 20.02.2025
நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் விலை உயர்வா?
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை.
தேங்காய் பற்றாக்குறையை தீவிரமாக தீர்க்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் விவசாய அமைச்சை அவசரமாக கேட்டுக்கொண்டுள்ளது. தேங்காய் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிக்க, மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையமான ஃபாமாவை வலியுறுத்துகிறது பி.ப.சங்கம்.
பினாங்கில் சமீபத்தில் நடத்தப்பட்ட சந்தை ஆய்வில், தேங்காய்களின் விநியோகம் குறைந்துள்ளதை காட்டியிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார். மேலும் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக தேங்காய் பாலின் விலை உயரக்கூடும் என தேங்காய் வியாபாரிகள் கவலை கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்றார் முகைதீன். இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களின் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது ஒவ்வொன்றும் மவெ 4.00 ஐ எட்டியுள்ளது.
அதே நேரத்தில் உள்ளூர் தேங்காய்களின் பற்றாக்குறையும் மோசமடைந்துள்ளது. இந்த விலை உயர்வு, தேங்காய் பாலின் விலையில் அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளது என்றார் அவர்.
தேங்காய் பால் ஒரு கிலோவிற்கு மவெ16.00 வரை உயர்ந்துள்ளது. தேங்காய்களின் விநியோகம் தொடர்ந்து குறைந்து வருவதால், தேங்காய் பாலின் விலை அதிகரிக வாய்ப்புள்ளது.
ரம்ஜான் மாதத்திற்குள் ஒரு கிலோவின் பால் மவெ 20.00 ஐ எட்டும் என்று வர்த்தகர்கள் கணித்துள்ளனர் என்றார் முகைதீன்.
இந்த தேங்காய் பற்றாக்குறை பிரச்சினையைஏற்கெனவே எழுப்பிய போதிலும், போதுமான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்வதற்காக அண்டை நாடுகளிலிருந்து அதிக தேங்காய்களை இறக்குமதி செய்வதாக ஃபாமா உறுதியளித்த போதிலும், பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
ரமலான் பண்டிகைக்கு முன்னர் இந்த தொடர்ச்சியான பிரச்சினையை தீர்க்குமாறு ஃபாமா மற்றும் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்