பாரம்பரிய விதைகளுக்கு பங்கம் வராமல் பாதுகாப்போம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பசுமை வாரத் திட்டம், 2023-ஐ முன்னிட்டு அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் ஆற்றிய உரை.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பசுமை வாரத் திட்டத்திற்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறோம். இந்த வருடத்தின் பசுமை வாரத் திட்டத்தின் கருப்பொருள் “பகிரும் சமூகம்” ஆகும். இப்புவியில் வாழ்வதற்குத் தேவையான நிலைபேறு, கூட்டுமுயற்சி, நடுநிலை மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகம் மற்றும் விவசாயிகளின் விதை சேமிப்பு மற்றும் பகிர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக இவ்வருடம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் விதை பகிர்தலில் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளது.

வேளாண் தொழிற்துறை மற்றும் மலேசியாவில் விதை வர்த்தகமயமாக்கலில் காட்டப்படும் வேகம் நம்முடைய விதை பல்வகைமை, வேளான் பல்லுயிர்த்தன்மை மற்றும் விவசாயிகளின் விதை முறைமைகளை பாழ்படுத்திவிட்டது. விதை ஒரு வர்த்தகப் பொருளாகப் பார்க்கப்படுவதால் நம்முடைய பலதரப்பட்ட பாரம்பரிய உள்நாட்டு விதைகளை இழந்து வருகிறோம். இதன் விளைவாக நம்முடைய பாரம்பரிய உணவு மற்றும் உணவு சார்ந்த தகவல் மற்றும் கலாச்சாரமும் சிதைவுக்கு உள்ளாகி வருகிறது.

மலேசியாவில் சுமார் 90% காய்கறி விவசாயிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற விதைகளையே நடவுக்காகப் பயன்படுத்துகின்றனர். ஃபோர்டியூன் பிஸினஸ் இன்சைட்ஸ் என்ற சஞ்சிகை  உலகளாவிய விதை வர்த்தகத்தின் மதிப்பு 2017-இல் அமெரிக்க டாலர் 40.70 பில்லியனாக இருந்து 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டாலர் 61.32 பில்லியனை எட்டவிருப்பதாகக் கணித்துள்ளது.  உலகளாவிய விதை சந்தையை 10 பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த நிறுவனங்களில் சில வேளாண் இரசாயன வர்த்தகத்தில் கோலோச்சும் நிறுவனங்களாகும். இதனால்தான் ஒவ்வொரு முறையும்  விவசாயிகள் விதை வாங்கும்பொழுது வேளாண் இரசாயனங்களையும் சேர்த்து வாங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

நாம் விதைகளை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே திரும்பக் கொண்டு வர வேண்டும்.விவசாயிகளின் விதை பாதுகாப்பு முறை மற்றும் சமூக அளவில் விதை சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதே பினாங்கு பயனீட்டாளர் சங்கப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.  இன்று நடத்தப்படும் விதை பகிர்வு சந்தை மூலம் உள்ளூர் மற்றும் பாரம்பரிய தாவர வகைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறோம்.  விவசாயிகளுக்கும் மற்றும் சிறு அளவில் தோட்டம் போடுபவர்களுக்கும் விதை சேமிப்பு மற்றும் பகிர்தலை ஊக்குவிக்கவிருக்கிறோம். இந்த நடவடிக்கைகளின் மூலம் சமூக விதை சேமிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தையும் சேர்த்து இன்னும் சில சமூக விதை சேமிப்பு இயக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.  இந்த விதை பாதுகாவலர்கள் சமூக விதை பாதுகாப்பு முன்னெடுப்பில் (Inisiatif Rizab Benih Komuniti) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நடக்கும் விதை சந்தை நிகழ்வுக்கு முன்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கடந்த செப்டம்பர் 12-இல், விதை மரபணு மாற்றம் மற்றும் விதை வர்த்தகமயமாக்கல் ஏற்படுத்தும் பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக இணையவழி பொதுக் கருத்தரங்கினை நடத்தியது. 2010-லிருந்து இன்று வரை 57 விதமான மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவர வகைகளை இறக்குமதி செய்ய மலேசியா அனுமதி வழங்கியுள்ளது என்று கருத்தரங்கில் கலந்து கொண்டோரும் பொது மக்களும் அறிந்திருக்கவில்லை. இவற்றில் உணவு, தீனி மற்றும் சுத்திகரிப்புக்கான சோளம், சோயா, உருளைக்கிழங்கு, அல்ஃபால்ஃபா, சர்க்கரைக் கிழங்கு (sugar beet), பருத்தி, காட்டுக்கடுகு (Canola), ஒயில்சிட் ரேப் (oil seed rape) ஆகியவையும் அடங்கும்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இதர அமைப்புகள் மற்றும் விவசாய இயக்கங்களோடு இணைந்து, மலேசியாவை புதிய தாவர வகை பாதுகாப்பு  (UPOV91 என்று அறியப்படுகிறது) அனைத்துலக மாநாட்டில் இணைய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. UPOV91 விவசாயிகள் சொந்தமாக சேமிக்கும் விதையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதோடு அவற்றை பரிமாறிக் கொள்வதற்கு மற்றும் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

