நெகிழியிலிருந்து விடுபடுங்கள்: நச்சு பாதிப்புகளைக் குறைக்க எளிய குறிப்புகள்!

நெகிழி மனித ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும்.  ஆகையால், நெகிழி உங்கள் உடலை ஊடுருவ அனுமதிக்காதீர். நெகிழியற்ற ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்கி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நெகிழி நச்சுச்தன்மைக்கு ஆளாகாமல் இருக்க  நீங்கள் மேற்கொள்ளும் சிறு முயற்சிகள் கூட நெகிழி பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒரு முறை பயன்படுத்தி வீசும் நெகிழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். நெகிழி பயன்பாட்டினை முற்றிலும் விலக்குவதை உங்கள் இலக்காகக் கொள்ளுங்கள். உங்கள் அன்றாட வாழ்க்கையில் எந்தெந்த சூழலில் நெகிழி அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று (எ.கா: உணவுப் பொட்டலம், சிறார் விளையாட்டு பொம்மைகள், சமையலறை உபகரணங்கள், இன்னும் பல) இனங்கண்டு அவற்றுக்கான மாற்றுப் பொருளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

நீங்கள் கீழ்குறிப்பிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

நெகிழி உணவு கொள்கலன்களைத் தவிர்த்துவிடுங்கள்

இரசாயனங்கள் நெகிழியிலிருந்து உணவுக்குப் பெயர்கின்றன. ஆகையால், நெகிழிக் கலன்களில் உணவைப் போட்டு வைப்பது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும்.  நெகிழியில் பல விதமான இரசாயனங்கள் இருக்கும்.  இந்த இரசாயனங்களில் பெட்டலெட்ஸ் மற்றும் பிஸ்பெனோல் ஏ ஆகியவையும் அடங்கும். இந்த இரசாயனங்கள், குறிப்பாக, நெகிழி சூடாகும்பொழுது உணவுகளில் கசியும். நெகிழிகளை நுண்ணலை அடுப்பில் வைத்து சூடாக்கும் பொழுது அதில் உள்ள இரசாயனங்கள் உணவில் கசிவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

நெகிழியிலிருந்து உணவுக்கு இடம்பெயரும் இரசாயனங்கள் பல விதமான ஆரோக்கியக் கேடுகளை உண்டு பண்ணும்.  உதாரணத்திற்கு, பிஸ்பெனோல் ஏ மற்றும் பெட்டலெட்ஸ் ஆகியவை நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தைச் சீர்குலைத்து ஹோர்மோன் இயக்கத்தில் இடையூறுகளை விளைவித்து, இனப்பெருக்கத்தில் பாதிப்பு, வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் இன்னும் பல விதமான ஆரோக்கியக் கேடுகளுக்கு இட்டுச் செல்லும். இவ்வாறான பாதிப்புகளைக் குறைப்பதற்கு, கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃக்குப் பாத்திரங்களை பயன்படுத்துவது உசிதம். இந்த ரக பாத்திரங்களைச் சூடுபடுத்தினாலும் கூட அவற்றிலிருந்து ஆபத்தான இரசாயனங்கள் கசிவதில்லை.

அப்படி நீங்கள் நெகிழிப் பாத்திரங்களைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றால்,  அவற்றை நுண்ணலை அடுப்பில் வைக்காதீர். ஏனெனில் இவ்வாறு செய்யும்பொழுது இன்னும் நிறைய இரசாயனங்கள் உணவுக்குள் கசியும்.  உணவு முற்றிலும் சூடு ஆறிய பிறகே அவற்றை நெகிழிப் பாத்திரங்களுக்கு மாற்ற வேண்டும்.  உணவை நெகிழிப் பாத்திரத்தின் விளிம்பு வரைக்கும் நிரப்பாதீர். சிறிது இடைவெளி இருந்தால்தான் உணவு நெகிழி மூடி மீது ஒட்டாமல் இருக்கும்.

நெகிழி மடிப்புப் பைகளைத் தவிர்த்துவிடுங்கள்

வழக்கமாகப் பயன்படுத்தும் நெகிழிப் பைகள், மடிப்புப் பைகள் ஆகியவற்றுக்குப் பதிலாகப் பருத்தியால் ஆன மடிப்புப் பைகள் (beeswax wraps) அல்லது  மறுபயனீடு செய்யக்கூடிய பைகளைப் பயன்படுத்தவும். பருத்தி மடிப்புப் பைகள், மறுபயனீடு செய்ய முடிந்தவை மற்றும் எளிதில் மக்கக்கூடியவை. ஆகையால், இவை சூழல் சிநேகமான தேர்வாகும். உணவுகளை மூடுவதற்கு இவை மிகப் பொருத்தமானவை. நெகிழியால் விளையும் ஆரோக்கியக் கேடுகளும் இவற்றில் இல்லை.

