பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு

பத்திரிகை செய்தி. 20.1.22

பினாங்கின் சுங்கை பாக்காப் பகுதியில் மறு சுழற்சி தொழிற்சாலையால் சத்தம் மற்றும் தூசி தூய்மைக்கேடு. குடியிருப்பாளர்கள் அவதி!
உடனடி நடவடிக்கை தேவை என்கிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.

பட்டர்வொர்த் அருகே உள்ள சுங்கை பாக்காப், கம்போங் லிமா என்னுமிடத்தில் செயல்பட்டு வரும் ஒரு மறுசுழற்சி தொழிசாலையினால் ஏற்படுகின்ற சத்தம் மற்றும் தூசி தூய்மைகேட்டினால் அங்கு வசிப்போர் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக பினாங்கின் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பழைய பொருட்களை சேகரிக்கும் தளத்தில் இருந்து தங்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படுவதாக அங்கு வசிப்போர் தங்களுக்கு புகார் கொடுத்துள்ளதாக அவ்வியக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன் தெரிவித்தார்.

ஆகவே செபராங் பிறை மாநகர் மன்றம், வட்டார நில இலாகா ஆகியவை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் மறுசுழற்சி மற்றும் பழைய பொருள் சேகரிப்பு தளங்களின் செயலாக்க நடவடிக்கைகளால் எழும் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சி கேட்டுக்கொண்டார்.

இங்கு வசிப்போர் யாருமே, இந்த கம்போங் லிமா கிராமத்தில் செயல்படும் மறுசுழற்சி சேகரிப்பு தளத்தின் செயல்பாடுகளில் மகிழ்ச்சியடையவில்லை.

குறிப்பாக இந்த பழைய பொருள் சேகரிக்கும் இடத்திற்கும் குடியிருப்புப் பகுதிக்கும் உள்ள இடைவெளி தூரம் சுமார் 50 முதல் 100 மீட்டர் வரை தான்.

குடியிருப்புவாசிகளின் கூற்றுப்படி, தொழிற்சாலையிலிருந்து வரும் சத்தம் இடி போன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் சில நேரங்களில் தினமும் இரவு 7 முதல் 8 மணி வரை நீடிக்கின்றது.

இதன் காரணமாக இங்கு வசிப்பவர்களின் பள்ளி குழந்தைகள் இணையத்தில் பாடங்களை படிக்க முடியவில்லை என பெற்றோர்கள் குறைபட்டுக்கொண்டதாக மீனாட்சி மேலும் கூறினார்.

சத்தம் மட்டுமின்றி, பிரதான சாலை வழியாக அடிக்கடி செல்லும் வாகனங்களால் ஏற்படும் தூசி பிரச்னையையும் இவர்கள் எதிர்கொள்கின்றனர்.

கனரக வாகனங்களும் (லாரிகள்) அடிக்கடி வளாகத்திற்குள் நுழைந்து வெளியேறுகின்றன. குடியிருப்புவாசிகளின் கூற்றுப்படி, இது காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பிரதான சாலை வழியாக கனரக வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதனால் பலரின் வீடுகள் தூசிகளால் மூழ்கப்பப்பட்டுள்ளது.

இது மக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் இத்தொழில் இங்கு செயல்படுவது பொருத்தமற்றது. இந்த விஷயத்தை செபராங் பிறை மாநகர மன்றத்தின் கவனத்திற்கு பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கொண்டு சென்றது. ஆனால் இதுவரை இப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இதனால், இந்த தொழிசாலைக்கு கொடுக்கப்பட்ட உரிமம் குறித்து இங்கு வசிப்போர் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆகவே இது சம்பந்தமாக, அனைத்து மாநில அதிகாரிகளும் வெளிப்படையான கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை மேற்கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.

அதிகாரிகள் நடத்தும் விசாரணையில், அந்த வளாகங்கள் நிபந்தனைகளை மீறி இருந்தால் அவற்றின் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மீனாட்சி ராமன் வேண்டுகோள் விடுத்தார்.

மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.
பினாங்கு