தைப்பூசம் : ஒரு தேங்காய் மட்டும் உடையுங்கள். பக்தர்களுக்கு வேண்டுகோள்

வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி அன்று தைப்பூசத் திருநாளைக் கொண்டாடும் பக்தர்கள் குறைவான தேங்காய்களையே உடைக்க வேண்டும் என பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தேங்காய்களை உடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பணத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இந்திய சமுதாயத்தினரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் மலேசிய இந்து சங்கமும், குறைவான தேங்காய்களைப் பக்தர்கள் உடைக்க வேண்டும் என கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

தைப்பூசத்திற்கு தேங்காய் உடைப்பது காலங்காலமாக இருந்து வரும்  வேண்டுதலாகும்.  ஒருவருடையே உள்ள ஆணவம் உடைபட்டு உள்ளத்தூய்மையை வெளிப்படுத்தும் இந்த வெளிப்பாடு மிக பக்தியுடன் நிறைவேற்றப்படுகிறது.  உடைபட்ட தேங்காயை எடுத்து அதன் பருப்பை உட்கொள்வர் அல்லது சமையலுக்குப் பயன்படுத்திக்கொள்வர்.  உணவுப் பொருள் வீணாக்கப்படாமல் உண்ணப்படும் அழகான பாரம்பரியத்தை இது உணர்த்துகிறது.   கடவுளுக்கு அளிக்கப்படும் எந்த உணவுப்பொருளும் பிரசாதமாகக் கருதப்பட்டு அது பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அது விரயமாக்கப்படக்கூடாது.

தேங்காயில் சத்துக்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தாலும் அது சர்வ ரோக நிவாரணியாகக் கருதப்படுகின்ற காரணத்தாலும் அது வழிபாட்டின்போதும் சமய சடங்குகளின் போதும் பயன்படுத்தப்படுகிறது.  இந்துக்கள் தேங்காயை சமையலுக்கு மட்டுமல்லாமல் வெவ்வேறு நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் இன்றைய பெரும்பாலான பக்தர்கள் குறிப்பாக சீன பக்தர்களுக்கு தேங்காய் உடைப்பதன் தாத்பரியம் புரிந்து கொண்டிருக்கவில்லை. நிறைய தேங்காய் உடைத்தால் நிறைய அதிர்ஷ்டம் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தின்போது அவர்கள் உடைக்கும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் இறுதியில் குப்பைத்தொட்டிகளைச் சென்றடைகின்றன.  பிறகு அவை எரிக்கப்பட்டு புகையாக மாறி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இயற்கையை தெய்வமாக வணங்கிய பாரம்பரியத்திலிருந்து வந்த நாம் இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்கும் காரியத்தைச் செய்வதை கடவுள் நிச்சயமாக விரும்பமாட்டார்.
இவ்வாறான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் ஒரு தேங்காய் உடைத்தாலே போதுமானது.   ஆயிரக்கணக்கான தேங்காய்களை வாங்க பணத்தை செலவழிப்பதும் அறிவுடைமை அல்ல.  தைப்பூசக் கொண்டாட்டத்தின் பொழுது தேங்காயின் விலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  தற்பொழுது சந்தையில் தேங்காய் ஒன்று மவெ. 2.50 க்கு விற்கப்படுகிறது.ஆகையால் இந்துக்கள் இந்த தேங்காய் உடைக்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அது எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல உதாரணமாக இருக்கும் என்று இந்த இரு அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன.

#cap_thaipusam2020, #cap_ps2020, #cap_pasumaithaipusam2020

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
012-5374899

ஏ. தர்மன்
தலைவர்
அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனம்
மற்றும் சர்வதேச கூட்டமைப்பு,
மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலம்
012-405 1207