தைப்பூசத்தில் உணவு விரயம் வேண்டாம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

மலேசியர்களாகிய நாம் உணவு பிரியர்கள். நமது சுவைக்கு ஏற்றவாறு உணவுகளை வழங்கும் உணவகங்களுக்கும், உணவு அங்காடிகளுக்கும் குறைவே இல்லை.

அதே வேளை உணவுகளை விரயம் செய்வதிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல.  திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி நாம் 16,687 டன் உணவைத் தினசரி விரயம் செய்கின்றோம்.  இது 12 மில்லியன் மக்கள், 3 வேளை வயிறாற சாப்பிடும் அளவாகும்.  இப்படி வீசப்படும் உணவுகளில் குறைந்தது 3,000 டன் உணவுகள் உண்பதற்கு ஏற்ற நிலையில் உள்ள உணவாகும் என பி.ப.சங்க கல்வி அதிகாரி சுப்பாராவ் கூறினார்.

விழக்காலங்களின் போது குறிப்பாக தைப்பூசத்தின் போது இந்த விரய எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். தைப்பூசத்திற்குத் தண்ணீர் பந்தல்கள் அமைத்து பக்தகோடிகளுக்கு அன்னதானமும், பானங்களும் வழங்குவது இந்துக்களின் வழக்கமாகும்.  பசிக்கு உணவும் தாகத்திற்கு நீரும் வழங்குவது மிகப்பெரிய தானமாகும்.

இருப்பினும் இக்காலக்கட்டத்தில் அதிகமான தனிநபர்களும், இயக்கங்களும் அன்னதானம் வழங்க முன்வந்திருப்பது, விரயத்தையும் சேர்த்து அதிகரிக்கச் செய்திருக்கிறது.  நிறைய இடங்களில் சாப்பிட்டு முடிக்காத உணவுப்பொட்டலங்கள் குப்பை தொட்டிகளில் நிறைந்து வழிவதை நாம் காணலாம் என சுப்பாராவ் கூறினார்.

இந்து மதத்தில் உணவு மிகவும் புனிதமாக கருதப்படும். உணவு கீழே சிந்திவிட்டால் கூட சிந்திய அன்னத்தைத் காலால் மிதிக்காதே என்று குழந்தைகளுக்குச் சொல்லி வளர்ப்பார்கள். இன்றைய நாள் வரை உணவைத் துடைப்பத்தால் கூட்டி தள்ளாமல், துணியால் துடைத்தே சுத்தப்படுத்துவார்கள்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதற்கு முன் சமைத்த உணவு கடவுளுக்குப் பிரசாதமாக படைக்கப்படும். ஆகையால் தைப்பூசத்தன்று வழங்கப்படும் உணவு பிரசாதமாகிறது என்பதை பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று சுப்பாராவ் சுட்டிக் காட்டினார். தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று இந்து சமயம் கூறுவதால்தான், பெரும்பான்மைய இந்திய அமைப்புகள் அன்னதானம் வழங்கி வருகிறது.

அன்னதானம் வழங்கும் இந்த பண்பை பி.பசங்கம் மிகவும் வரவேற்கிறது என்று கூறிய சுப்பாராவ், அதே வேளை உணவு விரயமாக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுக்கு கொண்டு வர விரும்புகின்றோம் என்று கூறினார்.தைப்பூசத்தன்று அன்னதானம் வழங்கும் அன்பர்களின் தாழ்மையான கவனத்திற்கு:

•    உணவு கேட்டு வருபவர்களுக்கு மட்டும் உணவு வழங்கவேண்டும், பந்தலுக்கு வருகிறவர்களுக்கெல்லாம் உணவு பொட்டலங்களைக் கையில் திணிக்கக்கூடாது.

ஒருவருக்கு ஒரு பொட்டலம் போதும்.  குடும்பதாருக்கும் உணவு கேட்பவர்களுக்கு கூடுதல் பொட்டலங்களை வழக்கலாம்.

