நுண்ணெகிழிகள் மனித ஆரோக்கியத்திற்கும் கடல் சூழல் மண்டலத்திற்கும் கொண்டு வரும் அச்சுறுத்தல்கள்!

உலகளாவிய நெகிழி உற்பத்தி அதிகரிப்பும் முறையற்ற கழிவு நிர்வாகமும், சுற்றுச்சூழலில் நெகிழிக் குப்பைகளை அதிகரிக்கச் செய்துள்ளன. ஒளிச்சேர்க்கை, மனித நடவடிக்கைகள் மற்றும் வானிலை மாற்றத்தால் விளையும் சிதைவுகள் போன்றவற்றால் நெகிழிக் குப்பைகள் நொறுங்கித் துகள்களாகி  நுண்ணெகிழிகளாக உருவெடுக்கின்றன (Haque & Fan, 2023).

பெருநெகிழிகளின் (macroplastics) பிரச்சனைகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் நுண்ணெகிழிகள், குறிப்பாக போலிஎட்டிலின், போலிபுரோப்பிலின் மற்றும் இதர சேர்மங்களால் உருவான நுண்ணெகிழிகள் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. நெகிழிப் பொருள் தயாரிப்பில்  உபபொருளாக வெளிப்படும் நெகிழித் துகள்கள்தாம் நுண்ணெகிழிகள் எனப்படுகின்றன.  இவை நேரடியாக நெகிழித் துகள்களாகவே தயாரிக்கப்படுபவையாக இருக்கலாம்.  இந்த நுண்ணெகிழிகள் சூழல் மண்டலத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மோசமான ஆரோக்கியக் கேடுகளையும் கொண்டு வருகின்றன.

நுண்ணெகிழிகள் மனித உடலின் திசுக்களிலும் இதர உறுப்புகளிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுவாசிப்பது மற்றும் உட்கொள்ளுதல் மூலம் உடலுக்குள் புகுந்து உடலுறுப்புகளின் இயக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி, ஆபத்தான இரசாயன பாதிப்புகளுக்கு இட்டுச் செல்கின்றன.

நுண்ணெகிழிகளின் வகைகள் மற்றும் தன்மைகள்.

நுண்ணெகிழிகளை, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரு  வகைகளாகப் பிரிக்கலாம். முதன்மை நுண்ணெகிழிகள் என்பது செயற்கை நெகிழிக் குறுணைகள்,  மணிகள், இழைகள், பொடி மற்றும் துகள்கள் ஆகும். இவை அழகு சாதனங்கள் மற்றும் நெசவுத் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகின்றன.  இரண்டாம் நிலை நுண்ணெகிழி என்பது பெரிய நெகிழிகளின் உராய்வு, சீதோஷ்ணத் தாக்கம், ஒளிப்பகுப்பு மற்றும் நுண்ணுயிர்கள் சிதைவால் உருவாகும் நெகிழித் துகள்கள் ஆகும் (Sulaiman et al., 2023).  முதன்மை நிலை நுண்ணெகிழிகள் அந்த வடிவத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு சூழலில் விடப்படுகின்றன. இரண்டாம் நிலை நுண்ணெகிழிகள் என்பது, பெரிய நெகிழிகளைப் பயன்படுத்தும்பொழுது சீதோஷ்ண மாறுதல்களுக்கு உட்பட்டு நுண்ணெகிழிகளாக உருவெடுப்பவை ஆகும் (Cverenkárová et al., 2021).

பெரிய நெகிழிகள் கண்களுக்கு எளிதில் புலப்பட்டுவிடும். ஆனால், நுண்ணெகிழிகள் அப்படி இல்லை. அவற்றின் நுண்ணிய அளவின் காரணமாக ஓர் உயிரின் செரிமான உறுப்புகளில் எளிதில் புகுந்து அவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும். இழைகள், துகள்கள், துண்டுகள்,  நுண்மணிகள், நுரைப்பம் என்று நெகிழியின் பல்வகை வடிவம் மற்றும் தன்மையின் காரணமாக அவை இருப்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.  இவ்வாறான பல்வேறு வடிவங்கள் அவற்றின் தயாரிப்பு நிலையில் நிகழும் மாற்றங்களினால் உருவாகின்றன. இதனால், காலப்போக்கில் அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகள் மாறுகின்றன (Rushdi et al., 2023).