பருத்தி மடிப்புப் பைகள் எளிதில் இயற்கையான சூழலில் மக்கிப் போகின்றன. நெகிழிகள் மக்கிப்போவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகின்றன. பருத்திப் பைகளை பல முறை பயன்படுத்தலாம். இவற்றில் சவர்க்காரம் கொண்டு சுத்தம் செய்தால் மறுபடியும் பயன்படுத்துவதற்குத் தயார் ஆகிவிடும். பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றை வடிவத்திற்கு ஏற்றவாறு பாதுகாப்பாக மூடி வைக்கலாம்.

உணவைப் பசுமையாக வைத்திருக்க, ஈரப்பசை உருவாகாமல் இருக்க உணவு கெட்டுப்போகாமல் இருக்க பருத்தி மடிப்புப் பைகள் உதவுகின்றன.  ஆபத்தான இரசாயனங்களான பிஸ்பெனோல் ஏ, பெட்டலெட்ஸ் ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து விடுபட, உணவைச் சேமித்து வைக்க பருத்தித் துணியே மிகச் சிறந்த தேர்வாகும். குறிப்பாக, சிறார்களும் இரசாயனங்களின் தாக்கத்திற்கு எளிதில் இலக்காகுபவர்களும் இதனை அவசியம் பயன்படுத்த வேண்டும்.

துரித உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள்

பேகர், பொரித்த உணவுகள், பிஸ்ஸா ஆகியவற்றில் பெட்டலெட்ஸ் மற்றும் பிளாஸ்டிஸைஸர் ஆகியவை அதிகமாக உள்ளன.  இந்த உணவு தயாரிப்பு நிலையில் மற்றும் பொட்டலம் கட்டும்பொழுது இந்த இரசாயனங்கள் அவற்றில் கசிகின்றன.

உணவைத் தூய்மையாகக் கையாள வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் பயன்படுத்தும் வைனல் கையுறைகள் நச்சுத்தன்மையை உண்டாக்குபவை ஆகும்.  இந்தக் கையுறைகளில் இருக்கும் பெட்டலெட்ஸ் அவற்றைக் கையாளும்பொழுது உணவுக்கு இடம் பெயர்கின்றது. நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தைச் சீர்குலைக்கும் பெட்டலெட்ஸின் தன்மையினால் அவை ஒருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் சிதைக்கும்.

அதோடு, துரித உணவைச் சூடுபடுத்தும்பொழுது நெகிழிப் பைகளில் உள்ள பிளாஸ்டிஸைஸர் உணவுக்குள் புகுகிறது. நெகிழி உபகரணங்களைக் கொண்டு உணவு தயாரிக்கும்பொழுதும் அந்த இரசாயனங்கள் உணவுக்குள் சென்றுவிடும். துரித உணவுகளை விரைவாகவும், அதிகமாகவும் சமைப்பதால் இரசாயனமும் அதிவேகமாகக் கலந்துவிடுகிறது.

பசுமையான, பதப்படுத்தப்படாத உணவுகளை உட்கொள்ளுங்கள்

பெட்டலெட்ஸ், பிஸ்பெனோல் ஏ போன்ற சேதப்படுத்தும் நெகிழி இரசாயனங்களின் பாதிப்பிலிருந்து விடுபட, அதிகம் பதப்படுத்தப்படாத பசுமையான உணவுகளை உட்கொள்ளுங்கள்.  பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நெகிழிகளைக் கொண்டு பொட்டலமிடப்பட்ட உணவுகளில் இந்த இரசாயனங்கள் எளிதில் கசிந்துவிடுகின்றன. பசுமையான உணவுகள் மற்றும் பழங்களில் நெகிழி இரசாயனங்கள் இருப்பது குறைவு. ஏனெனில், இவற்றின் உற்பத்தி மற்றும் பொட்டலம் கட்டும்பொழுது நெகிழி பயன்பாடுகள் குறைவாகவே உள்ளது.

நெகிழி இரசாயனங்கள் கொண்டு வரும் கேடுகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. உதாரணத்திற்கு, பிஸ்பெனோல் ஏ, நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தில் இடையூறுகளை விளைவித்து வளர்சிதை மாற்றம் மற்றும் வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளை உருவாக்கும். இந்த இரசாயனங்கள் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கும்,  உடல் பருமன், 2-ஆம் வகை நீரிழிவு, இருதய நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

பதனிடப்பட்ட உணவுகள், நெகிழிக் கலன்களில் அடைக்கப்பட்ட உணவகளைத் தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக பசுமையான, முழுமையான உணவையும், கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃகுக் கலன்களை உபயோகிக்கும் பட்சத்தில் நெகிழியினால் விளையும் அபாயங்களைக் குறைக்க முடியும். உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமாக, ஆபத்தான நெகிழி இரசாயனங்களிலிருந்தும் அவை கொண்டு வரும் ஆரோக்கியக் கேடுகளிலிருந்தும் நீங்கள் தப்பிக்க இயலும்.

