பினாங்கு சாலைகளில் நெரிசல் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும். வாகன ஓட்டிகள் அச்சம்.

பத்திரிகைச் செய்தி 02.08.2024

பினாங்கு சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு முக்கியமான நேரங்களில் குறிப்பாக அதிகமானோர் சாலையை பயன் படுத்தும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு சாலைப் போக்குவரத்துத் துறையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேடுக்கொண்டுள்ளது.

பி.ப. சங்கத்தின் ஆய்வுப்படி, அதிகமான சரக்குகள் மற்றும் கட்டுமான வாகனங்கள் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசல்மிக்க நேரங்களில் பயணம் செய்வது தெரியவந்துள்ளது. இவர்களின் பெரிய அளவு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

இந்த பெரிய வாகனங்கள் ஜாலான் மஸ்ஜித் நெகிரி மற்றும் ஜாலான் ஸ்காட்லாந்தின் சீரான போக்குவரத்தை சீர்குலைக்கிறது என்றார் அவர். இந்த சாலைகள் பினாங்கில் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். மேலும் இந்த சாலைகளில் பல பள்ளிகள் இருப்பதால் அவற்றின் நெரிசல் மேலும் அதிகரிக்கின்றது.

இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாக நகர்வதால் நெரிசல் அதிகரித்து கணிசமான தாமதத்திற்கு வழிவகுக்கின்றது. சில வாகனமோட்டிகள் தங்கள் இலக்குகளை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயண ம் செய்வதாக தங்களிடம் புகார் செய்திருப்பதாக முகைதீன் கூறினார்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தினமும் காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையும், கனரக வாகனங்கள், நகரின் மையப் பகுதிக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும்.

இதேபோன்ற நடவடிக்கை கோலாலம்பூரில் 2022 முதல் நடைமுறையில் உள்ளது, அதே நெரிசல் நேரத்தில் 7,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள கனரக வாகனங்கள் நகர மையத்திற்குள் நுழைவதற்குசாலைப் போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இந்த முன்முயற்சியானது போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதையும் நகர்ப்புறங்களில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகவே இதே போன்ற நடவடிக்கைகளை பினாங்கில் கடைபிடிக்கப்பட வேண்டும் என முகைதீன் அப்துல் காதர் பினாங்கு போக்குவரத்து இலாகாவை கேட்டுக்கொண்டார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்