மேலும், நுண்ணெகிழிகள் பல வித வண்ணங்கள், அளவுகள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. நீர்வாழ்வனவோடு அவற்றுக்கு உள்ள தொடர்பினைப் புரிந்துகொள்ள இது  முக்கியமாகும். சில நீர்வாழ் உயிரினங்கள் குறிப்பிட்ட வண்ணத்தில் இருக்கும் நெகிழிகளை தங்களுடைய உணவு என்று நினைத்து உட்கொண்டுவிடும். நெகிழியின் வண்ணங்கள் அதன் தூய்மைக்கேடு அளவினையும் குறிக்கின்றன.  உதாரணத்திற்கு, மஞ்சள் மற்றும் கருப்பு நுண்ணெகிழிகள் அதிக நச்சுதன்மையை கொண்டவை. வெள்ளை மற்றும் ஒளி ஊடுருவும் நெகிழிகளை நீர்வாழ் உயிரினங்கள் தவறுதலாக அவற்றின் தீனி என்று நினைத்து உட்கொண்டுவிடுகின்றன (Cverenkárová et al., 2021).

மலேசியக் கடல்களில் நுண்ணெகிழி தூய்மைக்கேடு.

கடல்களில் நிலவும் நுண்ணெகிழி மாசுபாடு உலக அளவில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனக் கழிவுகளைக் கடலில் கொட்டுவதால் சுமார் 0.199 கற்பம் (trillion) நுண்ணெகிழிகள் கடல் நீரில் தஞ்சமடைகின்றன (Sulaiman et al., 2023).

முகப் பூச்சுகள், பற்பசை, திரவ சவர்க்காரம், குளியல் ஜெல் மற்றும் அழகு சாதனப்பொருள்கள் ஆகியவற்றில் நுண்ணெகிழிகள் இருப்பதாக மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் முனைவர் சர்வமங்கள பிரவீனா அப்பளநாயுடு கூறுகிறார்.  இவற்றை நாம் பயன்படுத்திய பிறகு உருவாகும் கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து, நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதோடு உணவுச் சங்கிலி மூலம் மனித உடலுக்குள் புகுந்து ஆபத்தினை விளைவிக்கின்றன.

நீரியக்கவிசை மற்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மை காரணமாக நுண்ணெகிழிகள் நீர்நிலைகளைத் துளைத்து நீர்வாழ்வனவற்றின் உடலுக்குள் புகுகின்றன. இது சுற்றுச்சூழலுக்குப் பெரிய ஆபத்தாக உருவெடுத்திருக்கிறது (Sulaiman et al., 2023). மிதவை நுண்ணுயிரிகள், அலைகயலுருக்கள், துடுப்புக்கால் பூச்சிகள், சால்ப், பலகாலிப் புழுக்கள், புறவன் கூட்டு கடலுயிரினங்கள், முள்தோலி, கும்பிடுகிளிஞ்சில், மீன், கடல்பறவை, பாலூட்டி என்று உணவுச் சங்கிலியின் பல நிலைகளிலும்  நுண்ணெகிழிகள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. (Cverenkárová et al., 2021).

நெகிழி மூலம் தயாரிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு வலைகளால் நெகிழி நச்சுத்தன்மை இன்னும் தீவிரமாகியுள்ளது.  இவை தொடர்ச்சியாக நச்சுகளை நீரில் கசியவிடுகின்றன. நீர்வாழ் உயிரினங்கள் இவற்றை உட்கொள்ளும் பட்சத்தில் இந்த நுண்ணெகிழிகள் அவற்றின் திசுக்களில் குவிந்து உயிரினங்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதோடு ஒட்டு மொத்த சூழல்மண்டலத்திற்கும் இடையூறுகளை விளைவித்து நுண்ணெகிழிகளின் கூட்டுத் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நுண்ணெகிழிகள் மனிதனுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

மாசுக்கு உள்ளான உணவு மற்றும் நீரை உட்கொள்வதால் மனித இனம் நுண்ணெகிழிகளின் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதில் கடலுணவுகள் முதலிடம் வகிக்கின்றன.  உட்கொண்டவுடன் நுண்ணெகிழிகள் இரைப்பை-குடல் வழி ஈர்த்துக்கொள்ளப்பட்டு, ஆக்ஸீஜனேற்ற அழுத்தம், நச்சுத்தன்மை ஆகியவற்றோடு சேர்த்து திசுக்களுக்கு இடம் மாறவும் செய்கிறது (Alberghini et al., 2022).

நுண்ணெகிழி மாசுபாடு கடலுணவுகளோடு நின்றுவிடுவதில்லை. அது இதர வகை உணவுகளையும் பாதிக்கிறது. உதாரணத்திற்கு, கடல் உப்பில்  நுண்ணெகிழிகள் இருப்பதாக சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது (Cverenkárová et al., 2021). உணவில் நுண்ணெகிழிகள் பரவலாக இருக்கின்ற காரணத்தால் அவற்றை உண்கொள்ளும் பட்சத்தில் உடலில் சேமிக்கப்படும். இவ்வாறு, வெவ்வேறு உணவு வகைகளின் மூலம் உடலில் குவியும் நுண்ணெகிழிகள் அச்சத்தை உருவாக்குவதாக உள்ளன.