மரம், துருப்பிடிக்காத எஃகு, இதர பாதுகாப்பான சமையலறை உபகரணங்களைப் பயன்படுத்துங்கள்

மரம், துருப்பிடிக்காத எஃகு, இதர பாதுகாப்பான சமையலறை உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உணவுகளில் நெகிழி கசிவதைத் தவிர்க்க முடியும். நெகிழியில் தயாரிக்கப்பட்ட காய்கறி வெட்டுப் பலகை, சமையலறை உபகரணங்கள், கொள்கலன்கள் யாவும் உணவுகளில் நுண்ணெகிழிகளைக் கசியச் செய்யும். நெகிழி உபகரணங்களைக் கொண்டு சமைக்கும்பொழுது சூட்டின் காரணமாகவும் அல்லது அமிலத்தன்மை கொண்ட உணவுகள் காரணமாக அவற்றின் தரம் குறைந்துகொண்டே போகும். இப்படி சிறிது சிறிதாகச் சிதைவுறும் நெகிழி உணவில் நுண்ணெகிழிகளை கசியச் செய்யும்.

மரத்தால் ஆன வெட்டுப்பலகை மற்றும் சமையலறை உபகரணங்கள் அதிக நாட்களுக்கு உழைப்பதோடு அவற்றை எளிதாகச் சுத்தப்படுத்தவும் முடியும்.  நெகிழிகளை விட இவற்றில் கிருமிகள் குறைவாகவே தங்குகின்றன.   துருப்பிடிக்காத எஃகுப் பாத்திரங்கள் உறுதியானவை. அவை உணவோடு தொடர்புகொள்ளாமலும், அவற்றிலிருந்து ஆபத்தான இரசாயனங்களும் வெளியாவதில்லை. அவற்றில் கறை படியாததால்,  நாற்றம் அடிக்காததால் அவற்றை சமையலறை உபகரணங்களாக, பாத்திரங்களாக வெட்டுக் கருவிகளாக உபயோகிக்க மிகத் தகுதியானவை.

மரகட்டை மற்றும் துருப்பிடிக்காத எஃகை தேர்வு செய்வதன் மூலம், நீங்கள் நுண்ணெகிழித் தூய்மைகேட்டைத் தவிர்ப்பதோடு, பாதுகாப்பான சமையல் சூழலை உறுதி செய்துகொள்ள முடியும்.

விளையாட்டு பொம்மையைப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்

உங்கள் குழந்தைகளை ஆபத்தான இரசாயனங்களிலிருந்து பாதுகாக்க இயற்கையான ரப்பர், மரக்கட்டை மற்றும் இதர நெகிழி அல்லாத பாதுகாப்பான பொருள்களில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொம்மைகளைத் தேர்வு செய்யுங்கள். இவற்றில் நச்சுப் பொருள்கள் இருப்பது அநேகமாகக் குறைவு என்பதோடு குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்கான ஒரு நல்ல ஏற்பாடு.

நெகிழியால் செய்யப்பட்ட விளையாட்டு பொம்மைகளை தேர்ந்தெடுக்காமல் இருப்பது சிறப்பு.  அப்படி நெகிழிப் பொம்மைகள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவற்றில் பிஸ்பெனோல் ஏ போன்ற நச்சு இரசாயனங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நெகிழியின் உழைதிடம் மற்றும் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க அதில் பிஸ்பெனோல் ஏ சேர்க்கப்படுகிறது. ஆனால் பிஸ்பெனோல் ஏ, நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தைச் சீர்குலைக்கும். அது உடலின் ஹோர்மோன் இயக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.

சிறார்கள் பெரும்பாலும் விளையாட்டு பொம்மைகளை வாயில் வைப்பர்.  அப்படி அந்த பொம்மையில் பிஸ்பெனோல் ஏ இருக்கும் பட்சத்தில் அது அவர்களுடைய உடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  குழந்தைகள் பெரும்பாலும் பொம்மைகளை வாயில் வைத்து சூப்புவதும் கடிப்பதுமாக இருப்பர். அப்படிச் செய்யும்பொழுது அது சொல்லொணா ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்திவிடும்.

நெகிழி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக மட்டுமல்ல. நெகிழித் தடத்தைக் குறைத்துக் கொள்வது இப்புவியைப் பாதுகாப்பதற்கான ஓர் உன்னத இலட்சியமும் கூட.

References

Friedman, L. F. (2024, January 4). How to Reduce Your Exposure to Plastic in Food (and Everywhere Else). Consumer Reports.
https://www.consumerreports.org/health/food-contaminants/how-to-reduce-exposure-to-plastic-in-food-everywhere-else-a9640874767/

Giuliani, A., Zuccarini, M., Cichelli, A., Khan, H., & Reale, M. (2020). Critical Review on the Presence of Phthalates in Food and Evidence of Their Biological Impact. International journal of environmental research and public health, 17(16), 5655.
https://doi.org/10.3390/ijerph17165655

How to Avoid Harmful Chemicals in Plastic. (n.d.). PIRG.
https://pirg.org/edfund/resources/how-to-avoid-harmful-chemicals-in-plastic/

Jeon, G. W. (n.d.). Bisphenol A leaching from polycarbonate baby bottles into baby food causes potential health issues. NCBI.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9441614/