நீடித்த நெகிழி மாசுபாடு.

முற்றுகைக்கு உள்ளாகும் சூழல் மண்டலம்!

நெகிழி மாசுபாடு பரந்து ஊடுருவுகின்ற ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  இது  வனவிலங்குகள், மண், நிலத்தடி நீர் ஆகியவற்றிக்குச் சேதங்களை  உருவாக்கி இறுதியில் பருவநிலை மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. அதிக காலத்திற்கு தாக்குப் பிடிக்கும் நெகிழியின் தன்மை மற்றும் அதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்ற காரணத்தால் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக சூழலில் தங்கியிருந்து  பல வடிவங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

நெகிழிகள் வனவிலங்குகளுக்கு ஆழமான பாதிப்புகளைஏற்படுவதோடு அவற்றின் விளைவுகளை பல ரூபங்களில் விட்டுச் சென்கின்றன. பிராணிகள் நெகிழிகளை உணவு என்றெண்ணி உட்கொள்ள முனையும்பொழுது அவை பிராணிகளின் உள்ளுறுப்புகளில் சிக்கிக்கொள்வதோடு அப்பிராணிகள் இறந்தும் போகின்றன.உதாரணத்திற்கு, கடல்ஆமைகள் நெகிழிகளை ஜெல்லிமீன் என்றெண்ணி விழுங்கி விடுகின்றன. இந்த நெகிழிகள் படிப்படியாக நீர்நிலைகளில் சிதையும்பொழுது அவற்றிலிருந்து நச்சு இரசாயனங்கள் கசிகின்றன. சிதைந்துபோன நெகிழிகள் நுண்ணிய துகள்களாக (microplastics) மாறும்பொழுது  கடல்வாழ் உயிரினங்கள் அவற்றைத் தங்களின் உணவு என்று நினைத்து உட்கொள்கின்றன.

நுண்ணெகிழிகளில் உள்ள இந்த நச்சு இரசாயனங்கள் கடல் உணவுகளில் கசிவதால், உணவு பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியத்திற்குப் பெருத்த அச்சுறுத்தலாகி வருகிறது என்று 2020-ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று கூறுகிறது. கடலுணவுகளுக்கு ஆதாரமாக இருக்கும் உயிரினங்கள் நுண்ணெகிழியின் தாக்கங்களுக்கு ஆளாகி,அவற்றின் எண்ணிக்கை குறைந்துபோய்,எதிர்காலத்தில் கடலுணவுகளை நம்பியிருக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.

கடல்வாழ் உயிரினங்கள் நெகிழிகளில் சிக்கிக்கொள்வது இன்னுமொரு பெரிய பிரச்சனையாகும். கடல் நாய், டால்ஃபின், பறவைகள் ஆகியவை இற்றுப்போன மீன்பிடி வலைகள், நெகிழி வளையங்கள், இதர சிதைந்த நெகிழிகளில் சிக்கிக் காயத்திற்கு உள்ளாகுவதோடு, அவற்றிலேயே மாட்டிக்கொண்டு மூழ்கி, முடக்கப்பட்டுஇறந்து போகின்றன.  நுண்ணெகிழிகளிலிருந்து கசியும் நச்சு இரசாயனங்களால் நிலைமை இன்னும் மோசமாகிறது. நெகிழிகளில் இருக்கும் பிஸ்பெனோல் ஏ, பெட்டலெட் ஆகியவை நீரில் கசியும்பொழுது அவை கடல்வாழ் உயிரினங்களின்உடலுக்குள் ஈர்க்கப்பட்டு, அவற்றின் நாளமில்லா சுரப்பிகளுக்கு இடையூறுகளை விளைவித்து, இனப்பெருக்கம் மற்றும் விருத்தியைப் பாதித்துவிடுகின்றன.

நெகிழிகள் நிலங்களுக்குச் சொல்லொணா பாதிப்புகளை உருவாக்குகின்றன. நெகிழிக் குப்பைகளைக் கண்டவாறு தூக்கி ஏறியும்பொழுது  அவை படிப்படியாக நிலத்தில் சிதைந்து நச்சு இரசாயனங்களைக் கசியச் செய்கின்றன.  இந்த இரசாயனங்கள்  மண் கலவையை மாற்றி, மண் ஆரோக்கியத்திற்கு ஆதாரமான நுண்ணுயிரிகளுக்குச் சேதம் விளைவிக்கின்றன.தாவரங்களின் நீர்ப்பிடிப்புத் தன்மை மற்றும் சத்துகள் தாவரங்களைச் சென்றடைவதில், மண்ணில் இருக்கும் நுண்ணெகிழிகள்இடையூறுகளை விளைவித்து அவற்றின்  வளர்ச்சியைத் தடுத்துவிடுகின்றன.

நெகிழிகள் சிதையும்பொழுது, அவை நிலத்தடி நீரில் ஊடுருவி ஆபத்தான இரசாயனங்களைக் கொண்டு சேர்க்கின்றன.  நிலத்தடி நீர் மாசுபாடு ஒரு தீவிர பிரச்னையாகும்.  ஏனெனில், அது மனிதன் மற்றும் பிராணிகளுக்கான குடிநீர் விநியோகத்தைப் பாதிக்கிறது.  நெகிழியிலிருந்து நிலத்தடி நீருக்குள் கசியும் நச்சு இரசாயனங்கள் நாளமில்லா சுரப்பி இயக்கச் சீர்குலைவு, இனப்பெருக்கச் சேதம், புற்றுநோய் பாதிப்பு போன்ற மோசமான ஆரோக்கியச் சீர்கேடுகளுக்கு இட்டுச் செல்லும்.