•    ஒவ்வொரு பொட்டலத்தின் உணவின் அளவைக் குறைக்க வேண்டும். அதிகமான உணவு கொடுக்கப்படும் பொழுது மக்கள் அதனைச் சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால் வீச வேண்டி வரும்.

•    குழந்தைகளுக்ககென்று பாதி பொட்டலமாக மடித்து வைத்திருப்பது சிறப்பு

•    “பிரசாதத்தை வீணாக்காதீர்” என்ற வாசகத்தைப் பந்தலில் தொங்க விடுங்கள்.

•    சாப்பிட்டு முடித்த பொட்டலங்களை வீசுவதற்கு ஏதுவாக, பந்தலுக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட குப்பை தொட்டிகளை வைத்திருங்கள். (ஆலய நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்திருந்தாலும் பந்தல் உரிமையாளர்கள் இதை செய்வது சிறப்பு)

பக்தர்களின் அன்பான கவனத்திற்கும் சில வேண்டுகோள்களை பி.ப.சங்கம் முன் வைக்கிறது:

•    உங்களுக்கு தேவையான அளவு உணவை மட்டுமே எடுங்கள். ஒரு பொட்டலத்தை எடுத்து சாப்பிட்டு முடித்தப் பிறகு தேவை இருந்தால் இரண்டாவது பொட்டலத்தை எடுத்துக் கொள்ளலாம்.

•    உணவைச் சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால், மீதமுள்ளவற்றை வீட்டுக்குச் கொண்டு செல்லுங்கள்

•    ஒவ்வொரு பந்தலாக உணவு பொட்டலங்களைச் சேகரிக்கும் பழக்கம் வேண்டாம். இப்படி பல பந்தல்களில் சேகரித்து வந்து எந்த பொட்டலத்தில் தனக்கு பிடித்த உணவு இருக்கிறது, என்று ஆராய்ந்து, அதை சாப்பிட்டு விட்டு மற்ற பொட்டலங்களைத் தூக்கி எறியும் பண்பு வேண்டாம். நீங்கள் கையில் எடுப்பது பிரசாதம் என்பதை மறந்து விடாதீர்கள்.

•    குழந்தைகளிடம் உணவு விரயம் வேண்டாம் என்று கூறுங்கள், அவர்களுக்கு முன்னுதாரணமாக இருங்கள்.

தைப்பூசம் ஒரு புனிதமான சமய விழா. ஆகையால் நாம் உண்ணும் உணுவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு இறைவனுக்கும் அதை தயார் செய்தவர்களுக்கு பிரார்த்தனை செய்த பிறகே உணவை உண்ண வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் சமயமுமாகும்.

தைப்பூசத்திற்கு மக்கள் விரதம் இருப்பது, பேச்சைக் குறைப்பது, தன்னிடமிருக்கும் கெட்ட பண்புகளை விட்டொழிப்பது போன்ற கட்டொழுங்குகளைக் வலியுறுத்தும் ஒரு தினமாகும்.  இந்த கட்டொழுங்கு உணவு விஷயத்திலும் கடைபிடித்து உணவை விரயம் செய்யாமல், ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்காத வகையில் உணவு உட்கொள்ள வேண்டும்.  இது உணவு விரயத்தை குறைக்கும் என்று சுப்பாராவ் கூறினார்.

2020 தைப்பூசத் தினத்தில் மலேசியர்கள் அதிக விழிப்போடு செயல்பட்டு உணவு விரயம் சொய்யாமல், சூழலை மாசுபடுத்தாத வகையில் இயற்கையோடு பொருந்தி போகும் விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

நாம் ஒவ்வொருவரும் உணவு விரயமாவதை தவிர்த்தால், அது நமது நாட்டின் உணவு விரயத்தைக் குறைக்கும். மேலும் நமது வீடுகளில் உணவு விரயத்தைக் குறைத்தால், நமது பணத்தையும் மிச்சப்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று சுப்பாராவ் கூறினார்..

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

ஏ. தர்மன்
தலைவர்
மலேசிய இந்து சங்கம்
புக்கிட் பெண்டேரா பேரவை