நமது உணவு இறையாண்மையை உறுதி செய்ய, நெல் விவசாயிகளை காப்பாற்றும்படி 14 பரிந்துரைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்பிக்கப்பட்டது.

பத்திரிகை செய்தி. 28.3.22

நெல் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பல பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அரசு மற்றும் எதிர்கட்சிகள் என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்த பெசாவா எனப்படும் மலேசிய நெல் விவசாய இயக்கத்தின் கோரிக்கையை, மலேசிய அரசாங்கம் தீவீரமாக கவனம் செலுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கமும், பூவுலகின் நண்பர்கள் இயக்கமும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

அந்த இயக்கத்தில் இந்த இரண்டு அமைப்புக்களும் உறுப்பினர்களாக உள்ளன. நெல் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான 14 பரிந்துரைகளை உள்ளடக்கியது அந்த மகஜர் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்டது என பி.ப.சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளனர்.

மகஜரில் உள்ள மிக முக்கியமான பிரச்சினை, புதிய தாவர வகைகளின் பாதுகாப்புச் சட்டமாகும். புதிய தாவர வகைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம், ஊப்போவ் மாநாட்டின் 1991 உடன் இணங்க, விவசாய இலாகா எடுத்துள்ள முயற்சியாகும்.

இந்த சட்டம் மிகப் பெரிய நிறுவனங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அதாவது விதைகளின் ஏகபோக உரிமை.

தற்போதுள்ள புதிய தாவர வகைகளின் பாதுகாப்புச் சட்டம் 2004 போதுமானதாக இருக்கும் வேளையில் எதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டம் மாற்றப்பட வேண்டும் என அவ்விருவரும் கேள்வி எழுப்பினர்.

ஏனெனில் ஊப்போவ் சட்டம், விவசாயிகளின் உரிமையை பறிக்கின்றது.

தற்போதுள்ள சட்டம் திருத்தப்படுவதாக விவசாய இலாகா சொல்கின்றது. ஆனால் அப்படி இல்லை. இந்த புதிய சட்டம், உழவர்-விதை மேலாண்மை அமைப்புகளை நம்பியிருக்கும் விவசாயிகளையும், அவர்களின் சேமித்த விதைகளை சேமித்தல், மீண்டும் பயன்படுத்துதல், பரிமாற்றம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற பாரம்பரிய நடைமுறைகளை நம்பியிருக்கும் விவசாயிகளை முழுமையாக பாதிக்கும் ஒரு சட்டமாக இது உள்ளது. அந்த உரிமைகளை மலேசிய நெல் விவசாயிகள் இழந்துவிடுவர்.

ஆகவே விதைகள் , விவசாயிகளுக்கு சொந்தமாகாது. அடுத்தது, பெரிய அளவிலான ஸ்மார்ட் நெல் வயல் (ஸ்மார்ட் எஸ்பிபி) திட்டத்தின் மூலம் நெல் மற்றும் அரிசித் தொழிலை படிப்படியாகக் கையகப்படுத்தும் திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது.

நிறுவப்படும் நெல் தோட்டங்கள்  நெல் மற்றும் அரிசி துறையில் பன்னாட்டு நிறுவனங்களின்

ஏகபோகத்தை உருவாக்கும். உண்மையில், விவசாயிகள் தங்கள் சுயாட்சி மற்றும் நிலங்களை இழக்க நேரிடும் அதே வேளையில், தற்போதுள்ள அரசாங்க மானியங்கள் மற்றும் விதை சந்தை, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயந்திரங்களை நிர்வகிக்க நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் ஏகபோகத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

நெல் விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளின் குரல் மற்றும் நலன் பொதுவாக தீவிரமாக பரிசீலிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த ஊப்போவ் சட்டம் 1991, விவசாயிகளின் பயிரிடப்பட்ட நிலம்  மற்றும் விதைகள் மீதான உரிமைகளை பறிக்கும்.

விவசாயிகளுக்கு நிலமும் விதையும் இன்றியமையாதது. நமது முக்கிய உணவை வழங்குவதிலும், நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும் சிறு விவசாயிகள் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

ஆகவே இந்த பரிந்துரைகளை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே ஊப்போவ் சட்டம் 1991யை ரத்து செய்யவும், விதை தர மசோதாவை அமலாக்குவதை நிறுத்தும் படி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

பருவநிலை மாற்றம், போர்கள் மற்றும் கோவிட் 19 போன்ற தொற்றுநோய்களின் வருகையால் உலகம் உணவு விநியோக நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், அரசாங்கம் நமது உணவு இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பது மற்றும் சிறு விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது இன்றியமையாதது என முகைதீன் அப்துல் காதர் மற்றும் மீனாட்சி ராமன் கேட்டுகொண்டனர்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்