நம்முடைய பாரம்பரிய விதைகள் காணடிக்கப்படும்பட்சத்தில், நம் விவசாயிகள் மற்றும் பயிர் வளர்ப்போர் வேளாண்மையில் ஏற்படும் முக்கிய சவால்களான பருவநிலை மாற்றம், பயிர் நோய், பூச்சித் தாக்கம் போன்றவற்றைத் திறன்பட சமாளிக்கும் ஆற்றலை இழந்துவிடுவர்.  ஆகையால் நாம் அனைவரும் விழித்தெழுந்து விதை தொடர்பான நம் தனிப்பட்ட மற்றும் கூட்டு உரிமைகளை தற்காத்துக்கொள்ள வேண்டும். விதை இறையாண்மையின் முக்கியத்துவத்தை நம் குழந்தைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

இவ்விடயத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்“விதை நமது பாரம்பரியம்” என்ற கருப்பொருளில் ஓவியப் போட்டியையும் படத்தொகுப்பு தயாரிக்கும் போட்டியையும் நடத்தியது. பினாங்கு மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். வகுப்பு 4-லிருந்து 6 வரைக்குமான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் 18 பள்ளிக்கூடங்களிலிருந்து 95 மாணவர்கள் ஓவியத்தை அனுப்பி வைத்திருந்தனர். விதைகளைக் கொண்டு படத்தை உருவாக்குவதற்கான போட்டி செப்டம்பர் 23-இல் நடந்தேறியது. பதினேழு இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த அறுபது மாணவர்கள், 3 பேர் கொண்ட 20 குழுக்களாகத் தங்கள் திறமைகளைக் காட்டினர்.

விதைகளைப் பற்றிய ஒரு புரிந்துணர்வை உருவாக்குவதற்கு இந்த ஓவியப் போட்டிகள், உத்வேகத்தை உருவாக்கும் ஒரு கலைநயம் செறிந்த வழியாகும். ஒவ்வொரு ஓவியப்படைப்பும் மாணவர்களின் கலைத்திறனையும், சிந்திக்கும் ஆற்றலையும் விதை பற்றிய புரிதலையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்தேற ஒத்துழைப்பு நல்கிய பினாங்கு மாநில கல்வி இலாகா மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள். ஓவியப் படைப்புகளின் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து இந்தப் போட்டியின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய உதவிய நடுவர்களுக்கும் எங்களுடைய உளமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.

இன்றைக்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த ஓவியங்களை மறவாமல் இரசித்துச் செல்லுங்கள். பாரம்பரிய விதைகள், விதை சேகரிப்பு, விதை சேமிப்பு முறைகள், பயிர் முளை விடும் முறை மற்றும் பருப்பு வகைகளிலிருந்து ஆரோக்கிய பானத் தயாரிப்பு முறைகளை அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்வர். இரசாயனமற்ற வேளான் பொருட்கள், காய்கறிகள், பழங்களையும் நாங்கள் இங்கு விற்பனைக்கு வைத்துள்ளோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் கொண்டு வந்திருக்கும் விதை மற்றும் மரக்கன்றுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உணவுப் பாதுகாப்பு மற்றும் விதை இறையாண்மையை மேம்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கும், வேளாண் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பதற்கும் விதைகளைப் பகிர்தலை ஒரு வழக்கமாக மாற்ற வேண்டும். விதைகள் நம் வாழ்வின் முக்கிய அம்சம். அவை ஒரு சிலரின் சுயநலத்திற்காக வர்த்தகப் பொருளாக மாற்றப்படக்கூடாது என ஒவ்வொருவரும்உறுதி பூண வேண்டும். நமது பாரம்பரிய விதைகளை சேமியுங்கள்! பகிருங்கள்!

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

குறிப்பு:
பசுமை நடவடிக்கை வாரம் என்பது சமூகம், நாடு, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிலைபேறான பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கான கூட்டுப்பிரச்சார நடவடிக்கையாகும். சுவீடன் நாட்டின் இயற்கை பராமரிப்பு அமைப்பு (SSNC) 1990-இல் சுவீடன் நாட்டு மக்களின் பசுமை நடவடிக்கை வார பிரச்சாரத்தையும், 2010-இல் அனைத்துலக பிரச்சாரத்தையும் தொடங்கியது. அனைவருக்கும் சிறந்த உலகை உருவாக்குவதற்காக உலகெங்கிலும் உள்ள அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்த அமைப்பு உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தப் பிரச்சாரத்தைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்துலக பயனீட்டாளர் அமைப்புடன் இணைந்து சுவீடன் நாட்டின் இயற்கை பராமரிப்பு அமைப்பு மேற்கொள்கிறது.