
பலதரப்பட்ட பொருள்கள் பொட்டலங்கள், மின்சாதனங்கள் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பொருளாக நெகிழி இருக்கிறது. நெகிழிக் கழிவைக் குறைப்பதில் நம்முடைய கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் ஒரு பெரிய மானுட அழிவு நிசப்தமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நெகிழிக் கழிவு மற்றும் மறுசுழற்சித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இரசாயன பாதிப்புகள்தாம் அவை. அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) மேற்கொண்ட “நெகிழி பணியிடத்தை நஞ்சாக்குகிறது: நெகிழிக் கழிவு மற்றும் மறுசுழற்சித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இரசாயன பாதிப்புகள்” என்ற ஓர் ஆய்வின் மூலம் நெகிழி மறுசுழற்சித் தொழிற்துறையில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் பற்றி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது
நெகிழியில் ஆயிரக்கணக்கான இரசாயனங்கள் உள்ளன. பெரும்பாலானவை புதை படிம எரிபொருளிலிருந்து பெறப்பட்டவையாகும். இவற்றில் சில அபாயகரமானவை. இன்னும் சிலவற்றின் ஆபத்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. நெகிழியைக் கையாளும்பொழுது, மறுசுழற்சி செய்யும்பொழுது, அப்புறப்படுத்தும்பொழுது, இதில் உள்ள இரசாயனங்கள் சூழலில் கசிந்து அதன் அருகில் உள்ள தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மோசமான ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகின்றது.
தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிய, சிலிக்கோன் மணிக்கட்டு பட்டைகளைக் கொண்டு தாய்லாந்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளட்டது. இதில் 3 குழுக்கள் பங்கேற்றன:
- நெகிழிக் கழிவுத் தொழிலாளர்கள் (கழிவுகளைச் சேகரித்துப் பிரிப்பவர்கள்)
- நெகிழி மறுசுழற்சித் தொழிலாளர்கள் (கழிவுகளை நறுக்குபவர்கள்)
- அலுவலகப் பணியாளர்கள் (கட்டுப்பாட்டுக் குழு) (இவர்கள் நெகிழிக் கழிவுகளின் நேரடி பாதிப்புக்கு ஆளாகாதவர்கள்)
ஐந்து நாட்களுக்கு இந்தத் தொழிலாளர்கள் தங்கள் மணிக்கட்டுகளில் பட்டை அணிந்துகொண்டனர். இந்தப் பட்டை அவர்கள் வேலை செய்யும் சூழலில் உள்ள இரசாயனங்களை ஈர்த்துக்கொள்ளும். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தன.
அலுவலகப் பணியாளரையும் சேர்த்து இந்த ஆய்வில் பங்கு கொண்ட ஒவ்வொருவரும் குறைந்தது 21 விதமான இரசாயன பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஒவ்வொருவரின் மணிக்கட்டுப் பட்டையிலும் 14 விதமான இரசாயனங்கள் இருந்தன. ஆனால், பாதிப்பு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருந்தது.
- நெகிழிக் கழிவு மற்றும் நெகிழி மறுசுழற்சித் தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமான இரசாயன பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தனர்.
- மறுசுழற்சித் தொழிலாளர்களின் மணிக்கட்டு பட்டையில்தான் அளவுக்கு அதிகமான இரசாயனங்கள் இருந்தன. இது இவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவதைக் காட்டுகிறது.
- நெகிழிக் கழிவுகளோடு நேரடித் தொடர்பு இல்லாத அலுவலகப் பணியாளர்களும் நெகிழித் தொடர்பான இரசாயனங்களின் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்கள். இது இரசாயனம் பெருவாரியாகப் பரவுவதைக் காட்டுகிறது.
இந்த ஆய்வுகள் நெகிழி மறுசுழற்சி நடவடிக்கைகளின் நச்சுத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நெகிழிகளில் கண்டெடுக்கப்பட்ட பற்பல இரசாயனங்களில், 4 பிரிவுகள் மிகவும் மோசமான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவை வருமாறு: பெட்டலெட்ஸ், பெட்டலெட் மாற்றுப்பொருள்கள், போலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன், ஓர்கோனோபோஸ்பேட் தீத்தடுப்பு (OPFRs). இந்த இரசாயனங்கள் நெகிழியில் நிரம்ப உள்ளதோடு புற்றுநோய், ஹோர்மோன் கோளாறுகள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட கடுமையான உடல்நலக் கேடுகளுடன் தொடர்புடையன.
