
ஹங்கேரி, ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பயனீட்டாளர் சங்கங்களான அர்னிகா, டிடெஸ்ட் ஆகியவை மேற்கொண்ட ஆய்வுக்கூட சோதனையில் நெசவுகளில் ஆபத்தான பிஸ்பெனோல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது குறிப்பாக, பெண்களின் உள்ளாடைகளில் இருப்பதால் ஐரோப்பிய பயனீட்டாளர் சங்கங்கள் இந்த வகை இரசாயனங்களைத் தடை செய்வதற்குப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் அணியப்படும் 166 மாதிரி ஆடைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சுமார் 33% மாதிரிகளில் பிஸ்பெனோல் இருப்பதும், 10 விழுக்காட்டில் பாதுகாப்பு அளவைவிட அதிகமான பிஸ்பெனோல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெண்களின் 50% கீழ்உள்ளாடை மாதிரிகளில் பிஸ்பெனோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இளம் பெண்களுக்கான ஆடை தயாரிப்புகளும் இதில் அடங்கும்

நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்திற்கு, பிஸ்பெனோல் ஊறு விளைவிப்பவை. பிஸ்பெனோல் மிகக் குறைந்த அளவில் இருப்பினும் கூட உடலின் ஹோர்மோன் இயக்கத்திற்கு ஊறு விளைவிப்பதோடு, ஈஸ்ட்ரோஜன் போன்ற இயற்கை ஹோர்மோன்களை போன்றும் அவை செயல்படுகின்றன. இன விருத்தி உறுப்பு, சிறுநீரகம், கல்லீரல், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் வளர்சிதை மாற்றங்களில் சேதத்தை ஏற்படுத்தி பெண்கள் விரைவில் பருவமடையவும் செய்கிறது. உடலில் இயற்கையான ஹோர்மோன் செயல்பாடுகளுக்கு இடையூறுகளை விளைவித்து இனவிருத்தி மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கிறது. இந்த இரசாயனங்கள் ஆடைகளில் சேர்க்கப்படுவதால் சருமத்தால் ஈர்த்துக் கொள்ளப்பட்டு நீண்ட கால பாதிப்புகளை உருவாக்கிவிடுகின்றன.
உயர் ரக பருத்திகளில் அதிக அளவில் பிஸ்பெனோல் இருப்பதாக இந்த ஆய்வு காட்டுகிறது. போலியெமைட் மற்றும் போலியெஸ்டர் போன்ற செயற்கை நெசவுகளில் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகள் பிஸ்பெனோல் ஆபத்தை அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உண்மையில் சாதாரண ஆடைகளை விட மிகவும் பிரபலமான வர்த்தகச் சின்னத்தைக் கொண்ட ஆடைகளில் பிஸ்பெனோல் அதிகமாகவே இருந்தது. ஆடையின் விலை மற்றும் வர்த்தகச் சின்னம் யாவும் பாதுகாப்பானவை என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன.
இந்த அதிர்ச்சியான கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, செக் குடியரசு, ஸ்லோவேனிவின் ZP, ஆஸ்திரியாவின் VKI, ஹங்கேரியின் தன்னுணர்வு பயனீட்டாளர்கள் சங்கம் ஆகியவை கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன:
-
- நாளமில்லா சுரப்பிகள், இனவிருத்தி உறுப்புகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் பிஸ்பெனோல் மற்றும் அவை சார்ந்த பொருள்களை ஐரோப்பிய ஒன்றிய அளவில் 2029-க்குள் தடை செய்தல்.
- ஆடைகளில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்படுகின்றன என்பதனைப் பயனீட்டாளர்கள் துல்லியமாகத் தெரிந்துகொள்ள டிஜிட்டல் தயாரிப்பு பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்துதல்.
- நச்சு இரசாயனக் கலவை இல்லாமல் நெகிழி தயாரிப்பதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துலக நெகிழி ஒப்பந்தத்தின்படி படிப்படியாக நீக்க நினைக்கும் இரசாயனங்களில் பிஸ்பெனோலையும் இணைத்துக்கொள்ளல்.
• சூழலுக்கு உகந்தது என்று வர்த்தக முத்திரையிடப்பட்ட ஆடைகளில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய கடுமையான சூழல் சிநேக சான்றிதழ் தரநிலைகள்.
சரியான விதிமுறைகள் இல்லாத பட்சத்தில், சாதாரண பயனீட்டாளர்கள் இந்த ஆபத்தான இரசாயனங்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள போதிய அளவிலான வடிகால்கள் இல்லாமல் போய்விடும்.
குழந்தை பால் புட்டிகளில் பிஸ்பெனோல் ஏ-வை மலேசியா தடை செய்துள்ளது. இது போதாது. ஏனெனில், பிஸ்பெனோல் இதர பயனீட்டாளர் பொருள்களிலும் சேர்க்கப் பட்டுள்ளது. எல்லா பயனீட்டாளர் தயாரிப்புகளிலும் ஒட்டுமொத்தமாக பிஸ்பெனோல் தடை செய்யப்பட வேண்டும்.
குறிப்புகள்
https://arnika.org/en/publications/ban-bisphenols-in-all-products-policy-briefing-paper