பாயான் லெப்பாஸ் நீர்வீழ்ச்சி பகுதி குப்பைகளால் தூய்மைகேடு அடைந்துள்ளது.

பத்திரிகை செய்தி 7.2.24

குளிக்க வருவோருக்கு சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இங்குள்ள பாயான் லெபாஸ் நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள குப்பை மாசுபாட்டின் சிக்கலைச் சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு மாநகர் மன்றத்தை , பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பி.ப.சங்கம் நடத்திய ஆய்வில், நெகிழி கழிவுகள், காகிதம், மோசமான மெத்தைகள் மற்றும் தலையணைகள், குழந்தைகளுக்கான டயப்பர்கள், உணவுக் கழிவுகள், சேதமடைந்த தளவாடங்கள், காலி டின்கள், பான பாட்டில்கள் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அப்பகுதியில் மிதந்து, நீர்வீழ்ச்சியில் சிக்கியுள்ளன என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

இந்த குளத்தில்மேலும், விழுந்த மரங்களும், காய்ந்த இலைகளும் அகற்றப்படாமல் உள்ளன. பாலங்கள், நாற்காலிகள் பழுதடைந்து சேதம் அடைந்தும், அப்பகுதிக்கு செல்லும் சாலை குறுகலாக, ஆக்கிரமிப்புச் சாலையாக உள்ளது என்றார் அவர்.

இப்பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தாலும், சம்பந்தப்பட்ட தரப்பினரால் அதை சமாளிக்க எந்த ஒரு பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இங்கு மாசுபாடு நிலைமை மிகவும் மோசமாகவும், அருவருப்பாகவும் மாறியதற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வருத்தம் அடைந்துள்ளது.

இந்தப் பகுதியில் பல்வேறு வகையான கழிவுகளை வீசுவதற்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களின் செயல்களே சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்பதை பி.ப.சங்கம் புரிந்துகொள்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த பிரச்சனை மக்களுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

மழை பெய்தால் இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அருவி குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள் மற்றும் நேரடியாக கடலில் கலக்கிறது. இதே நிலை நீடித்தால், நீர்வரத்து தடைப்பட்டு, எதிர்காலத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, இம்மாநில மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். தென்மேற்கு மாவட்ட அலுவலகம், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் இலாகா மற்றும் சுற்றுச்சூழல் இலாகா, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பொழுதுபோக்கு பகுதிகளின் தூய்மை மற்றும் இயற்கை அழகைப் பராமரிக்கவும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இங்குள்ள கழிவுப்பொருட்கள் விரைவில் சுத்தப்படுத்தப்பட்டு, இங்கு வருகின்ற மக்களுக்கு அடிப்படை வசதிகள் கச்சிதமாக கட்டப்பட்டு, இந்த பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.