அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
அல்லாயார்ஹாம் துன் அப்துல் ரசாக் அவர்களின் ஒப்பற்ற பங்களிப்புக்கு என்னுடைய பெருமதிப்புகளையும் பாராட்டுதல்களையும் பதிவு செய்ய எனக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்புக்காக துன் ரசாக் அறநிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த கால வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒன்றுபட்ட மற்றும் முற்போக்கான மலேசியாவிற்கு வித்திட்டவர் அவர்.
எனக்கு இப்பொழுது 87 வயது ஆகிறது. இந்தியாவிலும் மலாயாவிலும் (இப்பொழுது மலேசியா) பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் வாழ்ந்து அதன் அவமதிப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டு, சுதந்திரம், சுயமதிப்பு மற்றும் விடுதலைக்காகப் போராடிய அனுபவம் எனக்கு உண்டு. இந்தக் காலக்கட்டத்தில் நான் எதைச் செய்தாலும், என்னை வழிநடத்தியது குர்ஆன் போதனைகளான: Qul innasalati wanusuki wamahyaya wamamati iillahi rabbil aalamin [6:162] (சொல்லுங்கள்: மெய்யாகவே, என் ஜெபமும் தியாக சேவையும், என் வாழ்க்கையும், மரணமும் (அனைத்தும்) உலகங்களைப் நேசிப்பவரான அல்லாஹ்வுக்காகவே). இந்தச் சமுதாயத்திற்கு நான் கொடுத்துள்ள இந்தச் சிறிய பங்களிப்பு அல்லாஹ்வை மகிழ்ச்சிபடுத்துவதற்காகவேயன்றி அங்கீகாரம், பட்டம், விருது மற்றும் சன்மானங்களுக்காக அல்ல.
ஆகையால் இந்த துன் அப்துல் ரசாக் 2014 விருதுக்கு என்னை அணுகியபொழுது இதற்கு முன்பு எனக்குக் கொடுக்க விளைந்த மற்றெல்லா விருதுகளையும் மறுத்தது போல் அனிச்சையாக இதனையும் மறுத்தேன். என்னுடைய இந்த செயல் அறநிறுவனத்தின் மீதுள்ள அவமதிப்பினாலோ அகந்தையாலோ விளைந்தது அல்ல. ஆனால் அங்கீகாரம், பட்டம், விருதுகளோடு என்னுடைய சேவையை எந்த விதத்திலும் தொடர்பு படுத்தக்கூடாது என்று நான் விடாப்பிடியாகக் கொண்டிருந்த கொள்கைதான் காரணம். துன் ரசாக் அவர்களின் அரசியல் புத்திக்கூர்மை மற்றும் தலைமைப் பண்பிற்கு நான் பெரிய அபிமானி என்ற காரணத்தால் இந்த விருதினை ஏற்றுக்கொள்ளுமாறு என்னுடைய குடும்ப உறுப்பினர்களும் நெருக்கமான நண்பர்களும் என்னை வற்புறுத்தினர். இதனை ஒரு மாதத்திற்கு அசைபோட்ட பிறகு, இறுதியில் விருதினை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்; சமுதாயத்திற்கு நான் செய்த சேவைக்கான விருதாக அல்ல; மாறாக துன் ரசாக்கின் தலைமைப் பண்புகளுக்குத் தலை வணங்கி எல்லோரும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக.
நாடு சுதந்திரம் அடைந்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு அதன் மிகவும் இக்கட்டான தறுவாயில் துன் ரசாக் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பாராளுமன்ற ஜனநாயகம் சரிந்தது. மே 1969 தேர்தலின் பொழுதும், அதற்குப் பிறகும் இனவாதத்தையும் வெறுப்பையும் முடுக்கிவிட்ட சில கட்சிகளின் பொறுப்பற்ற பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் இனமோதல், வன்முறை மற்றும் கலவரங்களைத் தூண்டிவிட்டு சீர்குலைவை ஏற்படுத்தியதன் விளைவாக நாட்டின் இயக்கமே சரிந்துபோகும் நிலையில் இருந்தது. ஒழுங்கற்ற நிலை, குழப்பம் மற்றும் ஐயப்பாட்டு நிலையில், அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்கும் பொருட்டு தேசிய இயக்கக் கழகம் அமைக்கப்பட்டு துன் ரசாக் அதன் இயக்குநர் ஆனார்.
