மார்ட்டின் கோர்
கௌரவ செயலாளர், பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
ஆலோசகர், மூன்றாம் உலக ஒருங்கிணைப்பு
எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் தனித்துவமானவர். அவர் பல வழிகளில் இயற்கையின் உந்து சக்தியாக இருந்தார். மே 17 தன்று அவர் இப்பூவுலகை நீத்தபொழுது ஒரு சகாப்தம் மறைந்துபோனது. அவரைப் போன்று ஒருவரை இனி நாம் சந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.
அவருடைய சிந்தனை வியத்தகுமிக்கது. கடுகளவு விஷயத்திலிருந்து மலையளவு விஷயம் வரை ஒரு தணிக்க முடியாத அறிவுத் தாகம் அவரிடம் குடிகொண்டிருந்தது. விஷயங்களை உள்வாங்கி அவற்றினிடையே உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வருவதில் அசாத்தியத் திறன் படைத்தவர். பிறகு அவற்றைத் தொகுத்து நடவடிக்கைகளாகவும் சட்டதிட்டங்களாகவும் கொண்டு வருவதற்கான வேலைகளில் மளமளவென்று இறங்குவார்.
தனக்குள்ள அறிவு, படைப்பாற்றல் மற்றும் தகவல்களை இளமைப்பருவத்திலிருந்து தன்னுடைய 93-வது வயதின் கடைசி மூச்சு வரைக்கும் இடையறாது நடைமுறைப் படுத்தியவர். தன் வாழ்வின் கடைசி அத்தியாயத்தின் ஓரிரு மாதங்களில் அவரை ஓய்வெடுக்குமாறு குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் வற்புறுத்தினர். ஆனால், அவரால் அவ்வாறு இருக்க முடியவில்லை. உள்ளூர் மக்கள், நாடு, உலகம் என்று எல்லா அளவிலும் இருக்கின்ற தவறுகளைச் சரி செய்யும் ஒரு பேரார்வத்தினாலேயே அவரின் கடைசி மூச்சு வரை உந்தப்பட்டிருந்தார்.
உணவு அளவுக்கு அதிமாக விரயமாக்கப்படும் அதே நேரத்தில் சிறார்கள் பசிக்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதை படிக்கும்பொழுது அவருடைய மனம் வேதனைப்பட்டது. காடுகளிலும் மலைகளிலும் நகப்புறங்களிலும் மரங்கள் வெட்டப்படுவது அவரைக் கோபத்தில் கொந்தளிக்கச் செய்தது. பாதுகாப்பற்ற உணவு, ஆபத்தான தொழில், சாலை விபத்து, காற்றுத்தூய்மைக்கேடு எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தும் அவை மலேசியர்களின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.
அவர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை 1970-ல் தொடங்கி அரைநூற்றாண்டுக்கும் மேலாக வழிநடத்திச் சென்ற காலத்தில் மிகவும் பிரபலமாகிப்போன ஒரு வார்த்தை “புகார்”!
நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், நீங்கள் புதிதாக வாங்கிய வீட்டில் ஓட்டைகளும் சுவரில் வெடிப்புகளும் இருந்தால், உங்கள் பணியிடம் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது என்றால், நீங்கள் மலையேறி மகிழ்ந்த காடுகளின் மரங்கள் வீழ்த்தப்படுகின்றன என்றால் உங்களுக்குள்ளேயே புலம்புவதோடு நின்றுவிடாதீர். அதிகாரப்பூர்வ புகார் ஒன்றை அளியுங்கள். உங்கள் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் திரட்டி, உரிமையை நிலைநாட்டி, எதிர்த்துப் போராடுங்கள்!
இத்ரிஸ் அவர்களின் இந்த அணிதிரட்டுப் பேச்சுகள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் வழிகாட்டும் தத்துவங்களாக உருவெடுத்தன. பயனீட்டாளர் அமைப்புகளின் நோக்கங்களையே அவர் மாற்றி அமைத்தார். என்ன வணிகச் சின்னம் கொண்ட ஒளிப்படக்கருவி அல்லது வாகனம் வாங்குவது (பெரும்பாலான பயனீட்டாளர் அமைப்புகள் இது போன்ற விஷயங்களில் மட்டுமே முனைப்பு காட்டும்) என்பதற்குப் பதிலாக, பொதுமக்களின் உணவு, ஆரோக்கியம், கல்வி, வீட்டு வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் முறையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றனவா போன்ற விஷயங்களில் ஆர்வம் குவித்தார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தையும் இந்தத் திசையில் திருப்பி, உலகெங்கிலும் உள்ள பயனீட்டாளர் அமைப்புகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விஷயங்கள், பிரச்சனைகளின் குறியிலக்குகளை விரிவுபடுத்தினார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதன் ஆரம்பக் காலங்களில் கடந்து வந்து பாதை கரடுமுரடானது. அந்தக் காலக்கட்டத்தில் அரசாங்கம் பொது விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.
