பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மேம்படுத்தப்பட்ட இணையத்தளம் தொடங்கப்பட்டதற்கான செய்தி

உலக மனித உரிமைகள் தினத்தின் 72-வது ஆண்டு விழாவில் மற்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் 50-வது ஆண்டு விழாவில், சமூகத்தின் எல்லாப் பிரிவிலும் உள்ள மக்களைச் சென்றடையுமாறு நாங்கள் எங்களுடைய இணையத்தளத்தை மேம்படுத்தியுள்ளோம். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரு நல்ல நீதியான, பொறுப்புணர்ச்சியுள்ள, சுற்றுச்சூழல் நிலைபேற்றினை பேணும் ஓர் அக்கறையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே அதன் குறிக்கோளாக இருக்கிறது. இந்த நோக்கத்திற்காக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, உணவு மற்றும் தயாரிப்புகள் பாதுகாப்பு, பயனீட்டாளர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் கல்வி ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளில் நாங்கள் முக்கிய பங்காற்றி வருகிறோம். வெளியீடுகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக, அடிமட்ட சமூகங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வட்டார மற்றும் சர்வதேச அமைப்புகளின் மூலமாக இவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

கோவிட்-19 பெருந்தொற்று, சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி போன்ற பல நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ளும் நேரத்தில், தற்போதைய பல்வேறு சிக்கல்களில் நுகர்வோரை திறம்பட தொடர்புகொள்வதற்கும், ஈடுபடுவதற்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பங்கு முக்கியம். இந்த நெருக்கடிகள் யாவும் விவேகம் மற்றும் நெறிமுறைகளால் வழிநடத்தப்படாத, பேராசை மற்றும் ஆணவத்தால் உந்தப்பட்ட அனைத்து மனித நடவடிக்கைகளின் விளைவேயாகும். இலக்க உலகின் ஆபத்து மற்றும் துஷ்பிரயோகங்களை நாம் அறிந்திருந்தாலும், இந்த உலகு எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும் தலைமுறையோடு தொடர்புகொண்டு, ஈடுபடுத்திக்கொண்டு, உன்னத நெறிகளை அவர்களிடத்தில் புகுத்துவதே எங்கள் நோக்கமாகும். நாங்கள் இவ்விடத்தில் இல்லாத பட்சத்தில், சுயநலநோக்கோடும், அழிக்கும் திட்டங்களோடும் இளைய சமுதாயத்தை ஆட்கொள்ள நினைப்பவர்கள் அவ்விடத்தை நிரப்பிவிடுவர்.நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு சின்னஞ்சிறிய வைரஸ் நம்முடைய வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை; தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்; வியாபாரங்கள் திவால்நிலையை எதிர் கொண்டுள்ளன; அனைத்துலக வாணிபம் தடைபட்டுள்ளது. வழிபாட்டுத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நம்முடைய சமூக வாழ்க்கை ஒரு குறுகிய எல்லைக்குள் வந்துவிட்டது. தற்கொலைகள், மனநல பாதிப்பு, குற்றச் செயல்கள் பெருகிவிட்டன. திருமணங்கள் முறிந்து போயிருக்கின்றன. இந்த பெருந்தொற்றின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார பாதிப்பு இன்னும் ஓரிரு வருடங்களில் தெரிந்துவிடும். இலட்சக்கணக்கானோர் அவதியுறும் இவ்வேளையில் சில பணக்கார வர்க்கத்தினர் அதனால் பெருத்த இலாபத்தைச் சம்பாதித்து தங்களுடைய சொத்தில் இன்னும் பல கோடிகளை சேர்த்துக்கொண்டுள்ளனர்.

பெருந்தொற்று உலகளாவிய மற்றும் தேசிய ஏழ்மை மற்றும் சமத்துவமின்மையை மோசமடையச் செய்துள்ளது. பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பதாகவே, 820 மில்லியன் பேர் (9 பேரில் ஒருவர்) உணவின்றி இருக்கின்றனர் என்றும் 2019-ம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உணவு பாதுகாப்பு மற்றும் சத்துணவு தன்னுடைய உலக அறிக்கையில் குறிப்பிப்பிட்டுள்ளது. 2018-ல் இந்த எண்ணிக்கை 811 மில்லியனாக இருந்தது. தற்போது நிகழ்ந்துள்ள வேலை இழப்பு மற்றும் வியாபாரங்கள் மூடப்படுதல் எல்லாம் நிலைமையை இன்னும் மோசமடையச் செய்துள்ளது. பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 2 பில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு பாதுகாப்பான, சத்தான மற்றும் போதுமான உணவு இல்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது. நிலைபேறான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் வளர்ந்து வரும் உலக மக்களுக்குக் கிடைப்பதற்கு உணவு முறையில் ஓர் ஆழமான மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

இயற்கை விரைவாக சரிந்து வருவதால் அங்குள்ள இயற்கை வளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று சமீபத்திய ஐக்கிய நாடுகளின் அறிக்கை எச்சரித்துள்ளது. உலக மக்கள் நம்பியுள்ள உயிர்கோளம் அனைத்து இடஞ்சார்ந்த அளவுகோல்களிலும் பெரிய அளவிற்கு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. பல்லுயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இடையிலான பன்முகத்தன்மை மனித வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வேகமாகக் குறைந்து வருகிறது. காடுகள் அழிக்கப்படுதல், கடல்களும் நிலங்களும் அளவுக்கு அதிகமாக ஆக்கிரமிக்கப்படுதல், காற்று மற்றும் நீர் தூய்மைக்கேடு ஆகியவை உயிரினங்களை விளிம்பு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டன.