ஆனால் அது பெரும் சவாலாக இருந்தது – உள்நாட்டுப் பாதுகாப்பைத் தக்க வைத்தல்; பொருளாதாரத்தை உயிர்ப்பித்தல்; முதலீட்டாளர்களின் நம்பிகையை ஈட்டல் மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்த்தல். இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு, ஒரு திறமை வாய்ந்த குழுவையும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தேசியத் தலைவர்களையும் உருவாக்குவதற்கு பொருத்தமான தலைவராக துன் ரசாக் இருந்தார். ஓரிரு வாரங்களுக்குள், பாதுகாப்பு நிறுவப்பட்டு, மக்கள் வேலைக்குச் செல்வதும், சந்தோஷமாக இருப்பது என்று வாழ்க்கை வன்முறை மற்றும் சேத பயம் அகன்று புணர்நிலைக்குத் திரும்பியது. நம் தலைவர்களின் விவேகம், சகிப்புத்தன்மை மற்றும் நம் மக்களின் மன்னிக்கும் இயல்பினால் இலங்கை மற்றும் வங்காளதேசத்தைப் போன்ற மோசமான நிலைக்கு நாம் தள்ளப்படவில்லை.
தேசிய இயக்கக் கழகத்தின் சட்டவிதிகளை இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீட்டிக்குமாறும் அல்லது மலாய் அரசாங்கத்தை அமைக்குமாறும் சில மலாய் குழுக்கள் வேண்டுகோள் விடுத்தன. இதனை துன் ரசாக்கும் இதர தலைவர்களும் முற்றிலும் நிகாகரித்தனர். இதற்கு துன் டாக்டர் இஸ்மாயில் கூறிய மறுமொழி வருமாறு:
“நாங்கள் மலாய்க்கார மலேசியாவை உருவாக்க விரும்பவில்லை. ஆனால் எல்லா இன மற்றும் மதத்தினரும் உரிமை கொண்டாடும் மற்றும் எதிர்காலத்திற்குக் கொண்டு சேர்ப்பிக்கும் ஒரு மலேசியாவை உருவாக்க விரும்புகிறோம். நம்முடைய தேசியக் கோட்பாடு ஒரு பல்லினக் கோட்பாடாகும். இந்நாட்டில் ஓர் இனத்தின் நடவடிக்கை மற்ற இனத்திற்கும் அதன் தாக்கங்களை விட்டுச் செல்வதாகத்தான் இருக்கும்.”
இரண்டு வருடங்களுக்குள்ளாகவே ஜனநாயகம் புணர் நிலைக்குத் திருப்பப்பட்டு பாராளுமன்றம் மறுசீரமைக்கப்பட்டது.
மலேசியாவை ஒரு வளமிக்க, முற்போக்கான மற்றும் அமைதியான நாடாக உருவாக்குவதற்கான திறவுகோல் தேசிய ஒருமைப்பாடே என்று துன் ரசாக் திடமாக நம்பினார். 1956-ஆம் ஆண்டின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற அவர், பல்லின மக்களை இணைக்கும் பொருட்டு மலாய் மொழியை முதன்மையான போதனை மொழியாக உருவாக்கி, நம் கல்வித் திட்டக்கொள்கைகளுக்கு பொறுப்பேற்றுச் செயல்படுத்தினார். ஒரு பொதுவான தேசிய பாடத்திட்டத்தை உள்ளடக்கிய சீரான பள்ளி முறையை அவர் விரும்பினார். கல்வியறிவின்மையை துடைத்தொழிக்கும் பொருட்டு அவர் “செயலாக்கப் பந்தம்” (Gerakan Lampu Suloh) துவக்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பள்ளிகளும் கட்டப்பட்டன.
இந்தக் கல்வி அமைப்பு முறை பலதரப்பட்ட இனம் மற்றும் பின்புலத்தைக் கொண்ட சிறார்கள் தொடர்புகொண்டு தேசிய விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்றாலும், அது தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கப் போதுமானதாக இருக்காது என்று துன் ரசாக் உணர்ந்தார். நாம் விருப்பப்பட்ட மலேசிய நாட்டினை உருவாக்குவதற்கு, பல்லின மக்களை ஒன்றிணைத்து ஒட்டுமொத்த வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை இனங்காணுதல் வேண்டும்.