1970-களின் மத்தியவாக்கில் நான் என்னுடைய வெளிநாட்டுக் கல்வியை முடித்துவிட்டு நாடு திரும்பிய நேரத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் “பயனீட்டாளர் குரல்” இதழின் முகப்பில், பினாங்கு, ஜோர்ஜ் டவுனின் கேர்னி டிரைவ் கடற்கரையில் இருந்த ஒரு பெரிய சவுக்கு மரம் அதன் வேரோடு சாய்ந்த நிலையில் உள்ள படம் அச்சடிக்கப்பட்டு, “பினாங்கு மரங்களின் அழிவு” என்ற தலையங்கத்தோடு வந்திருந்ததைப் படித்தது இன்னும் என் நினைவில் உள்ளது.
“நீங்கள் கைது செய்யப்பட்டு உங்கள் அமைப்பு மூடப்படும் என்ற பயம் உங்களுக்கு இல்லையா?” என்று இத்ரிஸ் அவர்களை வினவினேன். அதற்கு அவருடைய பதில்: “நாங்கள் இந்தப் பிரச்சனையை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.” என்பதுதான்.
அந்தக் காலக்கட்டத்தில் சாமானிய மலேசியர்கள் எந்த அளவுக்குப் பயந்தனர், ஊடகங்கள் எந்த அளவுக்கு ஒடுக்கப்பட்டிருந்தன என்றும், எல்லோருமே எதிர்த்துப் பேசத் தயங்கிய ஒரு காலத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஒன்றே எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டி இருந்தது என்பதை இத்ரிஸ் உணர்ந்திருந்தார் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே தக்க சான்று.
பெரும்பாலும் 50 பேச்சாளர்களை உள்ளடக்கி, ஆரோக்கியம், கல்வி, கிராமப்புற மேம்பாடு, பொருளாதாரம், சட்டம் மற்றும் நீதித்துறை நிர்வாகம் ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து நடத்தப்படும் வருடாந்திர கருத்தரங்குகளின் மூலமாகப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சட்ட ரீதியான பிரச்சனைகளை முன்னெடுத்து அசாதாரண துணிச்சலோடு நடவடிக்கைகளில் இறங்கியது.
“நாங்கள் செலுத்தும் வரி அரசாங்க இயக்கங்களுக்குத் துணை போகிறது. ஆகையால் அமைச்சுகளும் அரசாங்கத் தொண்டு நிறுவனங்களும் எப்படிச் செயலாற்ற வேண்டும், எப்படி அவர்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு,” என்று இத்ரிஸ் கூறுவார்.
இத்ரிஸ் அதிகம் அக்கறை செலுத்திய விஷயம் சுற்றுச்சூழலே.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தன்னுடைய முதல் சுற்றுச்சூழல் பேரவையை 1971-ல் ஏற்பாடு செய்தது. 1978-ல் மலேசிய சுற்றுச்சூழல் நெருக்கடி குறித்த பெரிய ஆய்வரங்கை நடத்தியது. 1982-ல் புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ அமார் ஸ்டீப்பன் யோங் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்குப் வருகை புரிந்ததோடு மட்டுமல்லாமல், அதுவே அவருடைய முதல் நடவடிக்கை என்றும், பி.ப.சங்கத்தின் உழைப்பினால்தான் சுற்றுச்சூழல் அமைச்சே உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.
சுற்றுச்சூழல் மனித வாழ்வின் முக்கிய அம்சமாக இருந்த காரணத்தால் அதன் பணிகளை முன்னெடுக்க இத்ரிஸ் இன்னொரு இயக்கத்தைத் துவங்கினார். இப்படியாகப் பூவுலகின் நண்பர்கள் என்றொரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளாக இத்ரிஸ் அதன் தலைவராக இருந்தார்.
1980-களின் ஆரம்பத்தில், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை அனைத்துலக ரீதியாக விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை இத்ரிஸ் எங்களுடன் கலந்தாலோசித்தார். ஏனெனில் ஒரு பிரச்னையின் அடிமூலம் பெரும்பாலும் உலகளாவிய அமைப்புமுறையில்தான் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் 1984-ம் ஆண்டு மாநாடு மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சி நெருக்கடி பற்றியதாக அமைந்தது. நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், செயலாக்கவாதிகள் என்று உலகின் பல பாகங்களிலும் உள்ளவர்கள் இதில் பங்கெடுத்துக்கொண்டனர். சமநிலையற்ற உலக அமைப்பில், வளர்ந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு, பி.ப.சங்கம் ஒரு வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் ஊக்குவித்தனர். இதன் விளைவாக நிறுவப் பட்டதுதான் மூன்றாம் உலக ஒருங்கிணைப்பு.
