பத்திரிகைச் செய்தி 5.3.2024
ஜோகூர் மானிலத்தின் பாசிர் கூடாங் ஆறு இன்னும் கடுமையான தூய்மைக்கேட்டில் இருப்பது கண்டு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வருத்தம் அடைவதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார். ஜோகூர் அரசாங்கம், சுற்றுச்சூழல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் தீவிர கவனம் செலுத்தி, பாசிர் கூடாங்கில் ஆறு மாசுபாடு பிரச்சனையை சமாளிக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
இந்த பிரச்சனை குறித்து மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழு தலைவர் லிங் தியான் சூனின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பி.ப.சங்கம், இன்றுவரை சுங்கை துகாங் பத்து, சுங்கை பெரெம்பி, சுங்கை புலு மற்றும் சுங்கை கிம் கிம் ஆகிய நான்கு ஆறுகள் மூன்று மற்றும் நான்காம் நிலைகளில் தொடர்ந்து மாசுபடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை மிகவும் கவலை தருகிறது. ஏனெனில் மாசுபாடு பரவி சுற்றுச்சூழலையும், உள்ளூர்வாசிகளின் வாழ்க்கையையும் எதிர்காலத்தில் மிகவும் தீவிரமாக அச்சுறுத்தும். கடந்த காலங்களில் சுங்கை கிம் கிம் சம்பந்தப்பட்ட பாசிர் கூடாங்கில் நச்சுக் கழிவுகள் மாசுபடுத்தப்பட்ட சம்பவம் மறக்க முடியாத ஒரு சோகமான நிகழ்வு.
ஏனெனில் இது அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 6,000 குடியிருப்பாளர்களின் வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. சட்ட அமலாக்கத்தின் பலவீனம் மற்றும் இந்த பிரச்சனைக்கு காரணமான தரப்பினருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாதது நிலைமையை மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளதாக பி.ப.சங்கம் நம்புகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, மீன், இறால், நண்டு போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும், ஆற்றிலும், அருகிலுள்ள கடலிலும் வாழும் பல உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து கடுமையான சட்ட நடவடிக்கை மூலம் திறம்படக் கட்டுப்படுத்தாவிட்டால், சதுப்புநிலக் காடுகளில் கடல் வாழ் உயிரினங்கள் அச்சுறுத்தப்பட்டு அழிக்கப்படும். சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும் என பி.ப.சங்கம் கேடுகொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்