தன்னுடைய 1969-ஆம் ஆண்டு உரையில், பொருளாதார மேம்பாட்டின் நோக்கத்தை துன் ரசாக் இவ்வாறு விளக்கினார்:
“நம் நாடு தொடர்ந்து செழித்தோங்க வேண்டும் என்றால் நம்முடைய பொருளாதார மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகளை நம் மக்களிடைய ஒற்றுமையை உருவாக்குவதற்கும், நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்குமான பாதையில் நோக்கிச் செலுத்த வேண்டும். நமது தேசத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் இந்த அனைத்து முக்கிய நோக்கங்களுக்காகவும் நமது பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்க வேண்டும்; மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஒற்றுமை மட்டுமே நம் அனைவரின் மற்றும் நம் வழித்தோன்றல்களின் மகிழ்ச்சியையும் அடுத்தடுத்து வரும் காலங்களில் உறுதிப்படுத்தும்.”
தற்போதுள்ள அனைத்து கொள்கைகளையும் மறு ஆய்வு செய்யவும், தேசிய ஒற்றுமை, வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்சனைகளைக் கையாள்வதற்கான புதிய வியூகங்களை வகுக்கவும் அவர் தனது அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களுக்கு கட்டளையிட்டார். கலந்தாலோசிப்புகள் புதிய பொருளாதாரத் திட்டத்திற்கு வழி வகுத்தது. இது இரு திட்டங்களை உள்ளடக்கியது. ஒன்று பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இன்னொன்று பொருளாதார மறுசீரமைப்பைப் பரிந்துரைத்தது. நார்வே நாட்டின் பொருளாதார நிபுணர், மலேசிய அரசாங்கத்தின் ஆலோசகர் மற்றும் புதிய பொருளாதாரத் திட்டத்தின் வடிவமைப்பாளர் ஜஸ்ட் பாலண்ட் (Just Faaland) இதனை இவ்வாறு விளக்குகிறார்:
“அரசியல் மற்றும் சமூக எழுச்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இரண்டு முக்கிய சிந்தனைகள் தோன்றின. ஒன்று, மற்றெல்லா முதன்மையான விஷயங்களை விட பொருளாதார வளர்ச்சியை வலியுறுத்தியது. புதிய பொருளாதாரத் திட்டத்தை முன்மொழிந்தவர்கள் வளர்ச்சியில் உள்ள சவால்களை சற்று வித்தியாசமாக விளக்கினர். நாட்டில், விரைவில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய கட்டமைப்புக் குறைபாடுகள் பெருகி வருவதற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இனத்தொகையில் ஒரு பெரும்பகுதி நவீன பொருளாதார மற்றும் முக்கிய கொள்கைகளில் பங்கெடுத்துக்கொள்ளும் தயார் நிலையில் இல்லை. முக்கிய நிறுவன, சமூக மற்றும் கலாச்சாரத் தடைகள் மக்கள் திறம்பட பங்கேற்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இந்தச் சமச்சீரற்ற நிலையை நேரடியாக இனங்காண வேண்டும். இவை வளர்ச்சி வியூகத்தின் வெறும் அங்கங்கள் மட்டுமல்ல,” என்று அவர் கூறுகிறார்.
புதிய பொருளாதாரத் திட்டத்திற்கு ஜஸ்ட் பாலண்ட் அளித்த இந்த பரிந்துரைகளை துன் ரசாக் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். ஏனெனில் துன் ரசாக்கும் பொருளாதார வளர்ச்சியின் மூலமாக உருவாகும் வளங்களை சம அளவில் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதிலும், தேசிய ஒருங்கிணைப்பை அடைய பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என்பதிலும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இனம் பாராது ஏழ்மையைத் துடைத்தொழித்தல், பொருளாதார செயல்பாடு மற்றும் இருப்பிடம் சார்ந்த இன அடையாளத்தைக் குறைத்தல் ஆகிய இருமுனை வியூகத்தில் புதிய பொருளாதாரத் திட்டம் வெற்றியைக் கண்டது. எந்த ஒரு சமூகக் கொந்தளிப்பையும் எதிர்கொள்ளாமல் 45 வருடங்களாக அமைதியை அனுபவித்து வருகிறோம்; வறுமை அநேகமாகத் துடைத்தொழிக்கப்பட்டாலும் இனங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயான சமத்துவமின்மை வளர்ந்துள்ளது; பொருளாதார செயல்பாடு மூலமாக ஒரு இனத்தை இனங்காணுதல் மற்றும் இருப்பிடம் சார்ந்த இன அடையாளக் குறைப்பு கணிசமான அளவில் குறைந்துள்ளது.