இத்ரிஸ் அனைத்துலக ரீதியிலும் பிரபலமானவர். பிரசித்திப் பெற்ற அமெரிக்க பயனீட்டாளர் ரால்ப் நாடிரை நான் சந்திக்கச் சென்றிருந்த வேளையில் அவரைச் சந்திப்பதால் நான் கௌரவிக்கப்பட்டேன் என்று நான் கூறிய நொடியில் அவர் கூறிய விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது: “நான்தான் கௌரவிக்கப்பட்டேன். திரு இத்ரிஸ் மட்டும் பயனீட்டாளர் சங்கம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் உலக பயனீட்டாளர் உரிமைகளின் செயல்வீரர்,” என்று கூறினார்.
தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பொதுச் சுகாதார செயலாக்கவாதி பேராசிரியர் டேவிட் சாண்டர்ஸ், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை புரிந்து இத்ரிஸ் அவர்களைச் சந்தித்தபொழுது அதன் நடவடிக்கைகளால் மிகவும் கவரப்பட்டு உதிர்த்த வார்த்தைகள், “நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளவும் போராடவும் ஒரு முழுமையான பயனுள்ள பணிக்குழுவை நீங்கள் அமைத்துள்ளீர்கள்.”
இத்ரிஸ் எல்லா விஷயங்களிலும் ஒரு படி மேலேதான் சிந்திப்பார், செயல்படுத்துவார்.
அளவுக்கு அதிகமான சீனி உட்கொள்வதன் ஆபத்துகளை பலர் முழுமையாக அறியாமல் இருந்திருந்த 3 தசாப்தங்களுக்கு முன்பதாகவே அவர் சீனிக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டவர். பருவநிலை மாற்றங்கள் உலக உய்வுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று அரசாங்கங்கள் உணர்வதற்கு முன்பதாகவே பருவநிலை மாற்றப் பிரச்சனைகளை பி.ப.சங்கத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர் இத்ரிஸ்.
கிருமியோடுக்கி எதிர்ப்பு (antibiotic resistance) பிரச்சனைகள் இப்பொழுது உலகத்தின் மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பி.ப.சங்கம் இதைக் கையிலெடுத்தது 1980-களில்.
மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு பேரார்வம் இத்ரிஸ் அவர்களின் எண்ணத்தில் துளிர்விட்டது 20 வருடங்களுக்கு முன்பு. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் உணவு மற்றும் விவசாய சங்கம் (FAO), இந்த நுண்ணுயிர்கள் மண்ணுக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அவை எப்படி அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்றும் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இத்ரிஸ் அவர்கள் அனுப்பிய நிறைய கோரிக்கை மனுக்கள், அரசாங்க அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் மேற்கொண்ட சந்திப்புக் கூட்டங்களால், நாட்டில் நிறைய சட்ட திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன; புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. மக்களுக்குத் தேவையில்லாத விரயங்களையும் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்பிய நிறைய அரசாங்கத் திட்டங்கள் கைவிடப்பட்டன அல்லது திருத்தியமைக்கப்பட்டன.
உதாரணத்திற்கு, 1990-களின் தொடக்கத்தில் பி.ப.சங்கம் மற்ற அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து பினாங்கு மலையைப் பிரமாண்ட மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து காப்பாற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றியைக் கண்டது.
ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இத்ரிஸ் அதிக அக்கறை செலுத்தினார். மீனவர்கள், விவசாயிகள், சிறுதோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், குந்துக் குடிசையில் வாழ்வோர், நிலம் மற்றும் வீட்டு வாடகையாளர், பூர்வீகக் குடியினர், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கான உரிமைகளில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்று பி.ப.சங்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவெல்லாம் B40 பிரபலம் ஆதவதற்கு முன்பதாகவே அவர் சிந்தைக்கு எட்டிய விஷயங்கள்.
