இவ்வாண்டு மே 1ம் தேதியிலிருந்து தனியார் மருத்துவ நிலையங்கள், தங்களின் மருத்துவ கட்டணத்தை பயனீட்டாளர்களுக்கு குறிப்பாக நோயாளிகளுக்கு காட்சி படுத்த வேண்டும் என்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கொள்கையை செயல்படுத்த அரசாங்கத்தின் முடிவை பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் மூன்றாம் உலக தொடர்பு இயக்கமும் பாராட்டுவதாக பி.ப.சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
தெரிவிக்கப்படும் இந்த விலைப்பட்டியல் ஒரு பயனீட்டாளர் நன்கு அறிந்து கொள்வதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவ விலைகளை வெளிப்படையானதாக மாற்றுவதற்கான ஒரு சிறிய முயற்சி இது. மேலும் இது அரசாங்கத்தின் நலன்களைச் சமாளிப்பதற்கான ஒரு சுகாதாரப் போராட்டமாகும் என்றார் முகைதீன்.
தற்போது மருந்துகள் மீதான அதிக விலையை இது கட்டுப்படுத்தும். 2018 ஆம் ஆண்டு முதல் மருந்து விலைகள் கட்டுப்பாடில்லை. தற்போது மருந்துகளின் விலை நிர்ணயம் முற்றிலும் கட்டுப்பாடற்றதாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் இருப்பதால், மருந்து விற்கும் மொத்த விற்பனையாளர்கள் விலைகளை அறிவிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த கொள்கை முடிவிற்கு மலேசிய போட்டி ஆணையத்தின் (2017) கீழ் மருந்துத் துறையின் சந்தை மதிப்பாய்வின் பரிந்துரைகளைப் பின்பற்றுகின்றன.
மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் சகாப்தத்தில், குறிப்பாக நோயாளிகள் அல்லது பயனீட்டாளர் செய்வது அறியாது இருக்கும்போது அல்லது விலை வேறுபாடுகள் தெரியாமல் இருக்கும்போது, இறுதிப் கட்டண ரசீதை பார்க்கும்போது, தாங்கள் அதிக கட்டணத்தை செலுத்திவிடுவதாக உணர்கிறார்கள் .
மலேசியாவின் 2023 தேசிய சுகாதார கணக்குகளின் படி, தனியார் ஆதாரங்களில் இருந்து சுமார் 30% சுகாதார செலவினம் உண்மையில் மருந்து தயாரிப்புகளுக்கு செலவிடப்படுகிறது, இது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அண்மையில் சுகாதார அமைச்சர் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் ஒரு அமர்வு நடத்தப்பட்டது. இந்த அமர்வில் பொது மருத்துவர்கள் முரட்டுத்தனமான மற்றும் திமிர்த்தனமான நடத்தையைப் பார்த்தது அதிர்ச்சியாக இருந்தது என்றார் அவர்.
இந்த அமர்வில் புதிய கொள்கையை விளக்கிக் கொண்டிருந்த உள்நாட்டு வர்த்தக அமைச்சின் அதிகாரியை கேலி செய்தது உட்பட, “நாங்கள் காய்கறி/பழம்/உணவு விற்பனையாளர்கள் அல்ல” என்று கூறி, இந்த புதிய கொள்கை பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இருக்கக் கூடாது என்று பல பொது மருத்துவர்கள் கூறியதோடு அதிகாரியை பார்த்து கூச்சலிட்டனர்.
அதே நேரத்தில் பி.ப.சங்க அதிகாரி பேசிகொண்டிருந்த போது ஒரு மருத்துவர் வெட்கமின்றி மைக்ரோஃபோனை பி.ப.சங்க அதிகாரியிடமிருந்து பிடுங்கி பேசினார்.
மேலும் தான் ஒரு பொது மருத்துவர் என்பதால் வரிசையில் நிற்க தேவை இல்லை என்று கூறி எனக்கு பேச உரிமை உண்டு என்று மைக்கில் பேசினார். மலேசிய மருத்து கழகம் 2023 ஆம் ஆண்டில் பன்னாட்டு மருந்துத் துறையுடன் ஒத்துழைத்து, அசல் மருந்து விலை பொறிமுறையின் “செலவு-பயன் மதிப்பீடு” ஆய்வை ஆதரிக்கக் கூடாது, தெளிவான நோக்கத்துடன், பெரும்பான்மையான மக்களுக்கு பயனளிக்கும் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.
பயனீட்டாளரை பாதுகாப்பதற்கும், மலிவு விலையில் மருத்துவச் சேவையை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் இத்தகைய தொடர்ச்சியான நடத்தை மிகவும் வருந்தத்தக்கது. எனவே, மருந்துகளின் விலைக் காட்சிக் கொள்கையை மேலும் தாமதமின்றி செயல்படுத்துமாறு அரசாங்கத்தை இந்த இரண்டு அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
பயனீட்டாளர் மற்றும் நோயாளிகளின் மலிவு விலையில் பராமரிப்புக்கான உரிமைகள், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான பெரிய முயற்சியின் ஒரு பகுதி இதுவாகும்.
மேலும் இது சிறந்த பொது நலனுக்கானது. சமூகத்திற்கு சேவை செய்யவும், மக்களின் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுக்கவும் தனியார் மருத்துவ துறையை வலியுறுத்துகிறோம். இறுதியில் நாம் அனைவரும் பயனீட்டாளர்தான் என்றார் முகைதீன் அப்துல் காதர்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்