புதிய பொருளாதாரத் திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் அதே வேளையில், துன் அப்துல் ரசாக் காலமான பிறகு அவரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள தவறுகளும் அதனால் எழுந்த கடும் விமர்சனங்களையும் நாம் புறந்தள்ளலாகாது. துன் ரசாக்கின் சமூக நல குறிக்கோள்கள் மற்றும் புதிய பொருளாதாரத் திட்டத்திலிருந்து விலகி, பொருளாதார வளர்ச்சி மற்றும் தாட்செரிசம் மற்றும் ரீகனோமிக்ஸின் (Thatcherism and Reaganomics) புதிய தாராளவாத முன்மாதிரிகளால் ஈர்க்கப்பட்டதன் விளைவே இந்த துஷ்பிரயோகங்கள்.
துன் ரசாக், துன் டாக்டர் இஸ்மாயில் இருவருமே கட்சிக்கு அரசாங்கத்தின் மீது உள்ள ஆளுகையை நம்பினர். கட்சி மக்களுக்கு ஒரு அறங்காவலராக இருக்க வேண்டும் எனவும் அந்த நம்பிக்கையை நிறைவேற்றுபவர்கள் நேர்மை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இருவரும் எதிர்பார்த்தனர். நாட்டை அவர்கள் வழிநடத்திய காலக்கட்டத்தில், அரசாங்கம் இந்த கொள்கையிலிருந்து வழுவியதே இல்லை. எல்லா முயற்சிகளும் இந்த நம்பிக்கையை நோக்கியே செலுத்தப்பட்டன. அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அதனை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கவும் பட்டனர். ஜனநாயகத்தில், அரசாங்கம் என்பது ஒரே மாதிரியான உரிமைகளைக் கொண்டுள்ள எல்லாப் பிரஜைகளுக்குமானது. அதிகாரத்திற்குப் போட்டியிடும் அரசியல்வாதிகள் இந்த அரிய ஆலோசனையைக் கருதில் கொள்வார்களாக.
அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு ஊழியர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட விரோத வழிகளில் செல்வம் சேர்க்கும் அரசாங்கத்தின் ஊழல் நிலையை அவர் உணர்ந்தவராக இருந்தார். இதன் பொருட்டு உடனடியாக நடவடிக்கையும் எடுத்தார். அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டம் எண் 22/70 மூலம் எந்தத் தரப்பின் இடையூறு இல்லாமலும் சுயமாக நடவடிக்கையில் இறங்கும் அதிகாரத்தை ஊழல் எதிர்ப்பு தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார். இந்த அதிகாரம் உள்ளவர் மாட்சிமை பொருந்திய மாமன்னருக்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார். ஒருவர் தன்னுடைய பொது அந்தஸ்து மற்றும் பதவியை பணம் மற்றும் வேறு ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவது குற்றம் என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் அமலுக்கு வந்த ஒரு வருடத்திற்குள் பேராக் மற்றும் திரெங்கானு மாநில மந்திரி புசார்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு அமைச்சரும் நீக்கப்பட்டார். பொதுச் சேவையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் துன் ரசாக் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதற்கு இதுவே தக்க சான்று.
உறுதியான, தூய்மையான அரசாங்கமும் மற்றும் அரசியல் நிலைத்தன்மையுமே புதிய பொருளாதாரத் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்குமான முன் நிபந்தனைகளாகும். இந்த முன்நிபந்தனைகளை அடைவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளே அவரை ஒரு சிறந்த அரசியல்வாதியாக அடையாளம் காட்டின. மே கிளர்ச்சிக்குப் பிறகு பொருளாதார, சமூக மேம்பாட்டைக் கொண்டு வருவதற்காகவும் ஒற்றுமையைப் பேணுவதற்காகவும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோடு சந்திப்புக் கூட்டங்களை நடத்தினார்.