ஒட்டு மொத்தத்தில், சுற்றுச்சூழல், அன்றாட பயனீட்டுப் பொருள்கள், உணவுகள் முழுக்க விரவிக்கிடக்கும் நெகிழிகள் மற்றும் நுண்ணெகிழிகள் அச்சத்தை உருவாக்கும் ஒரு பொது ஆரோக்கியப் பிரச்சனையாகும்.  நெகிழிகள் பயன்பாடு அதிகரிக்கும்பொழுது, அதன் தொடர்ச்சியாக நுண்ணெகிழிகளும் சூழலில் அதிகரிக்கின்றன. இதனால், நெகிழி மாசுபாடும் அதிகமாகி சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் உலை வைக்கும்.  நெகிழி உற்பத்தி மற்றும் உபயோகத்தைக் குறைப்பது, அதற்கு மாற்றாக பாதுகாப்பான பொருள்களைப் பயன்படுத்துவது,  நெகிழி தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் நெகிழி அச்சுறுத்தலைக் குறைத்து மனித ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

இந்தக் கட்டுரை, மண்ணின் தோழர் கழகத்தின் பயிற்சி மாணவர் சித்தி நோர் ரோபானா பின்தி அப்துல் ரஷிட் கான் அவர்களால் எழுதப்பட்டது.  ரோக்ஃபெல்லர்  மனிதநேய ஆலோசகர்கள் கீழ் நெகிழித் தீர்வுகள் நிதியத்தின்  ஏற்பாட்டின் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது.

References

Alberghini, L., Truant, A., Santonicola, S., Colavita, G., & Giaccone, V. (2022). Microplastics in fish and Fishery products and Risks for Human Health: A review. International Journal of Environmental Research and Public Health, 20(1), 789.
https://doi.org/10.3390/ijerph20010789

Carr, S. A., Liu, J., & Tesoro, A. G. (2016). Transport and fate of microplastic particles in wastewater treatment plants. Water Research, 91, 174–182.
https://doi.org/10.1016/j.watres.2016.01.002

Cverenkárová, K., Valachovičová, M., Mackuľak, T., Žemlička, L., & Bírošová, L. (2021). Microplastics in the food chain. Life, 11(12), 1349.
https://doi.org/10.3390/life11121349

Haque, F., & Fan, C. (2023). Fate of microplastics under the influence of climate change. iScience, 26(9), 107649.
https://doi.org/10.1016/j.isci.2023.107649

Kurniawan, S. B., Said, N. S. M., Imron, M. F., & Abdullah, S. R. S. (2021b). Microplastic pollution in the environment: Insights into emerging sources and potential threats. Environmental Technology & Innovation, 23, 101790.
https://doi.org/10.1016/j.eti.2021.101790

Morhan, S. (2023, December). Alarm over Malaysia’s microplastic footprint. thesun.my.
https://thesun.my/local-news/alarm-over-malaysia-s-microplastic-footprint-HA11883444#googl_vignette

Plastic’s Toxic Chemical Problem: A Growing public health crisis (Executive Summary). (2021, December).  IPEN.
https://ipen.org/sites/default/files/documents/ipen-problem-with-plastics-v1_5-en.pdf

Praveena, S.M.*, Shaifuddin, S.N.M., Akizuki, S. 2018. Exploration of microplastics from personal care and cosmetic products and its estimated emissions to marine environment: An evidence from Malaysia. Marine Pollution Bulletin; 136: 135–140. Doi: 10.1016/j.marpolbul.2018.09.012

Report: Thousands More Chemicals in Plastics than Estimated. (2024, March 18). Voice of America.
https://learningenglish.voanews.com/a/report-thousands-more-chemicals-in-plastics-than-estimed/7532204.html

Rushdi, I., Rusidi, R., M. Wan M. Khairul, Hamzah, S., Wan Mohd Khalik, W. M. A., Tuan Anuar, S., Abdullah, N. S., E.M, N. K., Yahya, & A. Azmi, A. (2023). Microplastics in the Environment: Properties, Impacts and Removal Strategies. Malaysian Journal of Analytical Science. 27. 1216-1235.
https://mjas.analis.com.my/mjas/v27_n6/pdf/Rushdi_27_6_5.pdf

Sulaiman, R. N. R., Bakar, A. A., Ngadi, N., Kahar, I. N. S., Nordin, A. H., Ikram, M., & Nabgan, W. (2023). Microplastics in Malaysia’s aquatic environment: current overview and future perspectives. Global Challenges, 7(8).
https://doi.org/10.1002/gch2.202300047

Verma, R., Vinoda, K., Papireddy, M., & Gowda, A. (2016). Toxic Pollutants from Plastic Waste- A Review. Procedia Environmental Sciences, 35, 701–708.
https://doi.org/10.1016/j.proenv.2016.07.069