நெகிழிக்கு இலகுத்தன்மை கொடுப்பதற்கும் அது அதிக நாட்கள் உழைப்பதற்காகச் சேர்க்கப்படும் பெட்டலெட்ஸ், ஆய்வின் முடிவில் எல்லோருடைய மணிப்பட்டையிலும் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரசாயனம் அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் நெகிழித் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தனர். அதிக சேதத்தை விளைவிக்கும் பெட்டலெட்ஸ்களாக DEHP, DiBP மற்றும் DBP ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை யாவும் உடலின் ஹோர்மோன் இயக்கத்திற்கு குளறுபடிகளை உருவாக்குபவை. மிகவும் அபாயகரமானது என்று அறியப்பட்டும் கூட DEHP-க்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகளில் இறுக்கமான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா இந்த இரசாயனத்தின் சில பயன்பாடுகளுக்குத் தடை விதித்துள்ளது.

பெட்டலெட்ஸ்க்கு மாற்றுப்பொருளாக உற்பத்தியாளர்கள் DEHA மற்றும் ToTM போன்ற மாற்று பிளாஸ்டிஸைஸர்களை அறிமுகப் படுத்தியுள்ளனர். ஆனால் இந்த மாற்றுப்பொருள்களும் முன்னதைப் போன்றே ஆபத்துகள் நிறைந்தது. இப்படியாக ஒரு ஆபத்தான இரசாயனத்திற்குப் பதிலாக இன்னொரு ஆபத்தான இரசாயனத்தைப் பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய விஷயமாகும். பாதுகாப்பான மாற்றுப் பொருள்களை நாடாமல் ஒரு இரசாயனத்திற்குப் பதிலாக இன்னொரு ஆபத்தான இரசாயனத்தை பயன்படுத்துவது தொழிலாளர்களையும் பயனீட்டாளர்களையும் ஆபத்தில் தள்ளிவிடுகிறது.
பாலிசைக்ளிக் எரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) என்பது நெகிழி எரியும்பொழுது அல்லது சூழலில் சிதையும்பொழுது உருவாகும், புற்றுநோயை வரவழைக்கும் இரசாயனங்களாகும். இவை அதிக நச்சுத்தன்மை வாய்ந்தவையாதலால் நோய் எதிர்ப்பாற்றல் சேதமாகுதல், சுவாச நோய்கள் மற்றும் நெடுநாளைய புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. நெகிழிக் கழிவுகளைக் கையாளும், மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதாகவும், இவர்களுக்குப் புற்றுநோய் மற்றும் இதர மோசான நோய் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
ஓர்கோனோபோஸ்பேட் தீத்தடுப்பு (OPFRs) என்பது தளவாடப்பொருள்கள், நெசவு, மின்சாதனங்கள் மற்றும் நெகிழிகள் எரிந்துபோகாமல் இருப்பதைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனமாகும். இந்த இரசாயனம் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள், நாளமில்லா சுரப்பி சீர்குலைவு மற்றும் இனப்பெருக்க நச்சுத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள் ஓர்கோனோபோஸ்பேட் தீத்தடுப்பு இரசாயனங்களுக்கு அதிக அளவு ஆளாவதாக ஆய்வு காட்டுகிறது. இந்த இரசாயனங்களை உள்ளடக்கிய பழைய நெகிழிப்பொருள்கள இவர்கள் கையாளுவதால் இந்நிலை ஏற்படுகிறது.
இந்த இரசாயனங்கள் மிகக் கடுமையான நீண்ட கால பாதிப்புகளை விட்டுச் செல்கின்றன. தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அதே வட்டாரத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கும் அது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நெகிழி தொடர்பான பாதிப்புகள் பலதரப்பட்ட ஆரோக்கியக் கேடுகளைக் கொண்டு வரும் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
- நுரையீரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் விரை தொடர்பான புற்றுநோய்கள்;
- கருவுறுதலில் சிக்கல்கள் மற்றும் பிறப்புக் கோளாறுகள் உருவாக்கும் அளவுக்கு ஹோர்மோன் குளறுபடிகள்;
- மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றலைப் பாதிக்கும் அளவிலான நரம்பியல் கோளாறுகள்;
- நச்சு இரசாயனம் கலந்த தூசியைச் சுவாசிப்பதால் ஏற்படும் சுவாச நோய்கள்;
- நீண்ட காலம் நெகிழி நச்சுகளின் பாதிப்புகளினால் உருவாகும் சருமக் கோளாறுகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி சேதப்படுதல்.