ஓர் ஒற்றுமையான, முற்போக்கான மலேசியாவை உருவாக்குவதற்கான அவருடைய நேரடி அணுகுமுறை, நேர்மை மற்றும் திட நம்பிக்கை எதிர்க்கட்சி தலைவர்களின் முடிவுகளில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் பலனாக ஜனவரி 1973-க்குள் சரவாக், பேராக், பினாங்கு, கிளாந்தான் திரெங்கானு மற்றும் கெடாவில் கூட்டணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. மாநில கூட்டணி அரசாங்கங்களின் அனுபவத்தின் வாயிலாக தேசிய முன்னணி உருவெடுத்து, பிறகு அது 1.6.1974-ல் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. தேசிய முன்னணி சரியான தருணத்தில் ஓர் “உறுதியான, ஒற்றுமையான பல்லின மக்களைக் கொண்ட, நிலைத்து நிற்கக்கூடிய ஓர் அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என்பதே துன் ரசாக்கின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவருடைய எதிர்பாராத மரணத்தினால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.
மேற்கு நாடுகளுக்கு ஆதரவான நம்முடைய வெளியுறவுக் கொள்கையை கூட்டு சேராத கொள்கையாக அதிரடி மாற்றம் செய்தது துன் ரசாக்கின் மற்றுமொரு முக்கியப் பங்களிப்பாகும். துங்கு அப்துல் ரஹ்மான் ஆட்சியின்பொழுது மலேசியா ஒரு பிரிட்டிஷ் புதிய-காலனியாக கருதப்பட்டது. அது வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் குறைந்த செல்வாக்கைக் கொண்டிருந்தது. துன் ரசாக் கம்யூனிச நாடுகளோடு இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தியதோடு அணிசேரா இயக்கத்திலும் தீவிரமாக பங்கேற்றார்.
1974-இல் துன் ரசாக்கின் சீனப் பயணம் ராஜதந்திர உறவுகளை நிலைநாட்ட உதவியது ஒரு முக்கிய வளர்ச்சியாகும். அக்காலக்கட்டத்தில் நிலவிய கம்யூனிச அச்சமும், ஒரு சில ஆசியத் தலைவர்களிடையேயான மறுப்புகளும் இருந்த நேரத்தில் இது ஒரு தைரியமான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கையாகும்.
நெல்வயல்களில் உழைத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள், ரப்பர் மரம் சீவும் தோட்டப் பாட்டாளிகள், பாரம்பரிய மீனவர்கள், தொழிற்சாலை மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற “சிறிய ஆண்கள் மற்றும் பெண்கள்” மீது துன் ரசாக் அதிக அக்கறை கொண்டிருந்தார். கிராமப்புற அமைச்சராக இருந்த அவர், பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தோட்ட மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை வகுத்து அமல்படுத்தினார். வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு உற்பத்தியை அவர் மேம்படுத்தினார். 1970-களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் பொழுது பச்சைப் புத்தகத் திட்டத்தைத் துவங்கி மக்கள் தங்கள் சொந்த உணவைப் பயிர் செய்ய ஊக்குவித்தார். தனக்கான உணவுத் தேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்வதின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவர் இவ்வாறு கூறுகிறார்: “சுய உணவு உற்பத்திக்கான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதில் தொழிற்துறையை அளவுக்கு அதிகமாக நம்பி இருக்கக்கூடாது.”
உலக வங்கி இதனைப் பற்றிப் பேசுவதற்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்பதாகவே அவர் சுய உணவு உற்பத்தியில் அக்கறை செலுத்தியிருந்தார். தேசிய, மாநில மற்றும் வட்டார அளவில் செயற்குழு மற்றும் இயக்க அறைகளை உருவாக்கிய அவர் மேம்பாட்டுத் திட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட்டு சரியான பலன்களை அளிப்பதை உறுதி செய்தார். கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் கடுமையான அலுவகக் கட்டுப்பாட்டு விதிகளால் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடாமல் இருப்பதற்காக அவர் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வழிகாட்டிகள் அடங்கிய சிவப்புப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அவர் தன்னிச்சையாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட இயக்க அறைகளுக்கு வருகை தந்து மேம்பாட்டுத் திட்டங்கள் சரியாக நடைபெறுகின்றனவா, என்னென்ன பிரச்சனைகளை எழுகின்றன என்பதைக் கண்டறிந்து அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பும் வழங்கினார்.