உணவு, நீர், எரிசக்தி, ஆரோக்கியம் மற்றும் அத்தியாவசியங்கள் தொடர்பான நம்முடைய உலக சமூக குறிக்கோள் மாறுதல்களை அவ்வறிக்கை வேண்டுகிறது. தற்போதைய கட்டமைப்புகள் பெரும்பாலும் நிலைபேறான வளர்ச்சியைத் தடுப்பதால் அவை உண்மையில் பல்லுயிர் இழப்பின் அடிப்படை, கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. இந்த மாற்றங்கள் சமுதாயப் படிநிலையில் ஒரு சுய இலாபத்தோடு செயல்படுபவர்களின் எதிர்ப்பை உருவாக்கலாம். ஆனால் பொது மக்களின் நலன் கருதி நாம் அந்த எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டும்.

நாம் எவ்விடத்தில் தவறிழைத்திருக்கிறோம் என்பதனை கோவிட்-19 பெருந்தொற்று நமக்கு கோடிட்டுக் காட்டி அதற்கான மாற்றங்களை நாம் முன்னெடுக்க நமக்குத் துணை புரியும். அரசாங்கமும் சட்டதிட்டங்களை உருவாக்குபவர்களும் தனியார் இலாபத்தை விட பொதுநலனை மேம்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக சட்டதிட்டங்களில் மாறுதலை உண்டு பண்ண விரைந்து செயல்படுவதில்லை. இயற்கையை நாம் உணர்ந்து தொடர்புபடுத்தும் விதத்திலும், பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்து பயன்படுத்தும் விதத்திலும் ஒரு தீவிர மாற்றம் தேவை. இயற்கையின் வளங்களை நமது பேராசைக்குத் தீனி போடும் வகையில் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய ஒன்றாக நாம் கருதக்கூடாது. நாம் அதை மதிக்கவும் அதனுடன் இணக்கமாக வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

வரம்பற்ற வளர்ச்சி, தனியார் மூலதனக் குவிப்பு, இலாப அதிகரிப்பு மற்றும் பெருநிறுவனங்களின் பொருளாதார சக்தி செறிவு ஆகியவற்றில் வேரூன்றிய தற்போதைய பொருளாதார அமைப்பே பல நெருக்கடிகளுக்கு மூல காரணம். சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தும், வறுமையை அதிகரிக்கும் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிசெழிப்பு உருவாக்கும் சமத்துவமின்மையை உருவாக்கும் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு, சுற்றுச்சூழல் ரீதியான, நிலையான மற்றும் சமூக ரீதியான நியாயமான வளர்ச்சிக்கான ஓர் எடுத்துக்காட்டு நமக்குத் தேவைப்படுகிறது.

மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு பணியைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். அவர்களுடைய குரலும் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்படாமல் செவிமடுக்கப்பட வேண்டும். அரசாங்கமும் தனியார் நிறுவனமும் கை கோர்த்து இந்தப் பெருந்தொற்றின் பொழுது அதிக சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பயனீட்டாளர்களும் விவேகமான முறையில் செலவு செய்து, செலவுகளைக் குறைத்துப் பாதுகாப்பாக வாழ வேண்டும்.

மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பதற்கும் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்குமான பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் 50 ஆண்டு கால உழைப்பு பல்லூடகங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற்றிருக்காது. அக்கறையுள்ள, பொறுப்பான சமூகத்தை உருவாக்க நமக்கு மலேசியர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

நாங்கள் விவாதிக்கும் பயனீட்டு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள். ஒரு பயனீட்டாளராக உங்களுக்கு இந்தத் தளங்களில் உள்ள விஷயங்கள் பயனாகவும் உதவியாகவும் இருந்தால் அவற்றுக்கு அடையாளக்குறியிட்டு எங்களைத் தொடரத் தவறாதீர்கள்.

இணையத்தளம் : http://consumer.org.my/ta/home-tamil/
முகநூல் : https://www.facebook.com/ConsumerAssociationPenang
படவரி : https://www.instagram.com/consumer_penang/
கீச்சகம் : https://twitter.com/consumer_penang

TAMIL-10 DEC 2020 PR – Message on the launching of CAP’s upgraded virtual platform

பத்திரிகைச் செய்தி 10.12.2020