பினாங்கு தெற்கு மீட்பு திட்டத்தை தொடர வேண்டாம்! மத்திய, மாநில அரசுகளூக்கு வேண்டுகோள்.! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கூட்டாக அறைகூவல்.

பத்திரிகை செய்தி. 2.9.23

பினாங்கு தெற்கு மீட்பு (பிஎஸ்ஆர்) திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வலுவாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்திற்கு ஜூலை மாதம் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்த பிறகு, திட்டத்திற்கான பணிகள் செப்டம்பர் 1 ம் தேதி தொடங்கும் என்று பினாங்கு மாநில அரசு தெரிவித்திருப்பதை அறிந்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த முடிவு தங்களுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருவதாக பி.ப.சங்க தலைவர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்க கெளரவ செயலாளர் மகேஸ்வரி சங்கரலிங்கம் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

நகர் மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் 1976ன் கீழ் திட்டத்தை தொடங்குவதற்கான திட்ட அனுமதியை மாநில அரசு பெற்றுள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம்.

இது பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வ தேவை.

சட்டச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, பென் முத்தியாரா, மீனவர் சங்கம் மற்றும் வட மேற்கு மீனவர்கள் சங்கம் மேலும் அனைத்து மீனவர்களும் கவலைகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுப்பிய போதிலும், மடானி அரசாங்கம் திட்டத்தைத் தொடர்வதில் நாங்கள் திகைக்கிறோம் என இருவரும் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின் ஒப்புதலுக்கு மீனவர்கள் சவால் விடுத்துள்ளனர், ஆனால் சுற்றுச்சூழல் தரச் சட்டம், 1974 ன் கீழ் அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு வாரியத்தால் இன்றுவரை விசாரணை தேதி நிர்ணயிக்கப்படவில்லை.

மூன்று தீவுகளில் இருந்து ஒரு தீவாக இத்திட்டம் குறைக்கப்பட்டது, மீனவ மக்களின் கவலைகளையும் போக்கவில்லை.

பொருளாதார நடவடிக்கைகளின் எந்தவொரு விரிவாக்கத்திற்கும் நிலப்பரப்பில் நிலம் போதுமானது என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வாதிட்டதால், இந்தத் திட்டம் வெறுமனே தேவையில்லை.

உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் மாற்ற முடியாத ஒரு முக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை அழிப்பது வெறுமனே நியாயப்படுத்த முடியாதது மற்றும் எந்த அர்த்தமும் இல்லை.

மடானி அரசாங்கம் சமூக நீதியை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுவதாகக் கூறியது, ஆனால் உத்தியோகபூர்வ மீனவர் சங்கத்தின் கடுமையான எதிர்ப்புகளைப் புறக்கணிப்பது நல்லாட்சி மற்றும் அக்கறையுள்ள அரசாங்கத்தின் தவறான திசையில் செல்கிறது.

சீரமைப்புத் திட்டத்தைத் தொடர்வதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அநீதியை அதிகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு மற்றும் குறிப்பாகப் பிரதமர் மற்றும் மாநில அரசு ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறோம்.

தயவு செய்து மீனவர்களின் உண்மையான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, மக்களுக்கு லாபம் தரும் தனியார் நலன்களின் விருப்பத்திற்கு அடிபணியாமல், பணிகளைத் தொடங்குவதை உடனடியாக நிறுத்தும்படி நாங்கள் கோரிக்கை விடுக்க விரும்புகிப்றோம் என முகைதீன் அப்துல் காதர் மற்றும் மகேஸ்வரி தெரிவித்தனர்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
மற்றும்

மகேஸ்வரி சங்கரலிங்கம்
கௌரவ செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.