தேசிய இயக்கக் கழகத்தின் தலைவராக இருந்த துன் ரசாக் பணியிடத்தில் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்த அது தொடர்பான சட்டவிதிகளை அறிமுகப்படுத்தினார். தொழிலாளர்களுக்கு வருடாந்திர விடுமுறை, மருத்துவ சிகிச்சை, பிரவசகால நன்மைகள், எட்டு மணி நேரத்திற்கு மேற்பட்டு உழைப்போருக்கு கூடுதல் நேர சம்பளம் கொடுக்கப்பட்டது. 1969-இல் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சமூக பாதுகாப்பு சட்டத்தில் உள்ளனவற்றை அமல்படுத்துவதற்காக 1971-இல் சமூக பாதுகாப்புக் கழகம் (சொக்சோ) உருவாக்கப்பட்டு அதற்கான வரைதிட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பணியிடங்களில் அல்லது வேலை முடிந்து வீடு செல்லும் நேரத்தில் விபத்துக்குள்ளாகும் தொழிலாளர்களுக்கு சொக்சோ இழப்பீடு வழங்குகிறது. பணியின்பொழுது விபத்தில் இறந்துபோன தொழிலாளர்களை நம்பி இருப்பவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. தொழிலால் மிகவும் மோசமான இயலாமை நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளர்கள் இயலாமை ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுவர்.
மலேசியர்களின் பாரம்பரிய இஸ்லாமிய வாழ்க்கை முறையைத் தற்காத்தல்; பன்மய கலாச்சாரம், நம்பிக்கைகளைக் கொண்டாடுதல்; தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுதல்; எல்லோருக்குமான சமூக பாதுகாப்பு, நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்; பிராந்திய, அனைத்துலக விவகாரங்களில் முனைப்பாக பங்குகொள்ளல் – இவையெல்லாவுமே ஆறு வருட குறுகிய காலக்கட்டத்திற்குள் துன் ரசாக்கின் நிர்வாகம் நிகழ்த்திய சாதனைகளாகும். இந்தக் காலக்கட்டத்தில் அவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை நன்கு அறிந்திருந்தார். அந்த நோய்ப் பாதிப்பை தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் அவர் மறைத்துவிட்டார். நாட்டிற்கான தன்னுடைய கடமையில் தன்னுடைய நோய் இடையூறு விளைவிக்காமல் பார்த்துக்கொண்டார். தன்னுடைய பணிகளை ஆற்றலோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் மேற்கொண்ட துன் ரசாக் ஒரு தலைசிறந்த வீரர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பல்லின மக்களுக்குச் சரியாகப் பகிர்ந்தளித்து ஓர் ஒற்றுமையான மலேசிய மக்களை உருவாக்கும் புதிய பொருளாதாரத் திட்டத்தின் உன்னத நோக்கம் துன் ரசாக்கின் வழிகாட்டுதல் இல்லாமல் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்கு, கொள்கைகளில் உள்ள குறைபாடுகள் காரணமல்ல. மாறாக, தூரநோக்கு, விவேகம் மற்றும் நியாயம் அற்ற அமலாக்க முறைகளே காரணமாகும். இதனை பாலண்ட் மற்றும் அவரின் இரு இணை எழுத்தாளர்களும் வளர்ச்சி மற்றும் இன பாகுபாடு (Growth and Ethnic Inequality) என்ற 2003-ஆம் பதிப்பின் மூலமாக எச்சரித்துள்ளனர்”.
“இன்று, அதாவது 1969/70 இன, சமூக மற்றும் மதப் பிரிவினாயால் வருமானத்தில் அதீத ஏற்றத்தாழ்வும் வறுமையும் நிலவுகின்றன. இது போன்ற ஒரு நிலைமை – திருத்தப்படாத பட்சத்தில் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடின்மையும், 1969-இல் ஏற்பட்ட வன்முறை கொந்தளிப்புகளும் திரும்புவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவிடும். இது போன்ற பிரச்சனைகளை இனங்காணாத நாடுகளின் தலைவிதி இதுதான். சில நாடுகள் இனப்பிரிவினை மற்றும் பகைமை காரணமாகச் சிதைந்துவிட்டன. மலேசியாவில் பெரிய விடயம் என்னவென்றால், குறைவான செலவில், வெகு விரைவில் எப்படி இதற்குத் தீர்வு காண்பது என்பதுதான். இனம் சார்ந்த, உறுதியான நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லும் கொள்கைவிதிகள் எவற்றையும் உருவாக்காமலேயே, எல்லோருக்குமான சமமான மற்றும் நியாயமான வாய்ப்பினை உருவாக்குவதே இங்கு தேவையாக இருக்கின்றது.”
அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் நோராய்னி எம். நூர், இனப்பிரிவினை மற்றும் சச்சரவுச் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்:
“கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களும் இடையேயான பிரிவினை அதிகரித்து வருகிறது. தற்போதைய கல்வி முறையில், மலாய்க்காரர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசாங்க மற்றும் சமயப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். பெரும்பாலான சீனர்கள் தங்களுடைய பிள்ளைகளைச் சீனப்பள்ளிகளில் கல்வி கற்க அனுப்புகிறார்கள். மலாய்க்காரர்கள் பொது/அரசாங்க பல்கலைக்கழகங்களில் பாடங்களை மலாய் மொழியில் கற்கின்றனர். பெரும்பாலான சீனர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தில் கற்கின்றனர். பெரும்பாலான மலாய்க்காரர்கள் அரசாங்கத் துறையிலும், பெரும்பாலான சீனர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர். தனியார் துறைகளில் போட்டி மனப்பான்மை இருக்கின்ற காரணத்தாலும் அங்கு அரசாங்கத் துறையை விட கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட்ட காரணத்தாலும், இது வெவ்வேறு குழுக்களிடையே ஏற்றத்தாழ்வு உணர்வினை அதிகப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும். பெரும்பாலான சூழ்நிலைகளில் மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள், அவரவர் இனம் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே குடியிருக்கின்றனர். ஆகையால் மற்றொரு இனத்தைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளவோ அல்லது தொடர்புகொள்ளவோ முடிவதில்லை.”
துடிப்பான, ஆற்றல்மிக்க, நேர்மையான, நியாயமான மலேசியாவை உருவாக்குவதற்காக என்னுடைய சிறிய பங்கினை ஆற்றியுள்ள நான் மேற்குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையை, நாம் எதிர்கொள்ளும் திராணி இல்லாத இரண்டவாது இன சச்சரவை ஏற்படுத்துவதற்குள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே என்னுடைய அளவிலா எதிர்பார்ப்பு. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்வதற்காகவும், அதனைக் களையும் வழிகளை சிந்திப்பதற்காகவும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். தற்போது மிகவும் மோசமான அரசியல் செயல்பாடுகள் நிலவுகின்றன. பொய்களை அவிழ்த்து விடுவதும், வெறுப்புகளை உமிழ்வதும், ஒருவரின் நடத்தையை மோசமாக விமர்சிப்பதும், இனத் துவேஷங்களை அள்ளி வீசுவதும் இணையம் மூலமாக பரவலாக நடைபெறுகின்றன. இவையெல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சமூகப் பிரிவினைகளை அடக்குதல், கல்வி, சமூக-பொருளாதாரத் தடைகளை உடைத்தெறிதல், ஒற்றுமையைப் பேணுதல் ஆகியவற்றை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் தொண்டு நிறுவன அமைப்புகளோடும் தனிநபர்களோடும் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமான முடிவுகளில், 1969-70 தேசிய ஆலோசனைக் கழகத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதைப் போன்று தேசிய கருத்துத்தொற்றுமையை உருவாக்கும் பொருட்டு நாம் சேர்ந்து பாடுபட வேண்டும்.
துன் ரசாக்கின் ஆன்மாவை அல்லாஹ் ஆசீர்வதித்து அவருக்கு ஜன்னாவில் இடமளிப்பாராக. சமூக நீதியை அடித்தளமாகக் கொண்டு ஒற்றுமையான, ஜனநாயகமான, பல்லின மக்களைக் கொண்ட, முற்போக்கான மலேசியாவை உருவாக்கும் துன் ரசாக்கின் தூர நோக்குக் கனவை நனவாக்கும் பொருட்டு அல்லாஹ் நமக்கு ஹிடாயா அளிப்பாராக.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இந்த நிகழ்வுக்கு நான் வருகை புரிந்ததன் மூலம் ஒரு மறக்க முடியாத தருணத்தை உருவாக்கிக் கொடுத்த தெங்கு ஹாரித் அசீஸ் மற்றும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.