தொழிலாளர்கள், பயனீட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை நெகிழி இரசாயன நச்சுகளிலிருந்து பாதுகாப்பதற்கு இன்னும் வலுவான அனைத்துலக சட்டங்கள் தேவை என்பதை இந்த ஆய்விலிருந்து அறியப்பட்ட விடயங்கள் மென்மேலும் வலியுறுத்துகின்றன. விரைவில் நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், நெகிழி சம்பந்தமான ஆரோக்கியக் கேடுகள் தொடர்ந்து பெருகிக்கொண்டேதான் போகும்.
இதற்கென அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் கீழ்கண்ட பரிந்துரைகளை முன் வைத்துள்ளது:
- நெகிழி இரசாயனங்கள் தொடர்பான அனைத்துலக சட்டத்தை அமல்படுத்துதல்.
சட்டத்திற்கு உட்பட்ட நெகிழி உடன்படிக்கை, நெகிழி உற்பத்தியிலிருந்து அவை அப்புறப்படுத்தப்படும் வரை உள்ள அவற்றின் முழு சுழற்சியையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.
- நச்சு நெகிழி மறுசுழற்சிக்குத் தடை விதித்தல்
ஆபத்தான இரசாயனங்களைக் கொண்ட நெகிழிகளை மறுசுழற்சி செய்யக்கூடாது. அது பாதிப்புகளை இன்னும் அதிகமாக்கும். எரிப்பு இல்லாத பாதுகாப்பான நெகிழி கழிவகற்றும் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
- நெகிழிக்கு மாற்றாக இன்னும் அபாயமான பொருள்களைப் பயன்படுத்துவதை நீக்க வேண்டும்.
அரசாங்கங்கள் ஆபத்தான இரசாயனங்களை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும். இல்லாவிடில், நிறுவனங்கள் ஒரு ஆபத்தான இரசாயனத்தைக் கைவிட்டு இன்னொரு ஆபத்தான இரசாயனத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்.
- என்னென்ன இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நெகிழி உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளின் எல்லா நிலைகளிலும் என்னென்ன இரசாயனங்கள் பயன் படுத்தப்படுகின்றன என்பதனை அறிவிக்க வேண்டும்.
- தொழிலாளர்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
நெகிழி நச்சு இரசாயனங்களிலிருந்து தங்கள் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை முதலாளிமார்களுடையது. தங்கள் தயாரிப்பின் இரசாயன பயன்பாட்டினை ஒழிக்க வேண்டும். ஒழிப்பது சாத்தியமில்லை என்றால் நச்சு இரசாயனங்களுக்குப் பதிலாகத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார படிநிலையில் குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்பான இரசாயனங்களைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.
- ஒட்டுமொத்த நெகிழி உற்பத்தியைக் குறைக்க வேண்டும்.
கணக்கிலடங்கா நெகிழித் தயாரிப்புகள் நச்சு இரசாயன பாதிப்புகளை மென்மேலும் அதிகரிக்கின்றன. நெகிழி உற்பத்தியையும் உபயோகத்தையும் குறைக்கும் பட்சத்தில், உலக அளவில் அதன் பாதிப்புகளையும் குறைக்க முடியும்.
நெகிழிக் கழிவு மற்றும் நெகிழி மறுசுழற்சித் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வு வெகு சிக்கலான ஒரு யதார்த்தத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. நெகிழித் தொழிற்துறையில் வெளிப்படும் இரசாயனங்கள் மிகப் பெரிய ஆரோக்கியச் சீர்கேட்டுப் பிரச்சனையாகும். நெகிழிக் கழிவு சதா சுற்றுச்சூழல் கேடுகளோடு தொடர்பு படுத்தப்பட்டாலும் கூட, அது மனித ஆரோக்கியத்திற்கும் சொல்லொணா கேடுகளைக் கொண்டு வருகிறது.
நடவடிக்கைகள் உலக அளவில் எடுக்கப்படாத பட்சத்தில் நெகிழி சம்பந்தப்பட்ட நோய்கள் உயர்ந்துகொண்டேதான் போகும். அரசாங்கங்கள், தொழிற்துறைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நெகிழித் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க முடியும். நெகிழித் தயாரிப்பு என்பது மனித ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கும் ஒன்றாக ஆகிவிடாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை அவசியம். ஆக மொத்தத்தில் நெகிழியைக் குறைப்பதால் சுற்றுச்சூழலோடு சேர்த்து மனித ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
குறிப்பு:
Brosché, s., et al. 2024. Plastics Poison the Workplace: Chemical Exposures to Plastic Waste and Recycling Workers. IPEN, Arnika, and EARTH. https://stoppoisonplastic.org/blog/portfolio/plastics-poison-the-workplace-chemical-exposures-to-plastic-waste-and-recycling-workers/