நெகிழி உற்பத்தி, பயன்படுத்துதல் மற்றும் தூக்கி எறிதல் ஆகியவை பல வழிகளில் பருவ நிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.  பெரும்பாலான நெகிழிகள் புதை படிமங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. நெகிழி உருவாக்கத்தின்பொழுது இவற்றைப் பிரித்தெடுத்துப் பக்குவப் படுத்தும்பொழுது கணிசமான அளவில் பசுமைக் குடில் வாயுவை உருவாக்குகின்றன.  உதாரணத்திற்கு, மிகவும் பரவலாகப் பயன்படுத்தும் நெகிழி வகையான போலிஎட்டிலின் உற்பத்தியின்பொழுது, பசுமைக் குடில் வாயுக்களான கரிவளி மற்றும் மீட்டேன் வெளியாக்கப்படுகிறது.

நெகிழிப்பொருள் நாள்பட சிதையும்பொழுது அதிலிருந்தும் பசுமைக் குடில் வாயு தொடர்ச்சியாக வெளியாகிறது. 2018-இல் ஹாவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் சூரிய ஒளி படும் நெகிழிகள் மீட்டேன் மற்றும் எட்டிலினை வளிமண்டலத்தில் வெளியாக்கி, புவி வெப்பத்தை அதிகரிப்பதாகத் தெரிய வந்துள்ளது. எரிஉலைகளில் எரிக்கப்படும் நெகிழிகளும் கரிவளியோடு சேர்த்து இதர ஆபத்தான இரசாயனங்களையும்  சூழல் மண்டலத்தில் வெளியாக்கி, காற்றுத் தூய்மைக்கேடு மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கு இட்டுச் செல்வதாகத் தெரிய வந்துள்ளது.

பெருங்கடல்களில் உருவாகும் நெகிழி மாசுபாடு,  பருவநிலை மாற்றத்தை உருவாக்கி கரிமத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும் கடல் சூழலியலின் தன்மைக்கு இடையூறுகளை விளைவிக்கிறது.  கடல்வாழ் நுண்ணுயிரிகள் அவற்றின் ஒளிச்சேர்க்கையின்பொழுது (photosynthesis) கரிவளியை ஈர்த்துக்கொள்கின்றன. அவை இறந்துபோகும்பொழுது, கடலுக்கு அடிப்பாகத்தில் படிந்து கரிமத்தைப் பிடித்து வைத்துக்கொள்கின்றன. ஆனால், இந்த உயிரினங்கள் நுண்ணெகிழிகளை உட்கொள்ளும்பொழுது அவற்றின் கரிமப் பிடிப்புத் திறன் சிதைக்கப்பட்டுக் குறைந்து போகிறது.  இதனால், பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான புவியின் இயல்பான திறன் பலவீனப்படுகிறது.

திறந்த வெளி எரிப்பின்பொழுது மற்றும் நெகிழிகளை எரிஉலையில் எரிக்கும்பொழுது டையோக்ஸின் மற்றும் இதர நச்சு இரசாயனங்கள் காற்றில் கசிகின்றன. எரிக்கும்பொழுது உருவாகும் சாம்பல்மற்றும் இதரஎச்சங்கள் குப்பை மேடுகளைச் சென்றடையும்பொழுது சூழலில் அதிக நச்சுதன்மை வாய்ந்த இரசாயனங்கள் பரவுகின்றன. திடக்கழிவுகளில் கசியும் நச்சு நெகிழிப் கூட்டுப்பொருள்கள் நீர்நிலைகளையும் உணவுச் சங்கிலியையும் மாசுபடுத்துகின்றன.

நெகிழி உற்பத்தியைக் குறைப்பது மற்றும் ஆபத்தான இரசாயனங்கள் உபயோகிப்பதைத் தடுப்பதே நெகிழித் தாக்கத்தைக் குறைப்பதற்கான முக்கிய தீர்வாகும்.

References:

An Introduction to Plastics and Toxic Chemicals | IPEN. (2022, November). IPEN (International Pollutants Elimination Network). https://ipen.org/documents/introduction-plastics-and-toxic-chemicals

Frequently asked questions on plastics and chemicals | IPEN. (2024, March). IPEN (International Pollutants Elimination Network). https://ipen.org/documents/frequently-asked-questions-plastics-and-chemicals

Plastics, EDCs & Health | IPEN. (2020, December). IPEN (International Pollutants Elimination Network). https://ipen.org/documents/plastics-edcs-health

How the Plastic Pollution Resolution Relates to Chemicals and Health | IPEN. (n.d.). IPEN (International Pollutants Elimination Network). https://ipen.org/documents/how-plastic-pollution-resolution-relates-to-chemicals-and-health

Ghost Nets: Why they endanger Marine life – Plastic Soup Foundation. (2020, May 1). Plastic Soup Foundation.
https://www.plasticsoupfoundation.org/en/plastic-problem/plastic-environment/ghost-nets/

Tribune, Z. E. C. D. (2019, January 7). Why is it so hard to decompose plastic? Columbia Daily Tribune.
https://www.columbiatribune.com/story/lifestyle/family/2019/01/07/why-is-it-so-hard/984920007/

Centre for International Environmental Law. (2022, February 1). Plastic and Climate: The Hidden Costs of a Plastic Planet – Center for International Environmental Law. https://www.ciel.org/plasticandclimate/

Lai, O. (2024, March 4). The detrimental impacts of plastic pollution on animals. Earth.Org. https://earth.org/plastic-pollution-animals/

Swaters. (2023, April 14). New Study Shows Plastics Release Greenhouse Gases, Contributing to Climate Change. Surfrider Foundation. https://www.surfrider.org/news/new-study-shows-plastic-as-source-of-greenhouse-gases-potentially-contribut