அமெரிக்கா-மலேசியாவுக்கு இடையிலான சுயேச்சை வாணிப ஒப்பந்தப் பேச்சுவார்த்தை (இது 2000-களின் தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டது) டிரான்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தம் மற்றும் அதன் புது வடிவமான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மைக்கான ஒருங்கிணைந்த மற்றும் முற்போக்கான ஒப்பந்தத்தை எதிர்த்தார். இந்த ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடுமானால் அதன் தற்போதைய முக்கியமான கொள்கைகளையும் கைவிடநேரிடும்; நாட்டின் இறையாண்மையிலும் சமரசம் செய்யும் நிலை ஏற்படும் என்று எடுத்துரைத்தார். இது தொடர்பாக தன்னுடைய கருத்தினை நிலைநிறுத்துவதற்காக அப்போதைய அனைத்துலக வாணிப அமைச்சரைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். பல கடிதங்களையும் கோரிக்கை மனுக்களையும் இது சம்பந்தப்பட்ட பல அமைச்சர்களுக்கும் அமைச்சுகளுக்கும் அனுப்பி வைத்தார்.
அவருடைய ஆகக் கடைசியான மிகப் பெரிய போராட்டம் மவெ. 45 பில்லியன் பெருமானமுள்ள பினாங்கு போக்குவரத்து முதன்மைத் திட்டத்திற்கு எதிரான போராட்டமே. அந்தத் திட்டம் பினாங்கு சுற்றுச்சூழலையும் வாழ்க்கை முறையையும் பாழாக்கிவிடும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆகக் கடைசியான மாதங்களில் இரு எதிர்ப்புக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். தெற்கு பினாங்கின் மூன்று-தீவு நில மீட்புத் திட்டப் பகுதிக்கு அருகில் ஒரு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இத்ரிஸ் ஒரு எளிய மனிதர். எப்பொழுதுமே ஒரு வெள்ளை வேட்டி, குர்தாவோடு வளம் வருபவர். விருதுகளின் பின்னால் அவர் ஓடியதில்லை. அவர் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்த விருதுகள் இரண்டு மட்டுமே. ஒன்று துன் அப்துல் ரசாக் விருது. இன்னொன்று அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழத்தின் இப்னு கால்டுன் விருது (இந்த விருது தனக்கென்றில்லாமல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்குக் கொடுக்கப்பட வேண்டியது என்று வலியுறுத்தினார்.)
தன்னுடைய அடைவுகளில் திருப்தியடைந்து நின்றுவிடுபவரும் அல்ல இத்ரிஸ். சாதனைகள் பல நிகழ்த்திய அவருக்கு, உலகின் பல அநியாயங்களும், பூமித்தாய்க்கு நிகழும் நெருக்கடிகளும் மனதைத் தொடர்ந்து உறுத்திக்கொண்டேதான் இருந்தன. ஆகையால், வெகு காலத்திற்கு முன்பு தான் முன்னெடுத்த இந்தப் பணியை மற்றவர்கள் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
நான் கடைசியாக இரு வாரங்களுக்கு முன்பு, ஜோர்ஜ் டவுனில் உள்ள அவருடைய ரோஸ் அவெனியூ வீட்டில் சந்தித்தபொழுது அதே உற்சாகத்தோடுதான் இருந்தார். இதுகாறும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தீர்த்து வைக்காமல் இருக்கின்ற எல்லா பிரச்சனைகளை கையிலெடுக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். உணவு விரயத்தைத் தவிர்ப்பதன் மூலம் எப்படி உணவு விலை குறையும் என்பதை நான் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தன் மகளிடம் பாத்திமாவிடம் தெரிவித்திருக்கிறார். அவருடைய இறப்புக்குப் பிறகு அவர் மகள் என்னிடம் இதைப் பகிர்ந்துகொண்டார்.
கட்டுரையின் ஆரம்பத்தில் இத்ரிஸ் இயற்கையின் ஓர் உந்துசக்தி என்று குறிப்பிட்டிருந்தேன். இப்படிப்பட்ட ஓர் உந்துசக்தியானவர் உலகின் வழக்கமான வழித்தடங்களில் செல்லாதவர். தனக்கான ஒரு பாதையை அமைத்து அதில் மற்றவர்களைப் பின்பற்றச் செய்பவர். இயற்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்ற விஷயங்களைப் பார்க்க முடிகிற, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தெளிவாக உணர்ந்திருக்கிற ஒரு அசாத்திய நுணுக்கத்திறன் பெற்றவர் இத்ரிஸ்.
இத்ரிஸ் மலேசியா இதுவரை கண்டிராத ஒரு பொக்கிஷம். மலேசியர்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்காகப் போராடிய உண்மையான செயல்வீரர். இந்த உன்னதப் பணிக்காக உங்கள் வாழ்க்கையையே நீங்கள் அர்ப்பணித்தீர்கள். அதனை நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தொடருவார்கள் என்று இவ்வேளையில் நாங்கள் உறுதி அளிக்கிறோம்.